

ஓல்டுடிராபோர்ட் மைதானம். இங்கிலாந்தின் மிகப்பழையான மைதானங்களில் ஒன்று. இங்குதான் நாளை இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடக்கப் போகிறது. ஏற்கனவே இங்கு 1999-ம் ஆண்டில் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்திய அணியே வென்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்தியர்களுக்கு இந்த மைதானம் எப்போதும் ராசியானதாகவே இருந்து வந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரரும ஜாம்நகரைச் சேர்ந்த ரஞ்சித் சிங் முதல் சதம்அடித்தது ஓல்ட்டிராபோர்டு மைதானத்தில்தான்.
இந்திய அணி தனது முதல் வெளிநாட்டு பயணத்தை 1936-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது இந்திய அணியின் சயத் முஷ்டாக் அலி, விஜய் மெர்சன்ட் ஆகியோர் இங்கு சதம் அடித்துள்ளார்கள்.
கடந்த 1959-ம் ஆண்டு அப்பாஸ் அலி தனது 20-வது வயதில் சதம் அடித்தார், கடந்த 1974-ம் ஆண்டில் சுனில் கவாஸ்கர் சதம் அடித்ததும் இங்குதான். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை இந்த மைதானத்தில்வைத்துதான் இந்திய அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் எஞ்சினியர் லங்காஷ்யர் அணிக்காக பலமுறை விளையாடி இங்கிலாந்து ரசிகர்களை கவர்ந்தவர்.
அதிலும் மான்செஸ்டர் நகரத்தில் ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய நாட்டவர்கள் வசிக்கிறார்கள்.
1. இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்கும் ஓல்டு டிராபோர்டு மைதானம் மிகப்பழமையானது. கடந்த 1884-ம் ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடைய முதல் டெஸ்ட் போட்டி இங்குதான் நடந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியும் 1972-ம் ஆண்டு இங்குதான் நடந்தது.
2. இதுவரை இந்த மைதானத்தில் 47 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் குறிப்பாக 1999-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி இங்கு தான் நடந்தது. அதில் 47 ரன்களில் இந்திய அணி வென்றது. ஆக 2-வது முறையாக இந்த மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் நடக்கப் போகிறது.
3. இந்த மைதானத்தில் இதுவரை டாஸ்வென்று முதலில் பேட்டிங் செய்த அணிகள் 40 சதவீதம் மட்டுமே வென்றுள்ளன. ஆனால், சேஸிங் செய்த அணிகள் 60 சதவீதம் வென்றுள்ளன.
4. டாஸ் வென்ற ஒரு அணியின் வெற்றி சதவீதம் 42.22, டாஸ் வென்ற அணி தோல்வி சதவீதம் 57.78. ஆதலால், டாஸ் இந்திய அணி வெல்லக்கூடாது என்று வேண்டிக்கொள்வோம்
5. 46 போட்டிகளி்ல் இதுவரை டாஸ்வென்ற அணிகள் 28 முறை முதலில் பேட்டிங் செய்துள்ளன. இதில் 10 முறை மட்டுமே வென்றுள்ளன. ஆனால், டாஸ்வென்று பீல்டிங் செய்த அணிகள் 9 முறை வென்றுள்ளன
6 ஒட்டுமொத்தமாக சேஸிங் செய்த அணிகள் 27 முறை வென்றுள்ளன, முதலில் பேட் செய்த அணிகள் 18 முறையும் வென்றுள்ளன.
7. இந்திய அணியைப் பொருத்தவரை கடந்த 2018-ம் ஆண்டில் 22 போட்டிகளில் 16 ஆட்டங்களில் சேஸிங் செய்துதான் வென்றுள்ளது. ஆதலால் இந்திய அணிக்கு சேஸிங் பெரிய விஷயமாக இருக்காது.
8. இந்த ஓல்டுடிராபோர்ட் மைதானத்தில் சராசரியாக 216 ரன்களும், அதிகபட்சமாக 256 ரன்கள்தான் அடிக்கும் அளவுக்கு குறைவான ஸ்கோர் செய்யும் ஆடுகளம். கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து இந்த மைதானத்தில் இதுவரை 10 ஆட்டங்கள் மட்டுமே நடந்துள்ளன.
9. இந்த மைதானத்தில் 3 முறை 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி 318 ரன்கள் குவித்தது. அதேபோல கடந்த 5 போட்டிகளில் ஒருமுறை மட்டுமே 300 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன
10. இந்த ஓல்ட்டிராபோர்ட் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு அதிகஅளவு ஒத்துழைக்காத மைதானம். ஆதலால், இந்த மைதானத்தில் இரு அணிகளும் பந்துவீச்சை பலப்படுத்துவதைக் காட்டிலும் பேட்டிங்கை பலப்படுத்திக்கொள்வது அவசியம். ஆதலால், கூடுதல் ஆல்ரவுண்டர் என்ற முறையில் விஜய் சங்கர் அணிக்குள் வரலாம்.
11. வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானம் என்பதால், இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக ஷமி இடம் பெறலாம். பாகிஸ்தானில் வகாப் ரியாஸ், ஷாகீன் அப்ரிடி, முகமது அமீர் கட்டாயம் இடம் பெறுவார்கள்.
12. இங்கு வேகப்பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 4 ரன்கள் விட்டுக்கொடுத்தலே சராசரியாக இருக்கிறது ஆனால், சுழற்பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 5 முதல் 6 ரன்கள் வரை விட்டுக்கொடுத்துள்ளார்கள். ஆதலால், வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.