Published : 20 Jun 2019 07:36 am

Updated : 20 Jun 2019 15:11 pm

 

Published : 20 Jun 2019 07:36 AM
Last Updated : 20 Jun 2019 03:11 PM

அந்த 38வது ஓவரில் இம்ரான் தாஹிரின் வேதனை; வெற்றியைப் பறித்த கேன் வில்லியம்சன் ‘சிக்சர்’ சதம்: ‘சோக்கர்ஸ்’ தெ.ஆ.வின்  உ.கோப்பை கதை முடிந்தது

38

பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 25வது போட்டி குறைந்த ஸ்கோர்களின் மகாப்போட்டியாக அமைந்தது. தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டு 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுக்க, இலக்கை விரட்டிய நியூஸிலாந்து ஆட்டத்தின் நிமிடத்திற்கு நிமிடம் மாறிய விதிகளினால் பரபரப்பாகி கடைசியில் 48.3 ஒவர்களில் 245/6 என்று அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வரும் போட்டிகளில் பாகிஸ்தான், இலங்கை , ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலும் அரையிறுதிக்கு வாய்ப்பு இல்லை.

 

ஆட்ட நாயகன் கேன் வில்லியம்சன் 138 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 106 நாட் அவுட் என்று தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபித்தார். கொலின் டி கிராண்ட் ஹோம் ஆட்டத்தின் திருப்பு முனை அதிரடி நாயகன் 47 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 60 ரன்கள்.. இருவரும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்காக சேர்த்த 91 ரன்கள் தென் ஆப்பிரிக்காவின் கதையை முடித்தது.

 

ஆட்டம் மழை காரணமாக தாமதமாக தொடங்கியதால் அணிக்கு 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

 

இந்தப் பிட்ச் 250-260 பிட்ச் இதில் தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தின் கிடுக்கிப்பிடியையும் மீறி ஹஷிம் ஆம்லாவின் அரைசதம் வான் டெர் டியூசனின் 67, டேவிட் மில்லரின் 36 ரன்களினால் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 என்ற இலக்கை எட்டியது, இந்தப் பிட்சில் இது 10 -15 ரன்கள் குறைவு என்றாலும் சவாலான இலக்காக அமைந்த்து. காரணம், பிட்சில் பந்துகள் நின்று வந்தன. ஆட்டத்தின் கடைசி 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா சொதப்பிய சொதப்பலில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியை தோல்வியாக்கியது. ஆனால் கேன் வில்லியம்சன் தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபித்து விட்டார்.

 

அந்த 38வது ஓவரில் இம்ரான் தாஹிரின் வேதனை... கேட்காமல் விடப்பட்ட அவுட்.. விடப்பட்ட ரன் அவுட்

 

இலக்கை விரட்டும் போது நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. 12 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 73 ரன்கள். பெலுக்வயோ வீசிய இந்த ஓவரில்தான் கொலின் டி கிராண்ட்ஹோம் மிட்விக்கெட்டில் அடித்த கம்பீரமான சிக்ஸர் மூலம் 14 பந்துகளில் 21 ரன்களுடனும் கேன் வில்லியம்சன் 104 பந்துகளில் 74 ரன்களுடனும் களத்தில் நின்றிருந்தனர். அப்போதுதான் அந்த விதிவசமான ஓவரை இம்ரான் தாஹிர் வீச வந்தார். இம்ரான் தாஹிர் அதுவரை 7 ஓவர் 20 ரன் பிறகு 9 ஒவர் 29 ரன்கள் என்று கடும் சிக்கனம் காட்டி நியூஸிலாந்தைக் கட்டிப் போட்டு வைத்திருந்தார். அவர் தன் கடைசி ஓவரையும் இன்னின்ங்சின் 38வது ஓவரையும் வீச வந்தார்.

