Published : 06 Jun 2019 07:36 PM
Last Updated : 06 Jun 2019 07:36 PM

38/4 என்ற நிலையிலிருந்து மோசமாக நழுவ விட்ட மே.இ.தீவுகள், கூல்டர் நைல் உ.கோப்பை சாதனை 92 ரன்கள்; ஸ்மித் அபாரம்: ஆஸ்திரேலியா 288 ரன்கள்

நாட்டிங்காமில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2019-ன் 10வது ஆட்டத்தில் மே.இ.தீவுகள் டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைக்க அந்த அணி 38/4 என்று தொடக்க சரிவிலிருந்து மீண்டு 49  ஓவர்களில் 288 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

ஆஸ்திரேலியா இன்னிங்சில் 8ம் நிலையில் இறங்கிய கூல்ட்டர் நைல், மே.இ. இடது கை வேகப்பந்து வீச்சாளர் காட்ரெல் வீசிய 46வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசியபோது உலகக்கோப்பையில் 8 ம்நிலையில் இறங்கி அதிக ஸ்கோர் எடுத்த சாதனையை நிகழ்த்தினார், கூல்டர் நைல் கடைசியில் 60 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 90 ரன்கள் விளாசி 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார், ஆனால் மே.இ.தீவுகளின் திட்டங்களை போதிய அளவுக்கு இவரும் ஸ்மித்தும் (73) சேதம் செய்தனர்.  மே.இ.தீவுகளிடம் திட்டங்களா? ஆம் அப்படி எதுவும் இல்லாமல் கட்டுக்கோப்பை இழந்த பந்து வீச்சினால்தான் நம்பர் 8 வீரர் கிட்டத்தட்ட சதம் எடுக்கும் அளவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இருவரும் சேர்ந்து 102 ரன்களை சுமார் 13 ஓவர்களில் விளாசித்தள்ளியதில் ஆட்டம் மாறிப்போனது. மே.இ.தீவுகள் அணியின் பந்து வீச்சு விசித்திரமாக இருந்தது, ஆக்ரோஷம் பவுன்சர், எட்ஜ், விக்கெட்டுகள் எல்லாம் சரிதான் ஆனால் பந்து வீச்சில் ஒரு போதும் கட்டுக்கோப்பு இல்லை. மொத்தம் 27 உதிரி ரன்களில் 24 வைடுகளை வீசினர். ஜேசன் ஹோல்டர் விக்கெட் எடுக்காவிட்டாலும் 7 ஓவர் 2 மெய்டன் 28 ரன் 1 விக்கெட் என்றும் ரஸல் 8 ஓவர் 41 ரன்கள் 2 விக்கெட் என்றும் சிக்கனம் காட்ட ஒஷேன் தாமஸ் ஓவருக்கு 6.3 என்ற விகிதத்திலும் காட்ரெல் ஓவருக்கு 6.22 என்ற விகிதத்திலும் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் ஓவருக்கு 6.7 என்ற ரன் விகிதத்திலும் விட்டுக் கொடுத்தனர்.

 

அதிலும் கடைசியில் ஸ்மித், தாமஸ் பந்தை நன்றாக ஆஃப் ஸ்டம்புக்கு வந்து ஒரு ஹை பிளிக் செய்ய அங்கு லாங் லெக்கில் காட்ரெல் சிக்சருக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்த பந்தை மேலெழும்பி தள்ளிச் சென்ற பந்தை ஒரு கையால் பிடிக்க, பேலன்ஸ் தவறி எல்லைக் கோட்டைக் கடந்து விடுவார் என்று எல்லைக்குள் பந்தைத் தூக்கிபோட்டு பிறகு உள்ளே வந்து பிடித்து உலகக்கோப்பையின் முதல் எல்லை தாண்டி-மீண்டு வந்த கேட்சை தொடக்கி வைத்தார். அந்த கேட்சை எடுக்காவிட்டால் அது சிக்ஸ் ஆகியிருக்கும் அதன் பிறகு ஸ்மித் என்ன செய்திருப்பார் என்று சொல்லியிருக்க முடியாது, ஸ்கோர் 300க்கும் மேல் சென்றிருக்கும்.

