

மான்செஸ்டரில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பல சாதனை படைத்தார்.
17 சிக்ஸர்கள்
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 71 பந்துகளில் 148 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் மொத்தம் 17 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிகமான சிக்ஸர் அடித்த வீரர் எனும் புதிய சாதனையை மோர்கன் படைத்தார்.
இதற்கு முன் ஒரு இன்னிங்ஸில் 16 சிக்ஸர்கள் அடித்து ரோஹித் சர்மா, கெயில், டிவில்லியர்ஸ் சாதனை படைத்திருந்தனர். அதை மோர்கன் முறியடித்தார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டியில் மோர்கன் தனிப்பட்ட முறையில் 210 சிக்ஸர்களை அடித்து அதிக சிஸ்கர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 6-து இடத்தில் உள்ளார்.
4-வது அதிவேக சதம்
உலகக் கோப்பைப் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 57 பந்துகளில் சதம் அடித்து 4-வது இடத்தை மோர்கன் பிடித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதம் அடித்ததே இன்று அதிவேக சதமாக இருந்து வருகிறது. மோர்கனுக்கு ஒருநாள் அரங்கில் இது 13-வது சதம் மற்றும் உலகக் கோப்பைப் போட்டியில் முதல் சதமாகும்.
25 சிக்ஸர்கள்
இங்கிலாந்து அணி இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக 25 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தது. இதற்கு முன் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 24 சிக்ஸர்கள் அடித்து சாதனை வைத்திருந்த இங்கிலாந்து அதை முறியடித்துள்ளது. மேலும் உலகக் கோப்பைப் போட்டியில் கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 22 சிக்ஸர்கள் அடித்திருந்தது, அதை இந்த ஆட்டத்தில் 25 சிக்ஸர்கள் அடித்து முறியடித்தது.
110 ரன் கொடுத்த ரஷித் கான்
ரஷித் கான் இந்த ஆட்டத்தில் 9 ஓவர்கள் வீசிய ரஷித் கான் 16 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை அடிக்கவிட்டு 110 ரன்கள் விட்டுக்கொடுத்து உலகக் கோப்பைப் போட்டியில் மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நியூஸிலாந்து வீரர் மார்டின் ஸ்னீடன் 12 ஓவர்களில் 105 ரன்கள் விட்டுக்கொடுத்தார் அதற்கு அடுத்த இடத்தில் ரஷித்கான் உள்ளார்.
7 சிக்ஸர்கள்
ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக உலகக் கோப்பையில் 6 சிக்ஸர்கள் அடிக்கவிட்டதே அதுவரை சாதனையாக இருந்தது. ஹோல்டர் பந்துவீச்சில் டிவில்லியர்ஸ் அடித்திருந்தார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் ரஷித் கானின் ஒட்டுமொத்த ஓவரில் மோர்கன் மட்டும் 7 சிக்ஸர்களை வெளுத்துவாங்கி மோசமான சாதனையை ரஷித்துக்கு பரிசளித்துவிட்டார். ரஷித்கானின் இன்றைய எகானமி ரேட் 12.22. இதில் ஒட்டுமொத்தமாக 11 சிக்ஸர்கள் ரஷித் கான் ஓவரில் அடிக்கப்பட்டன. 1999-ம் ஆண்டுக்குப்பின் உலகக்கோப்பைப் போட்டியில் மோசமான பந்துவீச்சுஇதுவாகும்.
22 சிக்ஸர்கள்
இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடர் தொடங்கியதில் இருந்து மோர்கன் இதுவரை 22 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
4-வது பெரிய ஸ்கோர்
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் சேர்த்ததே உலகக் கோப்பைப் போட்டியில் 6-வது மிகப்பெரிய ஸ்கோராகும். இதற்கு முன் உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் 386 ஆக இருந்தது, அந்த சாதனையை அந்த அணியே முறியடித்துக்கொண்டது