இந்தியா மீதான தடை நீக்கம்: மத்திய அரசின் உறுதிமொழிக்குப் பின் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை

இந்தியா மீதான தடை நீக்கம்: மத்திய அரசின் உறுதிமொழிக்குப் பின் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை
Updated on
2 min read

இந்தியாவில் எந்தவிதமான சர்வதேச போட்டிகளும் நடத்த தடை விதித்திருந்த நிலையில், மத்திய அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து அந்த தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி(ஐஓசி) அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இரு வீரர்களுக்கு இந்திய அரசு விசா வழங்க மறத்துவிட்டது. இது விதிமுறைகளுக்கு மாறானது என்று கண்டித்த ஐஓசி, இந்தியாவில் எந்தவிதமான சர்வேதச போட்டிகளும் நடத்த தடை விதித்தது.  

அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பைப் போட்டியில் 25மீட்டர் ரேபிட் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் பிரிவையும் ரத்து செய்தது.

புல்வாமாவில் பாகிஸ்தான்  ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு டெல்லியில் உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டி நடந்தது. அதில் பங்கேற்க  வந்திருந்த கொசாவோ நாட்டு வீராங்கனைகளுக்கும் விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. கொசாவோ நாட்டுடன் நட்புறவு இல்லை என்பதால், விசா வழங்க முடியாது எனத் தெரிவித்தது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் , இந்திய ஒலிம்பிக் அமைப்பு பலசுற்றுப் பேச்சுக்களை நடத்தியது. இந்த  பேச்சின் முடிவில் மத்திய அரசு இனிவரும் காலங்களில் எந்த நாட்டு வீரர்களுக்கும் விசா வழங்க மறுக்கமாட்டோம் என உறுதிமொழி அளித்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன், இந்திய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் பத்ராவிடம், மத்திய விளையாட்டுத்துறை செயலர் ராதே ஷியாம் ஜுலனியா எழுத்துபூர்வமாக உறுதி மொழி அளித்தார். அதில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வரும் தகுதி படைத்த, ஐஓசி அங்கீகரித்த வீரர்களுக்கு விசா வழங்கப்படும். அவ்வாறு வரும் வீரர்கள் மீது எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்ச்சியும், பாரபட்சமும் காட்டமாட்டோம் " என தெரிவிக்கப்பட்டது

இந்த உறுதிமொழிக் கடிதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் வழங்கப்பட்டபின் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழுத் தலைவர் மெக்லியோட் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், " இந்திய அரசு அளித்த உறுதிமொழி எங்களுக்கு முழுமையாக மனநிறைவு அளிக்கிறது. இந்தி்ய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் நரேந்திர பத்ரா அளித்த கடிதம் எங்களுக்கு கிடைத்தது. இந்தியாவில் எந்தவிதமான சர்வதேச போட்டிகளும் நடத்தக்கூடாது என்று கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி  விதிக்கப்பட்டு இருந்த தடை உடனடியாக நீக்கப்படுகிறது " எனத் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in