 

ஆனால் ஸ்மித் 26இல் இருந்த போது இதே காட்ரெல் கேட்சை விட்டார். கூல்ட்டர் நைல் 61 ரன்களில் இருந்த போது டீப் மிட்விக்கெட்டில் எளிமையான கேட்சை ஹெட்மையர் கோட்டை விட்டார். இப்படியாக சீரற்ற பவுலிங், கட்டுக்கோப்பற்ற பவுலிங் ஆகியவற்றினால் போட்டியையே மே.இ.தீவுகள் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, காரணம் ஆஸ்திரேலியா இவ்வளவு கட்டுக்கோப்பில்லாமலும் சீரற்ற முறையிலும் வீச மாட்டார்கள், அதே போல் கேட்ச்கள், பீல்டிங் சீரற்ற முறையில் இருப்பது கடினம்.

மொத்தத்தில் 38/4, பிறகு 79/5 பிறகு 147/6 ஆகிய எந்த நிலையிலிருந்தும் மே.இ.தீவுகள் இறுக்கியிருந்தால் ஆஸ்திரேலியா 200 ரன்கள்தான். கட்டுக்கோப்புடன் வீசாததால் 100 ரன்களை கூடுதலாக மே.இ.தீவுகள் வழங்கியுள்ளது.  மேலும் ரஸல் 8 ஓவர் 41, ஹோல்டர் 7 ஓவர் 2 மெய்டன் 28 ரன் 1 விக்கெட், ஆனால் கோட்டாவை பூர்த்தி செய்யவில்லை. இது என்ன கேப்டன்சி என்று புரியவில்லை.

 

தொடக்கத்தில் வார்னர், பிஞ்ச், கவாஜா, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் ஆக்ரோஷமான ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துவீச்சுக்கு காலியாக ஆஸ்திரேலியா 38/4 என்று ஆனது. ஸ்டாய்னிஸ் (19) ஸ்மித் இணைந்து முதல் மீட்டெடுப்பை நிகழ்த்தி 41 ரன்களைச் சேர்த்தனர், ஆனால் ஸ்டாய்னிஸ் நேராக சர்க்கிளுக்குள் பூரனிடம் கையில் அடித்து ஹோல்டரிடம் வெளியேறினார்.

 

அதன் பிறகு இரண்டாவது மீட்புப் பணியில் ஸ்மித்துடன் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இணைந்தார். 21 ஒவர்கள் முடிவில் 86/5 என்று இருந்த ஸ்கோர் கேரி, தாமஸை 2 பவுண்டரிகள் மற்றும் காட்ரலை 3 பவுண்டரிகள் என்று அடித்து 5 பவுண்டரிகள் அரக்கப்பறக்க வந்து விட ரன் விகிதம் உயர்ந்தது, அப்போதுதான் ஹோல்டர் வீசிய பவுன்சரை ஸ்மித் புல் செய்ய பவுண்டரியில் காட்ரெல் கேட்சை விட்டார் பந்தும் பவுண்டரியானது.  30 ஓவர் முடிவில் 146/5 என்று உயர்ந்தது. இருவரும் 68 ரன்கள் சேர்த்தனர்.  அலெக்ஸ் கேரி 55 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து ரஸலிடம் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் ஹோப்பிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்

 

அதன் பிறகுதான் கூல்ட்டர் நைல், ஸ்மித் சேர்ந்தனர். இருவரும் சுமார் 13 ஓவர்களில் 102 ரன்களை சேர்த்தனர். அப்போது ஸ்மித் 103 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்து அற்புதமான காட்ரெல் கேட்சுக்கு ஆட்டமிழக்க, கூல்ட்டர் நைல் சாதனையான 92 ரன்களை 60 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 அருமையான சிக்சர்களுடன் அடிக்க ஸ்கோர் 288 ரன்கள் வந்த போது ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x