 

நியூஸிலாந்தின் தோல்வியைத் தீர்மானித்திருக்க வேண்டிய ஓவர் தென் ஆப்பிரிக்காவின் சொதப்பலினால் பறிபோனது இந்த ஓவரில்தான். அந்த ஓவரிலிருந்து விவரிப்பது சுவாரஸியமாக இருக்கும்:

 

முதல் பந்து லெக் அண்ட் மிடிலுக்கு வந்தது லாங் ஆனில் தட்டி விட்டு ஒரு சிங்கிள் எடுக்கலாம் என்ற கேன் வில்லியம்சனின் முயற்சியில் கோளாறு ஏற்பட பந்து காற்றில் ஷார்ட் மிட்விக்கெட்டில் 30 அடி வட்டத்துக்குள் நின்றிருந்த டேவிட் மில்லர் வசம் கேட்ச் ஆகச் சென்றது, அவர் ஏன் அவ்வளவு தள்ளி நின்றார் என்று தெரியவில்லை முன்னால் நடந்து வந்திருந்தால் கூட கேட்ச், ஆனால் கடைசி நேரத்தில் அவர் டைவ் அடிக்க, கேன் வில்லியம்சன் வயிற்றில் மோட்டார் ஓட பந்து டேவிட் மில்லருக்கு முன்னால் பிட்ச் ஆனது. கேட்ச் வாய்ப்பு பறிபோனது. 1 ரன்னும் வந்தது.

அடுத்த பந்தில் கிராண்ட் ஹோம் சிங்கிள், அதற்கு அடுத்த பந்தில் கேன் வில்லியம்சன் சிங்கிள். இம்முறை 4ம் பந்தில் கொலின் டி கிராண்ட் ஹோம் ஸ்ட்ரைக்கில் இருந்தார். இம்ரான் தாஹிரின் கூக்ளியை தூக்கி ஷார்ட் மிட்விகெட்அடிக்க மீண்டும் டேவிட் மில்லர் இந்த முறை கொஞ்சம் முன்னால் வந்ததால் அவர் தலைக்குமேல் பந்து சென்றது, இது கேன் வில்லியம்சன் ஷாட்டை விட கொஞ்சம் பவர் அதிகமான ஷாட். மில்லர் எழும்பினார் பந்து வலது கையில் பட்டு கீழே விழுந்தது. வாய்ப்பு நழுவ விடப்பட்டது. இம்ரான் தாஹிரைப் பார்க்க உண்மையில் வேதனையாக இருந்தது.

 

எல்லாவற்றுக்கும் மேலாக ஓவரின் கடைசி பந்து மிக அருமையாக ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி நின்று திரும்பியது பந்து கேன் வில்லியம்சனின் மட்டையின் விளிம்பில் பட்டு டி காக் கையில் போய் உட்கார்ந்தது, இம்ரான் தாஹிர் அப்பீல் செய்தார் ஆனால் டி காக் வாளாவிருந்தார். சரி ஒரு சந்தேகத்துக்காவது 3வது நடுவரை அணுகியிருக்கலாமே. அங்குதான் தோனியின் கூர்மை டி காக்கிற்கு இல்லை. அன்று ஹோல்டர் ஒரு ரிவியூ கேட்டாரே மிகப்பிரமாதமான ரிவியூ ஆட்டத்தின் போக்கை மாற்றியதே, ஆனால் டி காக் தான் ட்ரெண்ட் போல்ட் பந்தில் பறந்த ஸ்டம்பையே நினைத்துக் கொண்டிருந்தார் போலும், ரிவியூ வேண்டும் என்று கோரவில்லை, பந்து கேன் வில்லியம்சனின் மட்டையின் விளிம்பில் பட்டு டி காக்கிடம் கேட்ச் ஆனது, அவுட் வாய்ப்பையும் கோட்டை விட்டனர். இம்ரான் தாஹிர் ரிவியூ போகலாமா என்பது போல் மிகப்பரிதாபமாக டி காக்கைப் பார்த்தார். ரிவியூ என்ற முகபாவமே இல்லாமல் தென் ஆப்பிரிக்கா ஓவரை முடிக்க இம்ரான் தாஹிர் மொத்தம் 33 டாட்பால்களுடன் 10 ஒவர் 33 ரன்கள் விக்கெட் இல்லாமல் முடிந்தார். நியூசிலாந்தை முடித்திருக்க வேண்டிய ஓவர் டுப்ளெசிஸ், டி காக், டேவிட் மில்லர் ஆகியோரினால் வீணடிக்கப்பட்டது. பிரமாதமான ஓவரில் இந்த அசம்பாவிதத்தில் வில்லியம்சன் 108 பந்துகளில் 76 என்று தப்பினார்.

