ஹாட்ரிக் பந்தில் இருவருமே லெக் ஸ்டம்பைப் பெயர்த்தோம்: ஹாட்ரிக் ஷமிக்கும் தனக்குமான ஒற்றுமை குறித்து சேத்தன் ஷர்மா நெகிழ்ச்சி

ஹாட்ரிக் பந்தில் இருவருமே லெக் ஸ்டம்பைப் பெயர்த்தோம்: ஹாட்ரிக் ஷமிக்கும் தனக்குமான ஒற்றுமை குறித்து சேத்தன் ஷர்மா நெகிழ்ச்சி
Updated on
2 min read

1987 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் ஷர்மா எடுத்த ஹாட்ரிக் ஏறக்குறைய இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இப்போதைய தலைமுறையினரின் கவனத்துக்கு வந்திருப்பது அன்று ஆப்கானுக்கு எதிராக மொகமட் ஷமி எடுத்த ஹாட்ரிக்கினால் என்றால் மிகையாகாது.

சேத்தன் ஷர்மா மிகவும் உணர்வுபூர்வமான கிரிக்கெட் வீரர், இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கபில் தலைமையில் 2-0  என்று வெல்வதற்கு இவரது வேகப்பந்து வீச்சும் ஒரு முக்கியக் காரணம். இவர் ஒருமுறை கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மண்ட் ஹைன்ஸ் இருவரையும் பவுல்டு செய்ய அடுத்து இறங்கிய விவ் ரிச்சட்ர்ஸ் தன் வாழ்நாளில் முதல் முறையாக தான் ஒரு வேகப்பந்து வீச்சாளரை கவனமாக ஆட வேண்டும் என்று நினைத்தது சேத்தன் ஷர்மாவைத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருமுறை இவர் பவுண்டரியில் பந்தை மிஸ் பீல்ட் செய்ய கேப்டன் கபில்தேவ் அதில் கடுப்பாகி மிஸ்பீல்டைக் கண்டிக்குமாறு கோபத்துடன் கேலியாகக் கைதட்டினார், இதில் சேத்தன் சர்மா ஆஸ்திரேலிய மைதானத்தில் எல்லைக்கோட்டருகிலேயே கண்ணீர் விட்டு அழுததும் நடந்துள்ளது.

சேத்தன் ஷர்மா என்றாலே ஷார்ஜாவில் ஜாவேத் மியாண்டட் அந்த கடைசி பந்தை சிக்ஸ் அடித்ததுதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும், ஆனால் அவர் அதையெல்லாம் தாண்டிய ஒரு உணர்வு பூர்வ இந்திய கிரிக்கெட் வீரர் என்பதுதான் அவர் காலத்திய கிரிக்கெட்டை இப்போதைய தலைமுறையினரை விடவும் உணர்வுபூர்வமாகப்பார்த்தவர்களுக்குத் தெரிந்த அனுபவம்.

இந்நிலையில் மொகமட் ஷமி மூலம் தன் பெயர் தெரியவந்திருப்பது குறித்து அவர் ஆங்கில ஊடகம் ஒன்றில் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:

பல ஆண்டுகளுக்கு முன்பாக நான் செய்த சாதனையை நம் நாட்டு வீரர் ஒருவரே மீண்டும் செய்வது மிகப்பெரிய நல்லுணர்வைத் தோற்றுவிக்கிறது. ஷமி அன்று 3வது விக்கெட்டை எடுத்தவுடன் 32 ஆண்டுகளுக்கு முன்பாக நாக்பூர் மைதானத்துக்கு என் நினைவுகள் மாறின.

இப்போதைய தலைமுறையினருக்கு நான் என்ன சாதித்திருக்கிறேன் என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் இப்போது அவர்களுக்குத் தெரிந்திருப்பது ஷமி மூலம்தான் ஆகவே ஷமிக்கு நன்றி. இப்போது அவர்களுக்குத் தெரியும் உலகக்கோப்பை முதல் ஹாட்ரிக் சாதனை புரிந்தவன் ஒரு இந்தியன் என்பது.

அப்போது உலகமே என் காலடியில் கிடந்ததாக உணர்ந்தேன், அடுத்தப் போட்டியான அரையிறுதிக்கு நான் விமானத்தில் ஏறிய போது பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் புரிந்து என்னை பாராட்டினார்கள். மறக்க முடியாத கணம் அது. அதை நினைத்தாலே இப்போதும் எனக்கு மெய்சிலிர்க்கிறது.

நாங்கள் இருவரும் வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள், ஹாட்ரிக் விக்கெட்டில் இருவருமே லெக் ஸ்டம்பைப் பெயர்த்தோம். ஆம் இருவருக்கும் தாடியும் ஒரு ஒற்றுமை.

இவ்வாறு நெகிழ்ச்சியுடன் கூறினார் சேத்தன் ஷர்மா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in