9-வது சதமடித்தார் ஜேசன் ராய்: இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்து திணறும் வங்கதேசம்
கார்டிப்பில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 12வது போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் சதமடித்தார், இது அவருடைய 9வது ஒருநாள் சதமாகும்.
ஆட்டத்தின் 27வது ஓவரில் முஸ்தபிசுர் ரஹ்மான் பந்தை புல்ஷாட்டில் பீல்டரின் மிஸ்பீல்டில் பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 93 பந்துகளில் சதமெடுத்து தற்போது 101 ரன்களுடன் ஆடிவருகிறார். இதில் 12 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடங்கும்.
இன்னொரு முனையில் ஜோ ரூட் 18 ரன்களுடன் ஆடி வருகிறார்.
முன்னதாக ஸ்பின்னர் ஷாகிப் அல் ஹசனுடன் பந்து வீச்சை மோர்டசா தொடங்க நிதானம் காட்டிய பேர்ஸ்டோ, ராய் ஜோடி பிறகு வெளுத்து வாங்கத் தொடங்கியது. 19 ஓவர்களில் 128 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்த பிறகு 6 பவுண்டரிகளுடன் 50 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்த பேர்ஸ்டோ, மோர்டசா பந்தில் மெஹதி ஹசன் மிராசின் அபாரமான கேட்சுக்கு பெவிலியன் திரும்பினார்.
தற்போது 28 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 174/1 என்று அபாயகரமான அடித்தளம் அமைத்துள்ளது.
ஷாகிப் 7 ஓவர்கள் வீசிவிட்டார், மோர்டசா 8 ஓவர்கள் வீசிவிட்டார். கடைசி ஓவர்களை வீசப்போவது யார் என்ற கேள்வி எழுகிறது, முஸ்தபிசுர் வீசி வருகிறார், சைபுதின் பந்து வீச்சு பிரித்து எடுக்கப்பட்டு அவர் 4 ஓவர்கலில் 40 ரன்களைக் கொடுத்துள்ளார். மெஹதி 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டி வருகிறார்.
வங்கதேச பீல்டிங் சொல்லிக் கொள்ளும்படியில்லை, ஏகப்பட்ட மிஸ்பீல்ட்கள்.
