

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியதையடுத்து அணியில் ரிஷப் பந்தை சேர்ப்பதற்கு ஐசிசி நேற்று இரவு முறைப்படி ஒப்புதல் அளித்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடத்தும் தொழில்நுட்பக் குழு இதற்கான அனுமதியை நேற்று இரவு வழங்கியதைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக அணியில் இடம் பெற்றார் ரிஷப் பந்த்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஷிகர் தவண் அருமையான சதம் அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து தவணின் இடது கை பெருவிரலில் பட்டு, காயம் ஏற்படுத்தியது. முதலுதவி எடுத்துக்கொண்டு விளையாடிய ஷிகர் தவணுக்கு அதன்பின் மருத்துவப பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த சோதனையின் முடிவில் ஷிகர் தவணின் இடது கை பெருவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால், அடுத்த 3 போட்டிகளுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஷிகர் தவணுக்குப் பதிலாக அவசரமாக, இளம் வீரர் ரிஷப் பந்த் அழைக்கப்பட்டு அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், ஷிகர் தவணின் உடல்நிலை குறித்து மட்டும் அணி நிர்வாகம் வாய் திறக்கமால் இருந்து வந்தது.
இந்த சூழலில் ஷிகர் தவணுக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், அவர் உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. அவருக்குப் பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் சேர்க்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது
ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பது குறித்து ஐசிசியின் போட்டி நடத்தும் தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் அதற்காக அணி நிர்வாகம் காத்திருந்த நிலையில் நேற்று இரவு ஒப்புதல் அளித்தது.
இது தொடர்பாக ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், " உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் வீரர் காயம் ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்ப்பது குறித்து போட்டி நடத்தும் தொழில்நுட்பக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.
தொழில்நுட்பக் குழுவில் ஜெப் அலார்டைஸ், கேம்பெல் ஜேமிஸன், ஸ்டீவ் எல்வொர்த்தி, ஆலன் போர்தாம், ஹர்ஸா போக்லே, குமார் சங்கக்கரா ஆகியோரின் ஒப்புதலின்படி ஷிகர் தவணுக்குப் பதிலாக இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.