ஷிகர் தவண், கோலி அதிரடி ஆட்டம்: ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா - ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு தலா 3 விக்கெட்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.இந்த ஆட்டம் லண்டனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.
டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் தனது அணியை பேட்டிங் செய்ய களமிறக்கினார். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.
முன்னதாக இந்திய அணியின் பேட்டிங்கின்போது தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவணும் களம் புகுந்தனர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ரோஹித்தும், ஷிகர் தவணும், 10 ஓவர்களுக்குப் பிறகு அதிரடியில் இறங்க ஆரம்பித்தனர். 21-வது ஓவரின்போது ரோஹித் சர்மா அரை சதம் கடந்தார். அதன் பிறகு வேகம் காட்ட ஆரம்பித்த ரோஹித், 57 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் கவுல்ட்டர் நைல் பந்தில் வீழ்ந்தார். 70 பந்துகளில் இந்த ரன்களைச் சேர்த்த அவர் 3 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசியிருந்தார்.
அதன் பிறகு தவணுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தவணுடன் இணைந்த கோலியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். 33-வது ஓவரில் ஷிகர் தவண் சதத்தைப் பூர்த்தி செய்தார். உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் அவர் அடித்த 6-வது சதமாக இது அமைந்தது. மேலும் ஒரு நாள் போட்டிகளில் அவர் எடுத்த 17-வது சதமாகவும் இது அமைந்தது. சதத்தைப் பூர்த்தி செய்த பின்னர் வேகம் காட்டிய தவண், 117 ரன்களில் ஆட்டமிழந்தார். 109 பந்துகளில் இந்த ரன்களை அவர் எடுத்தார்.
அதன் பின்னர் ஹர்திக் பாண்டியா, கோலியுடன் இணைந்தார். 41-வது ஓவரில் கோலி அரை சதத்தை எட்டினார். இது ஒரு நாள் போட்டிகளில் அவர் விளாசும் 50-வது அரை சதமாகும். அரை சதத்தை நெருங்கிய வேளையில் ஹர்திக் பாண்டியா, பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்துகளில் 48 ரன்களைச் சேர்த்தார். பின்னர் வந்த எம்.எஸ். தோனி அதிரடியாக விளையாடினார்.
49-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் தோனி விளாசினார். 50-வது ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 14 பந்துகளில் 27 ரன்களைக் குவித்தார் அவர். இதைத் தொடர்ந்து கோலியுடன், கே.எல்.ராகுல் இணைந்தார். ஒரு பந்து மீதமுள்ள நிலையில் கோலி ஆட்டமிழந்தார். அவர் 77 பந்துகளில் 82 ரன்களை விளாசித் தள்ளினார். இதில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டத்தின் கடைசி பந்தை பவுண்டரிக்கு ராகுல் விரட்ட இந்திய அணி 352 ரன்களை எட்டியது. ராகுல் 3 பந்துகளில் 11 ரன்களும், ஜாதவ் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்களைச் சாய்த்தார். நாதன் கவுல்ட்டர் நைல், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி னர். பின்னர் 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களம்புகுந்தது.
டேவிட் வார்னர் 56, கேப்டன் பின்ச் 36, ஸ்டீவன் ஸ்மித் 69, உஸ்மான் கவாஜா 42, கிளென் மேக்ஸ்வெல் 28, ஸ்டாய்னிஸ் 0, கவுல்ட்டர் நைல் 4, கம்மின்ஸ் 8, மிட்செல் ஸ்டார்க் 3, ஆடம் ஸம்பா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் கேரே 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா, புவனேஸ்வர் ஆகியோர் தலா 3, சாஹல் 2 விக்கெட்களைச் சாய்த் தனர்.
