Published : 01 Jun 2019 10:32 AM
Last Updated : 01 Jun 2019 10:32 AM

தொப்பையோடு இருக்கும் தகுதியற்ற கேப்டன்: பாக். கேப்டனை வறுத்தெடுத்த முன்னாள் வீரர்

உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான தோல்வி அடைந்த பாகிஸ்தானையும், கேப்டன் சர்பிராஸ் அகமதுவையும் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கி வருகிறது. நாட்டிங்ஹாமில் நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில், பாகிஸ்தானும், மேற்கிந்தியத்தீவுகள் அணியும் மோதின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் மோசமான பேட்டிங்கால் ஆட்டம் சுவாரஸ்யம் இன்றிஅமைந்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசம், பக்கர் ஜமான் தலா 22 ரன்கள் சேர்த்தனர்.

மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் ஓஸ்னோ தாமஸ் 4 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஸல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

106 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. கெயில் அதிரடியாக ஆடி 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணி அடைந்த மோசமான தோல்வி அந்நாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்களாள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதங்களில் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு ரசிகர்கள் காட்டமாக பேசிவருகிறார்கள்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் ட்விட்டரில், பாக் கேப்டன் சர்பிராஸ் முகமதுவை கடுமையாக பேசியுள்ளார். அதில் " சர்பிராஸ் அகமது டாஸ் போடுவதற்கு வரும்போது, அவரின் வயிற்றுப்பகுதி வெளியே தள்ளிக்கொண்டு தொப்பையுடன் நின்றிருந்தார். அவரின் முகம் வீங்கி, குண்டாக இருந்தத. நான் பார்த்தவரை உடற்தகுதியில்லாத கேப்டன் சர்பிராஸ் அகமதுவாகத்தான் இருப்பார். அவரால் வேகமாக ஓடக்கூடிய முடியாது, விக்கெட் கீப்பிங் பணியையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. " என விமர்சித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டில் " இந்த தோல்வியை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. பேச்சற்று இருக்கிறேன். நமது நாட்டுக்காக விளையாடும் நமது அணியினருக்கு நாம் தொடர்ந்து உலகக்கோப்பை முழுவதும் ஆதரவு அளிப்பது அவசியம்.

பாகிஸ்தான் அணியின் ஆட்டம் இந்த போட்டியில் மோசமாக இருந்தது. அவர்களை அதிகமாக நோகடிக்காமல், உற்சாகம் அளிக்க வேண்டும் " என அக்தர் தெரிவித்துள்ளார்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x