

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா மகளிர் இரட்டையர் போட்டியில் தனது ஜோடியை மாற்ற முடிவு செய்துள்ளார்.
அதன்படி அடுத்த சீசனில் இருந்து சீன தைபேயின் சூ வி ஹெசியுடன் இணைந்து அவர் களமிறங்க இருக்கிறார். இதுவரை ஜிம்பாப்வேயின் காரா பிளாக்குடன் இணைந்து மகளிர் இரட்டையர் போட்டியில் சானியா பங்கேற்று வந்தார். ஆனால் இந்த ஜோடியால் பெரிய அளவில் வெற்றிகளை குவிக்க முடியவில்லை.
சானியாவுடன் ஜோடி சேர இருக்கும் ஹெசி, மகளிர் இரட்டையர் பிரிவு தரவரிசையில் முன்பு முதலிடத்தில் இருந்தவர்.
கடந்த சீசனில் சீனாவின் சுகாய் பெங்குடன் இணைந்து அவர் விளையாடி வந்தார். கடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியுடன் இந்த ஜோடி பிரிய முடிவெடுத்தது. இப்போது இந்த ஜோடி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள குறிப்பிடத்தக்கது.
இப்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு மகளிர் இரட்டையர் போட்டியில் ஹெசி தனது சகநாட்டு வீராங்கனை ஜானுடன் இணைந்து இந்தியாவின் சானியா – பிரார்த்தனா ஜோடியை அரையிறுதியில் வீழ்த்தியது. ஹெசி ஜோடி இறுதி ஆட்டத்தில் வென்று தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியது. சானியா ஜோடி வெண்கலம் வென்றது.
சானியா – காரா பிளாக் ஜோடியால் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்றாலும், வேறு சர்வதேச போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது. சமீபத்தில் டோக்கியோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா – காரா பிளாக் ஜோடி பட்டம் வென்றது. இந்த ஜோடி நடப்பு சீசனில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆண்டு இறுதியில் நடைபெறும் டபிள்யூடிஏ இரட்டையர் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. ஆண்டு இறுதி சாம்பியன்ஷிப் போட்டிக்கு சானியா தகுதி பெறுவது இதுவே முதல்முறை.
இந்த வார இறுதியில் பெய்ஜிங் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் சானியா – காரா பிளாக் ஜோடி களமிறங்க இருக்கிறது.
மகளிர் இரட்டையர் தரவரிசையில் சானியா இப்போது 7-வது இடத்தில் உள்ளார். கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 5-வது இடத்தில் இருந்தார். ஹெசி இப்போது 4-வது இடத்தில் உள்ளார். சானியாவும் ஹெசியும் 1986-ம் ஆண்டில் பிறந்தவர்கள். எனினும் ஹெசி சானியாவைவிட 8 மாதங்கள் மூத்தவர்.
அடுத்தது வரும் சீசனில் ஹெசியுடன் சானியா ஜோடி சேர இருக்கிறார். இந்த ஆசிய ஜோடி சர்வதேச போட்டிகளில் எந்த அளவுக்கு சாதிக்கும் என்பதை காண டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.