Last Updated : 04 Jun, 2019 10:18 AM

 

Published : 04 Jun 2019 10:18 AM
Last Updated : 04 Jun 2019 10:18 AM

நாளை தெ.ஆப்பிரிக்காவுடன் மோதல்: ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை

உலகக் கோப்பைப் போட்டியில் நாளை தென் ஆப்பிரி்க்காவுடன் இந்திய அணி மோத உள்ள நிலையில், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஊக்கமருந்து சோதனை நேற்று நடத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்து வருகின்றன. தென் ஆப்பிரிக்க அணி இதுவரை தான் மோதிய இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. மூன்றாவது போட்டியில், நாளை இந்திய அணியுடன் சவுத்தாம்டன் நகரில் நடக்கும் ஆட்டத்தில் மோதுகிறது.

இந்த போட்டிக்கு ஆயத்தம் ஆகும் வகையில் இந்திய வீரர்கள் நேற்று ரோஸ் பவுல் மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு அதிகாரிகள் ஜஸ்பிரித் பும்ராவிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றனர்.

ஜஸ்பிரித் பும்ராவிடம் 2 விதமான சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்சுற்றுச் சோதனையில் பும்ராவின் சிறுநீர் எடுத்து பரிசோதிக்கப்பட்டது, அடுத்த 45 நிமிடங்களுக்குப்பின் பும்ராவின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஊக்கமருந்து சோதனை செய்ததால் பும்ரா சற்று பதற்றத்துடன் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இந்த உலகக் கோப்பையில் கருதப்படுபவர் ஜஸ்பிரித் பும்ரா, இவரின் வேகப்பந்துவீச்சு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. நாளை நடக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் பும்ராவின் பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் ஊக்கமருந்து சோதனை நடந்துள்ளது.

மேலும், பும்ராவுக்கு ஊக்கமருந்து சோதனை எடுக்கப்பட்டதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லாத நிலையில், அடுத்ததாக வேறு எந்த வீரருக்கும் சோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து அணி நிர்வாகம் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடைய சவுத்தாம்டன் நகருக்கு நேற்று வந்த தென் ஆப்பிரிக்க அணியினர் ஏஜெஸ் பவுல் மைதானத்தில் இன்று பயிற்சியில் ஈடுபடவில்லை. அந்த அணியில் டேல் ஸ்டெயின், ஹசிம் ஆம்லா ஆகியோரின் உடல் நிலை குறித்து தீவிரமாக மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இருவரும் விளையாடுவார்களா என்பது குறித்து தென் ஆப்பிரிக்க நிர்வாகம் எந்தவிதமான கருத்தையும் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x