

பாகிஸ்தான் வீரரும், தனது கணவருமான ஷோயிப் மாலிக்குடன் ஹோட்டலில் அமர்ந்திருந்த சானியா மிர்சா குறித்து கருத்து பதிவிட்ட பாகிஸ்தான் நடிகைக்கு சானியா கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
மான்செஸ்டரில் நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்களில் இந்திய அணி 7-வது முறையாக தோற்கடித்தது. இந்த தோல்விக்குப்பின் அந்த அணி வீரர்களை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக ஊடகங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே போட்டி நடக்கும் முதல் நாள் இரவு பாகிஸ்தான் மூத்த வீரரும், கணவருமான ஷோயிப் மாலிக்குடன், ஒரு நட்சத்திர ஹோட்டலில் சானியா மிர்சா அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது.
போட்டி நடப்பதற்கு முதல்நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று பீட்ஸா, பர்க்கர் போன்ற உணவுகளை சாப்பிட்டார்கள் என்று தகவல் வெளியானது இதனால், போட்டியில் மந்தமாகச் செயல்பட்டார்கள் என்று விமர்சிக்கப்பட்டது.
இதுகுறித்து பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் , சானியா மிர்சாவுக்கு ட்விட் செய்துள்ளார். அதில், " சானியா, நான் உங்கள் குழந்தையை நினைத்து உண்மையில் வருத்தப்படுகிறேன். உங்கள் குழந்தையை ஷீசா பேலஸ் போன்ற துரிதஉணவுகள் கிடைக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறீர்களே அது உடலுக்கு கெடுதி என்பது தெரியாதா. எனக்குத் தெரிந்தவரை சிறுவர்கள், குழந்தைகள், விளையாட்டு வீரர்களின் உடல்நலத்துக்கு துரித உணவுகள் கேடு விளைவிப்பவை . நீங்கள் ஒரு குழந்தைக்கு தாய் மட்டுமல்லாது, விளையாட்டு வீராங்கனை என்பதால், உங்களுக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து சானியா மிர்சா ரீட்வீட் செய்துள்ளார். அவர் கூறுகையில், " வீணா, நான் என்னுடைய குழந்தையை துரித உணவுகள் கிடைக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லவில்லை. இதைப்பற்றி நீங்களோ மற்றவர்களோ கவலைப்படுவது வேலையல்ல. அனைவரைக் காட்டிலும் என்னுடய மகனின் உடல்நிலையை நான் கவனமாகப் பராமரிக்கிறேன். இரண்டாவதாக நான் பாகிஸ்தான் அணியின் டயட்டீசியனும் அல்ல, அவர்களின் தாயும் அல்ல, ஆசிரியரும் அல்ல என்பதை உணருங்கள். நான் எப்போது எழுந்திருக்கிறேன், எப்போது தூங்குகிறேன், என்ன சாப்பிடுகிறேன் என உங்களுக்கு தெரியுமா. என் மீதான அக்கறைக்கு நன்றி " எனத் தெரிவித்துள்ளார்.