Published : 27 Jun 2019 08:21 AM
Last Updated : 27 Jun 2019 08:21 AM

மேற்கிந்தியத் தீவுகளுடன் இன்று மோதல்; இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடருமா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 ஆட்டங்களில் 4 வெற்றி, ஒரு ஆட்டம் ரத்து என 9 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றால் போதும் என்ற சூழ்நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்ற விராட் கோலி படை, கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போராடி வெற்றி பெற்றது.

மந்தமாக அமைக்கப்பட்டிருந்த ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இந்திய அணி 224 ரன்களே எடுத்தது. குறைந்த அளவிலான இலக்கை கொடுத்த போதிலும் கடைசி ஓவரில் மொகமது ஷமிஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதால் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது இந்திய அணி.

வலுவான அணிகளுக்கு எதிராக இந்தியஅணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சிறந்த திறனை வெளிப்படுத்திய நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சுழலில் ஆட்டம் கண்டிருந்தது. மேலும் நடுவரிசையில் விஜய் சங்கர், தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறினர்.

இதில் தோனி 52 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்கள் சேர்த்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவரது ஆட்ட அணுகுமுறை குறித்துபல்வேறு தரப்பினரும் விமர்சன கணைகளை தொடுத்தனர். சச்சின் டெண்டுல்கர் கூட தோனியின் ஆட்டத்தில் நேர்மறையான நோக்கம் இல்லை என கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் தோனி மீண்டும் ஒரு முறை நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கிடையே இன்றைய ஆட்டத்தில் தோனியின் பேட்டிங் வரிசை மாற்றி அமைக்கப்படக்கூடும் என தெரிகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிரதான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை. அந்த அணியானது வேகம் மற்றும் மிதவேகப்பந்து வீச்சாளர்களையே அதிகளவில் கொண்டுள்ளது.

இந்த வகையிலான பந்து வீச்சுக்கு எதிராக தோனி, ஸ்டிரைக்கை சிறப்பாக ரொட்டேட் செய்யும் திறன் கொண்டவர். இதனால் இன்றைய ஆட்டத்தில் தோனியிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோல் ஷாட்களில் புதுமைகளை புகுத்தக்கூடிய திறன் கொண்ட கேதார் ஜாதவின் பேட்டிங் வரிசையும் மாற்றியமைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

 இந்தத் தொடரில் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு வெவ்வேறு பேட்டிங் வரிசையில் களமிறங்கி வரும் ஹர்திக் பாண்டியா, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மறுமுனையில் சரியான ஆதரவு கிடைக்காததால் விரைவு கதியில் விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தார். ஹர்திக் பாண்டியா சற்று நிலைத்து நின்று விளையாடும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும்.

4-வது வரிசையில் களமிறங்கி வரும் விஜய் சங்கருக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டு ரிஷப் பந்த்தின் திறனை இந்திய அணி நிர்வாகம் சோதித்துப் பார்க்க வாய்ப்புள்ளது. டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மட்டையை கிடைமட்டமாக செலுத்தி விளை

யாடும் திறன் கொண்டவர்கள். இவர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஷாட் பிட்ச் பந்துகளை சிறப்பாக கையாண்டால் பெரிய அளவிலான ஸ்கோரை குவிக்க முடியும், எட்டவும் முடியும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றியில் பிரதான பங்கு வகித்த மொகமது ஷமியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த பந்து வீச்சு வெளிப்படக்கூடும். இதேபோல் இறுதிக்கட்ட ஓவர்களில் அசத்தும் ஜஸ்பிரித் பும்ராவும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளார்.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என 3 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றாலும் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது சந்தேகம்தான்.

அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசியாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரசிகர்களின் இதயங்களை நொறுங்கச் செய்யும் வகையில் 5 ரன்களில் வெற்றியை நழுவ விட்டிருந்தது. இந்த ஆட்டத்தில் கார்லோஸ் பிராத் வெயிட் 82 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசி மிரள வைக்கக்கூடிய அளவிலான வெற்றியை நோக்கி அணியை கொண்டு சென்றார். ஆனால் 6 பந்துகள் மீதம் இருந்த நிலையில் ஆட்டமிழந்து தனது போராட்ட இன்னிங்ஸுக்கு அவரே பலன் கிடைக்காமல் செய்துவிட்டார்.

தனிப்பட்ட முறையில் வீரர்கள் சிறப்பாகசெயல்படும் வேளையில் ஒருங்கிணைந்த அணியாக செயல்பட்டு உயர் செயல்திறனைவெளிப்படுத்துவதில் மேற்கிந்தியத் தீவுகள்அணி தேக்கம் காண்பது பலவீனமாக உள்ளது. ஆல்ரவுண்டரான ஆந்த்ரே ரஸ்ஸல்காயம் காரணமாக தொடரில் இருந்துவிலகியிருப்பது அணியின் ஸ்திரத்தன்மையை மேலும் பாதிக்கக்கூடும். பந்துவீச்சை பொறுத்த வரையில் ஷெல்டன் காட்ரெல், ஓஷன் தாமஸ் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், மகேந்திர சிங் தோனி, ரிஷப் பந்த், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்.

மேற்கிந்தியத் தீவுகள்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெயில், ஷாய் ஹோப், எவின் லீவிஸ், ஆந்த்ரே ரஸ்ஸல்,  சிம்ரன் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், டேரன் பிராவோ, ஆஷ்லே நர்ஷ், கார்லோஸ் பிராத்வெயிட், பேபியன் ஆலன், கேமார் ரோச், ஓஷன் தாமஸ், ஷானோன் கேப்ரியல், ஷெல்டன் காட்ரெல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x