

நாட்டிங்ஹாம் முகமது ஹபீஸ், பாபர்ஆசம், கேப்டன் சர்பிராஸ் அகமது ஆகியோரின் அரைசதத்தால் நாட்டிங்ஹாமில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் சேர்த்துள்ளது.
40 ஓவர்களில் 250 ரன்களை எட்டிய பாகிஸ்தான் அணி கடைசி 10 ஓவர்களில் 98 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்தது.
உலக சாதனை படைக்கப்பட்ட நாட்டிங்ஹாம் ஆடுகளத்தில் இந்த ஸ்கோர் எதிர்பார்க்கப்பட்டதுதான்.ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்து சூடுபட்ட பாகிஸ்தான் அணி, இன்று இங்கிலாந்து பந்தை வெளுத்து வாங்கிவிட்டது.
குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர், வோக்ஸ், அதில் ரஷித் ஆகியோரின் பந்துவீச்சை பாகிஸ்தான் வீரர்கள் துவம்சம் செய்துவிட்டனர். ஜோப்ரா 10 ஓவர்கள் வீசி 79 ரன்களும், வோக்ஸ் 71 ரன்களும், ரஷித் 5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் என வாரி வழங்கினர். இங்கிலாந்து தரப்பில் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சும், பீல்டிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்தப் போட்டியில் 3 கேட்ச்சுகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டுள்ளனர்.
இங்கிலாந்து தரப்பில் பிளங்கட்டுக்கு பதிலாக மார்க் உட் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தானில் இமாத் வாசிம், ஹாரிஸ் சோஹைல் நீக்கப்பட்டு ஆஷிப் அலி, சோயிப் மாலிக் சேர்க்கப்பட்டனர். ஆடுகளம் பேட்டிங்கிற்கும், சேஸிங் செய்யவும் நன்கு சொர்க்கபுரி, தொடக்கத்தில் சிறிதுநேரம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதை உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் டாஸ்வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
பக்கர்ஜமான், இமாம் உல் ஹக் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஜோப்ரா ஆர்ச்சரும், வோக்ஸும் பவுன்ஸரை போட்டு ஏற்றி தொடக்கத்தில் சற்று சிரமம் கொடுத்தனர். ஆனால், அதன்பின் நிதானமாக கையாண்ட இரு பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சை ஒருகை பார்த்து ஸ்கோரை உயர்த்தினர். பாகிஸ்தான் 10 ஓவர்களில் 69 ரன்கள் சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 82 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பக்கர் ஜமான் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து பாபர் ஆசம் களமிறங்கி, இமாம் உல்ஹக்குடன் சேர்ந்தார். அரை சதம் நோக்கி முன்னேறிய இமாம் உல்ஹக் 44 ரன்கள் சேர்த்த நிலையில் மொயின் அலி வீசிய 21-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இவருக்கு வோக்ஸ் பிடித்த கேட்ச் மிக அற்புதமானது. அடுத்து முகமது ஹபிஸ் களமிறங்கி, பாபர் ஆசமுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பாபர் ஆசம் நிதானமாக பேட் செய்ய, ஹபீஸ் அதிரடியில் இறங்கி இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். ஹபீஸ் 39 பந்துகளில் அரை சதத்தையும், பாபர் ஆசம் 50 பந்துகளில் அரை சதத்தையும் அடித்தனர். ஹபீஸ்க்கு இது 39-வது அரை சதம், பாபர் ஆசத்துக்கு 14-வது அரை சதமாகும். 3-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த நிலையில், இருவரும் பிரிந்தனர்.
பாபர் ஆசம் 63 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் சர்பிராஸ் அகமது வந்து, ஹபீஸுடன் சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தில் மந்தமாக ஆடிய பின்னர் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். 40-வது ஓவரில் பாகிஸ்தான் அணி 250 ரன்கள் சேர்த்து. கேப்டன் சர்பிராஸ் அகமது 40 பந்துகளில் அரை சதம் அடித்தார். சதத்தை நோக்கி முன்னேறிய ஹபீஸ் 84 ரன்கள் சேர்த்த நிலையில் மார்க்உட் பந்துவீச்சில் வோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் ஆஷிப் அலி(14), சோயிப் மாலிக்(8), வகாப் ரியாஸ்(4) ரன்களில் வெளியேறினர். கேப்டன் சர்பிராஸ் அகமது 55 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹசன்அலி, சதாப்கான் தலா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், மொயின் அலி தலா 3 விக்கெட்டுகளையும், மார்க்வூட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.