ஷிகர் தவண் காயம்: உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகலா?

ஷிகர் தவண் காயம்: உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகலா?
Updated on
1 min read

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவண் தனது இடது கை கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால் இந்தியா ஆடும் அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார்.

மேலும் அவரது காயம் தீவிரமானது என மருத்துவப் பரிசோதனையில் உறுதியானால், அவர் மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தவணின் கட்டை விரலில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்று வாரங்கள் வரை அவருக்கு ஓய்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயம் குணமாக ஒரு மாதம் வரை ஆகும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை ஜூலை 14 அன்று நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற ஷிகர் தவணின் அதிரடி சதம் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. ஆட்டநாயகனாகவும் தவண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஆட்டத்தில் தான், கம்மின்ஸ் வீசிய பந்து தவணின் இடது கை கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி பந்துவீசும் போது தவணுக்கு பதில் ரவீந்திர ஜடேஜாவே ஃபீல்டிங் செய்தார்.

இந்தியாவின் அடுத்த போட்டி வியாழக்கிழமை அன்று நியூஸிலாந்துக்கு எதிராக நடக்கவுள்ளது. இதில் தவணுக்கு[ பதில் ரிஷப் பந்த் அல்லது அம்பாதி ராயுடு சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில், 4-ம் வீரராக பேட்டிங் ஆடுவதில் அனுபவம் பெற்ற ஷ்ரேயஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டிருக்கும் தவணின் ஆரோக்கியம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வந்த பிறகே மாற்று வீரருக்கான முடிவை பிசிசிஐ எடுக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in