

உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கிளவுஸில் இருந்த முத்திரையை நீக்கக் கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு(பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது
சவுத்தாம்டன் நகரில் கடந்த 5-ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கையில் அணிந்திருந்த கிளவுஸில் ராணுவத்தில் ஒரு பிரிவான பலிதான் ரெஜிமென்டின் முத்திரையைக் கையுறையில் அணிந்திருந்தார்.
இந்தக் காட்சி கேமராவில் ஜூம் செய்யப்பட்டு தோனியின் கையுறையில் ராணுவ பலிதான் பிரிவு முத்திரை இருப்பது காட்டப்பட்டது. இந்தக் காட்சியைப் பார்த்த தோனியின் ரசிகர்கள், தோனிக்கும் இருக்கும் நாட்டுப்பற்றைப் புகழ்ந்து, சமூக ஊடகங்களில் அவரைப் பாராட்டினர். தோனி கையுறையில் பலிதான் முத்திரை படம் நேற்று சமூக ஊடகங்களிலும் வைரலானது.
ஆனால், அனைத்துவிதமான வேறுபாடுகளை மறந்து விளையாடும் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் ஒருநாட்டின் ராணுவ முத்திரையைப் பதித்து விளையாடுவதை ஐசிசி விரும்பவில்லை.
இதுகுறித்து ஐசிசி பொதுமேலாளர் கிளாரி பர்லாங் விடுத்த அறிக்கையில், "இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கிளவுஸில் இந்திய ராணுவத்தின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. அதை நீக்கக் கோரி உடனடியாக பிசிசிஐக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதுபோன்ற ஒரு நாட்டின் ராணுவத்தின் முத்திரையை அணிந்து விளையாடுவது ஐசிசி விதிகளுக்கு முரணானது. கிளவுஸில் , விளம்பரதாரர் முத்திரை மட்டுமே அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது முதல் முறையாக செய்த குற்றம் என்பதால், நாங்கள் அறிவுறுத்தலோடு விட்டுவிடுகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய துணை ராணுவப் பிரிவு தோனியை கவுரவப்படுத்தும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு கவுரவ லெப்டினல் பதவியை வழங்கியது. தோனிக்கு வழங்கப்பட்ட லெப்டினல் பதவி, எல்லையோர பாதுகாப்புப் படையின் பலிதான் பாரசூட் பிரிவில் வழங்கப்பட்டது. அந்தப் பிரிவின் முத்திரையைத்தான் தோனி தனது கிளவுஸில் பயன்படுத்தினார்.
இதற்கு முன் கடந்த இருமாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி பயணம் மேற்கொண்டபோது, கடைசி ஒருநாள் ஆட்டத்தில் புல்வாமா தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தி போட்டி நடத்தப்பட்டது. ஆனால், இதற்கு பாகிஸ்தான் ஐசிசியிடம் எதிர்ப்பு தெரிவித்தது. ஐசிசி சார்பில் நடத்தப்படும் இதுபோன்ற போட்டிகளில் அரசியல் கலப்புகள் இருக்கக் கூடாது என்று குற்றம் சாட்டியது. ஆனால், அதை மறுத்த ஐசிசி, அந்தப் போட்டி இந்திய ராணுவத்துக்கு உதவ நலநிதிக்காக நடத்தப்படும் போட்டி, அதற்கு பிசிசிஐ சார்பில் அனுமதி பெறப்பட்டது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.