பேட்டிங் மந்திரத்தை மறந்ததால் தோல்வி;அரையிறுதிக்கு தகுதிபெறுவோம்: மோர்கன் நம்பிக்கை

பேட்டிங் மந்திரத்தை மறந்ததால் தோல்வி;அரையிறுதிக்கு தகுதிபெறுவோம்: மோர்கன் நம்பிக்கை
Updated on
2 min read

எங்களின் வழக்கமான அட்டாக்கிங் பேட்டிங் எனும் மந்திரத்தை மறந்ததால்தான் கடந்த இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்தோம். அரையிறுதிக்குள் செல்வோம் என்று நம்புகிறோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் எயிந் மோர்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நேற்று லாட்ஸ்மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 64 ரன்களில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி.

இதுவரை 4 போட்டிகளில் வென்றுள்ள இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் செல்ல மூன்று வெற்றிகள் அவசியம், தற்போது ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக இந்தியா, நியூஸிலாந்து அணிகளை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இலங்கை அணியிடம் தோற்றதும், அடுத்தபோட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்ததும் இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டுக்குப்பின், இங்கிலாந்து அணி தனது சொந்த  மண்ணில் தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைவது இதுதான் முதல் முறையாகும்.உலகக் கோப்பைப் போட்டி தொடங்கியதில் இருந்து இங்கிலாந்து அணி அனைத்துப் போட்டிகளிலும் தொடக்கத்தில் இருந்தே எதிரணிகளை கட்டுக்குள் வைக்கும் வகையில் அட்டாக்கிங் கேம்மை கையில் எடுத்து ஆடிவந்தது. இதனால், தொடர் வெற்றிகளைப் பெற்றது. ஆனால், இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த பேட்டிங் மந்திரத்தை கையில் எடுக்காததன் விளைவு தோல்வியில் முடிந்துள்ளது.

இதேக் கருத்தைத்தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கனும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்திலும், இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் எங்களின் அடிப்படை பேட்டிங் மந்திரமான, அட்டாக்கிங் பேட்டிங்கை மறந்துவிட்டு செயல்பட்டோம். அதுதான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று கருதுகிறேன்.

அதுமட்டுமல்லாமல் கடந்த இருபோட்டிகளிலும் வலிமையான பாட்னர்ஷிப் அமையாததும் பெரிய பின்னடைவு. அதிலும் 230 ரன்கள் மற்றும் 280 ரன்களை சேஸிங் செய்ய முடியால் நாங்கள் தோற்றது வேதனையாக இருக்கிறது. கடந்த 2ஆண்டுகளாக எங்களின் பேட்டிங்கைப் பார்த்தால், நாங்கள் அட்டாக்கிங் பேட்டிங்கைத்தான் கையில் வைத்திருந்தோம். ஆனால் இருபோட்டிகளில் எவ்வாறு தவறவிட்டோம் என்பதை ஆலோசிக்க வேண்டும்.

ஆஸ்திரேரலிய வீரர்கள் தொடக்கத்தில் நன்றாகப் பந்துவீசினார்கள், சமாளிப்பது சவாலாகத்தான் இருந்தது. அவர்களின் பந்துவீச்சை சமாளித்து 280 ரன்கள் சேர்ப்பது என்பது கடினம்தான்.

பொதுவாக நாங்கள் போட்டியில் தோல்விஅடைந்துவிட்டால், அது குறித்து கலந்தாய்வு செய்து இன்னும் சிறப்பாக எங்கு செயல்பட்டிருக்கலாம் என ஆய்வு செய்வோம். இனிவரும் போட்டிகளில் சிறப்பான பேட்டிங் எங்களிடம் இருக்கும். வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடனான ஆட்டத்தை ஆர்வத்துடன் எதிர்கொள்வோம்.

நாங்கள் அரையிறுதிக்கு செல்லாமல் திரும்பிவிடுவோம் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. எங்களுக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது. அடுத்த இரு போட்டிகளிலும் வழக்கமான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினாலே அரையிறுதிக்குள் சென்றுவிடுவோம். ஒரு கேப்டனாக அடுத்த 2 போட்டிகளிலும் என்னுடைய பங்களிப்பும் அதிகமாக இருக்கும். இதன் மூலம் ஓய்வறையில் அனைவரின் மனதையும் மாற்ற முடியும் என நம்புகிறேன்

இவ்வாறு மோர்கன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in