

2011-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவருக்கு இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க மகேந்திர சிங் தோனி டிக்கெட் வாங்கிக்கொடுத்து வருகிறார்.
கராச்சி நகரில் பிறந்து தற்போது சிகாகோ நகரில் வசிக்கும் தோனியின் தீவிர ரசிகரான முகமது பசீர் எனும் "சாச்சா சிகாகோ", போட்டியின் போது இந்தியா, பாகிஸ்தான் கொடிகளை ஆடையாக அணிந்து அமைதி தூதராக வலம் வருகிறார். பாகிஸ்தானில் பிறந்தாலும், இந்திய அணிக்கே ஆதரவு தெரிவித்து வருகிறார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வரும் முகமது பசீர், வரும் இந்தியா, பாகிஸ்தான் போட்டியைக் காண 6 ஆயிரம் கி.மீ பயணித்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரம் வந்துள்ளார். இன்னும் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டை முகமது பசீர் வாங்கவில்லை என்றாலும், தன்னை தோனி எப்படியாவது, முதல் பந்து போடுவதற்கு முன், டிக்கெட் வாங்கிக்கொடுத்து அமரவைத்துவிடுவார் என்று முகமது பசீர் நம்புகிறார்.
தோனியின் தீவிர ரசிகரான முகமது பசீர் கடந்த 2011-ம் ஆண்டு மொஹாலியில் இந்தியா, பாகிஸ்தான் போட்டியின் போது டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு டிக்கெட்டை தோனி வாங்கிக்கொடுத்தார். அதன்பின் தோனியுடன் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் பேஸ்புக் ஆகியவற்றில் கடந்த 8 ஆண்டுகளாக முகமது பசீர் தொடர்பில் இருந்து வருகிறார். இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் எங்கு நடந்தாலும், அங்கு சென்று இந்தியாவுக்கும், தோனிக்கும் ஆதரவு தெரிவிக்கிறார் முகமது பசீர் என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் நகரில் இருக்கும் முகமது பசீர் நிருபரிடம் கூறுகையில், " நான் சிகாகோ நகரில் இருந்து நேற்று இரவுதான் மான்செஸ்டர் நகரம் வந்தேன். இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு ஒரு டிக்கெட்டுக்கு எனக்கு 900 பவுண்டுகள் வரை தேவைப்படும். இதேஅளவுதான் எனக்கு சிகாகோவில் இருந்து மான்செஸ்டர் வரவும் டிக்கெட் செலவானது. ஆனால் போட்டிக்கு நான் வந்திருப்பதை அறிந்தால், தோனி எனக்கு டிக்கெட் வாங்கிக்கொடுத்துவிடுவார். டிக்கெட் கிடைக்கவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை.
நான் பெரும்பாலும் தோனியை செல்போனில் அழைப்பதில்லை. வாட்ஸ்அப், பேஸ்புக், எஸ்எம்எஸ் மூலம் நான் வந்திருப்பதை கூறிவிடுவேன். நான் வந்திருப்பதை அறிந்தால், தோனி டிக்கெட் கொடுத்துவிடுவார். மிகச்சிறந்த மனிதர், மனிதநேயம் மிக்கவர் தோனி. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து எனக்கு இதுவரை யாரும் இப்படி உதவி செய்தது கிடையாது. என் உடல் நிலைக்கு இப்படி பயணம் செய்யக்கூடாது, ஆனால், கிரிக்கெட்டுக்காகவே நான் வாழ்கிறேன். அல்லாஹ் என்னை வாழ வைக்கிறார் " எனத் தெரிவித்தார்.
முகமது பசீர் மான்செஸ்டர் நகரம் வந்து சேர்ந்தபின், தன்னுடைய நாட்டு அணி வீரர்கள் சர்பிராஸ் அகமது, முகமது அமீர், ஹசன் அலி உள்ளிட்டோரே ஹோட்டல் அறையில் சென்று சந்தித்துள்ளார். மேலும் ஷோயிப் மாலிக்கையும் சந்தித்து முகமது பசீர் பேசியுள்ளார்.
முகமது பசீருக்கு இதுவரை 12 முறை மாரடைப்பு வந்தாலும் அனைத்திலும தப்பித்து இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்காக ஆயிரக்கணக்கான கி.மீ பயணிக்கிறார்.