இந்தியா அதிரடி ஆட்டம்: ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது

இந்தியா அதிரடி ஆட்டம்: ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது
Updated on
2 min read

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து லீக் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அதே அணிதான் இந்த ஆட்டத்திலும் களமிறங்கியதால், மாற்றம் ஏதும் இல்லை.

ஆஸ்திரேலிய அணியிலும் மாற்றம் ஏதும் இல்லை. தவண், ரோஹித் சர்மா இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இருவரும் தொடக்கத்தில் ஆமை வேகத்தில் ரன்களைச் சேர்த்தார்கள். ஸ்டார்க்ஸ், கம்மின்ஸ் பந்துகளை மிகக் கவனமாக கையாண்டு ரன்களைச் சேர்த்தனர். பவர்ப்ளே 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

அதன்பின் வழக்கம்போல் அதிரடிக்கு மாறி ரன்களைச் சேர்த்தனர். மேக்ஸ்வெல் வீசிய 12-வது ஓவரில் பவுண்டரி அடித்தபோது ரோஹித் சர்மா சர்வதே அரங்கில் புதிய சாதனையை எட்டினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களைச் சேர்த்த 4-வது வீரர் எனும் பெருமையயும், அதிவேகமாக சேர்த்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ரோஹித் சர்மாவுக்கு இந்த சாதனையை எட்ட 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின்(3,077 ரன்கள்), ஹெயின்ஸ்(2,262), ரிச்சார்ட்ஸ(2,187), ஆகியோர் மட்டுமே 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைச் சேர்த்திருந்தனர்.

இதில் சச்சின் டெண்டுல்கர் 2 ஆயிரம் ரன்களை தனது 51-வது இன்னிங்ஸில்தான் எட்டினார். ஆனால், ரோஹித் சர்மா தனது 37-வது இன்னிங்ஸில் 2 ஆயிரம் ரன்களை எட்டி சச்சின் சாதனையை முறியடித்தார்.

அதுமட்டுமல்லாமல், ஹெயின் 59 இன்னிங்ஸிலும், ரிச்சார்ட்ஸ் 45 இன்னிங்ஸிலும் 2 ஆயிரம் ரன்களை எட்டிய நிலையில் அனைவரின் சாதனையையும் முறியடித்து ரோஹித் சர்மா உலக சாதனை படைத்துவிட்டார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிகமான சதங்கள் எடுத்த வீரர்களில் 7 சதங்கள் எடுத்து ரோஹித் சர்மா 3-வது இடத்தில் இருக்கிறார். இந்த ஆட்டத்தில் தவண், ரோஹித் சர்மா இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு நிலைத்து ஆடி 127 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ரோஹித் சர்மா 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. தவான் 95 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 109 பந்தில் 117 ரன்கள் (16 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியா 37 ஓவரில் 220 ரன்கள் சேர்த்திருந்தது.

ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், 4-வது வீரராக ஹர்திக் பாண்டியா களம் இறக்கபட்டார். அவர் அதிரடியாக விளையாடி 27 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 48 ரன்கள் குவித்தார். விராட் கோலி 55 பந்தில் 3 பவுண்டரியுடன் தனது 50-வது அரைசதத்தை பதிவு செய்தார்.

தோனி  அதிரடியாக விளையாடி 14 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ரன்கள் விளாசினார். விராட் கோலி 77 பந்தில் 82 ரன்கள் சேர்த்து கடைசி பந்துக்கு முந்தைய பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in