எங்களை விமர்சியுங்கள், அத்துமீறாதீர்கள்: ரசிகர்களிடம் பாக். கேப்டன் வேண்டுகோள்

எங்களை விமர்சியுங்கள், அத்துமீறாதீர்கள்: ரசிகர்களிடம் பாக். கேப்டன் வேண்டுகோள்
Updated on
2 min read

எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி தனிப்பட்ட முறையில் தாக்காதீர்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 16-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டம் ஓல்டுடிரா போர்டு மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்களில் இந்திய அணி வென்று தொடர்ந்து 7-வது முறையாக உலகக்கோப்பையில் வென்ற அணி என்ற பெருமையை தக்கவைத்தது.

இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது, அந்நாட்டு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் வரவழைத்தது. இதனால், சமூக ஊடகங்களில் தங்கள் நாட்டு வீரர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர். சிலர் எல்லை மீறி தனிப்பட்ட முறையில் காட்டமாக வார்த்தைகளைப் பதிவு செய்தனர்.

இந்த போட்டி முடிந்து சில நாட்களுக்குப்பின் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தனது குழந்தையுடன் லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்றார். அப்போது ஒரு பாகிஸ்தானிய ரசிகர், சர்பிராஸ் அகமது செல்லும்போது, அவர் அருகே கேமிராவை வைத்துக்கொண்டு அவரை நிறுத்தி, "ஏன் கொழுத்த பன்றி" போன்று இருக்கிறார் என்று வரம்பு மீறி கேள்வி கேட்டு அந்த வீடியோவை பதிவிட்டார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானாலும், பலரும் அந்த ரசிகரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால், அந்த ரசிகர் பின்னர் மனம் வருந்தி மன்னிப்பு கோரி இருந்தார்.

இந்த சூழலில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது ரசிகர்களின் செயல்பாடு குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், " அந்த ரசிகர் என்னைப் பற்றி அவதூறாகப் பேசியது குறித்து என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. மக்கள் எங்களைப் பற்றியும், என்னைப் பற்றியும் என்ன சொல்கிறார்கள் என்பதை தடுக்கும் சக்தி எங்களிடம் இல்லை. விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் இயல்பு. நாங்கள் முதன்முதலி்ல போட்டியில் தோற்கவில்லை. எங்களுடன் மோதிய அணியும் இதற்கு முன் தோல்வி அடைந்துள்ளது.

இதற்கு முன் ரசிகர்கள் எங்களை விமர்சனம் செய்ததை எதிர்கொண்ட போது, நாங்கள் எந்த அளவுக்கு மனது புண்பட்டிருப்போம் என்பதை உணரமுடிகிறதா. இப்போது சமூக ஊடகங்களில் பலரும் தங்களுக்கு விருப்பப்பட்ட கருத்துக்களை பதிவு செய்கிறார்கள், சொல்கிறார்கள். இதுபோன்ற ரசிகர்கள் தங்களின் மனதில் தோன்றும் விஷமத்தனமான கருத்துக்களை பேசும்போது, அது வீரர்களின் மனநிலையை பாதிக்கிறது. எங்கள் விளையாட்டை விமர்சியுங்கள், ஆனால், அத்துமீறி, தனிநபர் தாக்குதலில் ஈடுபடாதீர்கள் " எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் பாகிஸ்தான் வீரர்கள் ஷோயிப் மாலிக், முகமது அமீர் ஆகியோரும், ரசிகர்களிடம் வரம்பு மீறி விமர்சிக்காதீர்கள், குடும்பத்தினரை மரியாதை குறைவாக பேசாதீர்கள்  என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in