Published : 08 Jun 2019 08:18 PM
Last Updated : 08 Jun 2019 08:18 PM

ஜேசன் ராய் அதிரடி சதம்; பட்லர் பவர்: உலகக்கோப்பையில் 7வது மிகப்பெரிய ரன் எண்ணிக்கை: இங்கிலாந்து 386 ரன்கள் குவிப்பு

கார்டிப் உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்று எந்த அடிப்படையில், சிந்தனையில் வங்கதேச கேப்டன் மோர்டசா முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தாரோ தெரியவில்லை.. முதல் 4-5 ஓவர்கள்தான் நிதானம்.. அதன் பிறகு இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ஒன்றுமில்லாத வங்கதேசப் பந்து வீச்சை மைதானத்தின் நாலாப்பக்கமும் சிதற அடித்து விரட்ட வழியேயில்லாத 386 ரன்களை குவித்தனர்.

 

ஜேசன் ராய் 121 பந்துகளில் 14 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 153 ரன்களை வெளுத்துக் கட்டினார்.  பேர்ஸ்டோ 51 ரன்களையும் ஜோஸ் பட்லர் 64 ரன்களையும் சாத்தி எடுக்க  இயான் மோர்கன் கொஞ்சம் அடக்கி வாசித்த இன்னிங்சில் 35 ரன்களை எடுக்க, கடைசியில் கிறிஸ் வோக்ஸ் 8 பந்துகளில் 18 ரன்களையும் லியாம் பிளங்கெட் 9 பந்துகளில் 27 ரன்களையும் எடுத்து ஏற்கெனவே அந்து நொந்து நூலான வங்கதேச பந்து வீச்சு என்ற துணியை முற்றிலும் கிழித்துத் தொங்கப்போட்டனர். 50 ஓவர்களில் 7 விக்க்கெட்டுகள் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.

 

ஜேசன் ராய், இவர் ஆடுவதைப் பார்த்தால் சேவாகை நினைவூட்டுகிறது, குறிப்பாக கவர் ட்ரைவ், லெக் திசையில் ஆடும் ஹை பிளிக்குகள், கட் ஷாட்டுகள் உண்மையில் சேவாகை நினைவூட்டுகிறது, என்ன சேவாக் இவ்வளவு நேரம் நிற்க மாட்டார்.. இவர் நிற்கிறார். ராய் 121 பந்துகளில் 5 சிக்சர்கள், 14 பவுண்டரிகளை விளாசினார். அதுவும் அவுட் ஆவதற்கு முன் மெஹதி ஹசன் மிராஸ் இவரை ஒரு ஓவரில் கட்டுப்படுத்தி 4 ரன்களே கொடுக்க பெரிய கடுப்பாகி விட்டார் ஜேசன், அடுத்ததாக மெஹதி மாட்டிய போது தொடர்ச்சியாக ஹாட்ரிக் சிக்ச்ர்களை விளாசினார், ஆனால் 4வது சிக்சர் முயற்சியில் கேட்ச் ஆகி 153 ரன்களில் வெளியேறினார்.

 

இவர் இரண்டு முக்கியக் கூட்டணிகளை அமைத்தார். ஜானி பேர்ஸ்டோவுடன் முதல் விகெட்டுக்காக 128 ரன்களையும், ஜோ ரூட் (21) உடன் இணைந்து 2வது விக்கெட்டுக்காக 77 ரன்களையும் சேர்த்தார்.

 

பட்லர் அதன் பிறகு 44 பந்துகளில் 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என்று 64 ரன்கள் எடுத்தார்.  இவர் மோர்கனுடன் (35) இணைந்து 95 ரன்களைச் சேர்த்தார். முதன் முதலாக இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து 350+ இலக்கை எடுத்தது.

 

வங்கதேசத்தில் வேகப்பந்து (!) வீச்சாலர் சைபுதின் 2 விக்கெட்டுகளை 78 ரன்களுக்கு எடுக்க, மெஹதி ஹசன் மிராஸ் 67 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷாகிப் அல் ஹசன் 10 ஓவர்களில் 71 ரன்கள் விளாசப்பட்டார். இடது கை கட்டர்ஸ் வீச்சாளர் முஸ்தபிசுர் 9 ஓவர் 75 ரன்கள் 1 விக்கெட் என்று வாங்கிக் கட்டிக் கொண்டார். மொசாடெக் ஹுசைன் 2 ஒவர் 24 ரன்கள், போதும்டா சாமி என்று நிறுத்தப்பட்டார்.

 

மஷ்ரபே மோர்டசா டாஸ் வென்று கூறிய போது முதல் ஒரு மணி நேரம் பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் அதில் சில விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்றார், ஆனால் இவர் தன் உடம்பைத் தூக்கிக்கொண்டு வீசுவதைப் பார்த்த போது ‘அதுக்கெல்லாம் மணிக்கு 145-150 கிமீ வேகம் வேண்டும்... 125-130 போதாது’ என்று கூற வேண்டும் போல் இருந்தது, இதில் ஏகப்பட்ட மிஸ்பீல்டிங்குகள் வேறு.

 

ஜோப்ரா ஆர்ச்சர், பிளங்கெட், வோக்ஸ், மார்க் உட் ஆகிய வேகப்பந்து வீச்சுக்கு எதிராக இலக்கையெல்லாம் விரட்ட முடியாது, வங்கதேசம் பேசாமல் நல்ல பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டு அடுத்த மேட்சுக்குத் தயாராவது நல்லது.

 

உலகக்கோப்பைப் போட்டியே பயிற்சி ஆட்டமாக யாருக்கு அமையும்? கொடுத்து வைத்தவர்கள்தானே வங்கதேச அணியினர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x