

சவுத்தாம்டனில் இன்று நடக்கும் இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் விராட் கோலியின் முக்கிய சாதனையை தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹசிம் ஆம்லா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சவுத்தாம்டனில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும், இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை அதிவேகமாக 8 ஆயிரம் ரன்களை எட்டிய வீரரில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அதாவது விராட் கோலி தனது 8 ஆயிரம் ரன்களை 175 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார்.
ஆனால், தற்போது ஹசிம் அம்லா 171 இன்னிங்ஸ்களில் 7910 ரன்களுடன் உள்ளார். இன்னும் 8 ஆயிரம் ரன்களை ஹசிம் ஆம்லா எட்டுவதற்கு 90 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தப் போட்டியில் 90 ரன்களை ஆம்லா எடுத்துவிட்டாலோ அல்லது இன்னும் இரு போட்டிகளுக்குள் எடுத்துவிட்டாலோ குறைந்த இன்னிங்ஸ்களில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையைப் பெற்று கோலியின் சாதனையை முறியடிப்பார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹெல்மட்டில் பந்துபட்டு ஆம்லா பாதியிலேயே வெளியேறினார், அதன்பின் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் களமிறங்கவில்லை. இன்றைய இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆம்லா களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் ஹசிம் ஆம்லா, தனது 2ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம், 6 ஆயிரம் , 7 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் எனும் பெருமையை தக்கவைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஆம்லா 8 ஆயிரம் ரன்களை எட்டினால், தென் ஆப்பிரிக்கத் தரப்பில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய 4-வது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதற்கு முன், ஜேக்ஸ் காலிஸ், டிவில்லியர்ஸ், கிப்ஸ் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைச் செய்துள்ளனர்.
மேலும், தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் டீ காக் 8 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 22 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்தப் போட்டியில் அவர் அதை எட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இன்னிங்ஸ்களைப் பொறுத்தவரை டீகாக் அதிகமாக விளையாடியுள்ளதால், இந்த சாதனையில் இவர் இடம் பெறமாட்டார்.
ஜேக்ஸ் காலிஸ் ஒருநாள் போட்டியில் 11, 550 ரன்களும், டிவில்லியர்ஸ் 9427 ரன்களும், கிப்ஸ் 8094 ரன்களும் சேர்த்துள்ளார்கள்.