 

வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் ஒவருக்கு 6.27 என்று ஆனது, இந்தப் பிட்சில் இது கடினம். ஆனால் ரபாடா வீசிய அடுத்த ஓவரில் ரபாடா தோள் உயர பவுன்சருக்கு குறிவைத்து அது இடுப்புயர ஷார்ட் பிட்ச் ஆக மீண்டும் கொலின் டி கிராண்ட் ஹோம் அரக்க புல் ஷாட்டை ஆட ஸ்கொயர்லெக்கில் மக்களிடையே 7-8 வரிசைகள் தள்ளி பந்து போய் விழுந்தது சிக்ஸ்!

 

டுப்ளெசிஸ் தேர்ட்மேன் இல்லாத களவியூகத்தை அமைத்து ஷார்ட் தேர்ட் மேன், பாயிண்ட் என்று 3 பேரை ஆஃப் திசையில் அருகே நிறுத்தும் உயர் ரிஸ்க் களவியூகத்தை அமைத்திருந்தார், அதாவது பேட்ஸ்மென்கள் அந்த தேர்ட்மேன் பவுண்டரியில் ஆளில்லாததைப் பயன்படுத்தி ஆஃப் ஸ்டம்புக்கு நெருக்கமாக வரும் பந்துகளை ஸ்டியர் செய்து பவுண்டரி அடிக்கத் தூண்டும் ஆசை வலையில் எட்ஜ் எடுத்தால் விக்கெட், இல்லையெனில் பவுண்டரி என்ற உயர் ரிஸ்க் களவியூகம் அமைத்தார்.

 

அப்போதுதான் லுங்கி இங்கிடி 40வது ஓவரை மிகப்பிரமாதமாக வீசி 1 ரன் தான் கொடுத்தார். 184/5, 54 பந்துகளில் 58 ரன்கள் தேவை.

 

எளிதான ரன் அவுட் வாய்ப்பையும் நழுவ விட்ட டேவிட் மில்லர்:

 

41வது ஓவரை வீச ரபாடா வந்தார், முதல் பந்து அருமையான ஷார்ட் பிட்ச் பந்து மெதுவாக வர வில்லியம்சன் புல்ஷாட் சிக்கவில்லை உடலில் பட்டு பந்து அருகிலேயே விழுந்தது. கொலின் டி கிராண்ட் ஹோம் சிங்கிளுக்கு ஓடி வர பந்து எங்கு விழுந்தது என்று தெரியாத வில்லியம்சன் தயங்கிய படியே சிங்கிளுக்கு ரன்னர் முனையில் ஓட ரபாடாவே பந்தை எடுத்து ரன்னர் முனையில் ஸ்டம்ப் அருகில் தயாராக இருந்த மில்லரிடம் அடிக்க அவரோ அவசரத்தில் பந்தை வாங்காமலேயே பைல்களை கையால் தட்டி விட்டார். கேன் வில்லியம்சன் ரீச் செய்யவில்லை பிறகுதான் ரீச் செய்தார், ரன் அவுட் வாய்ப்பும் போச்சா? மேட்சும் போய்விட்டது. அப்போதுதான் கொலின் டி கிராண்ட் ஹோம் ரபாடாவை அந்த ஹை ரிஸ்க் களவியூகத்தில் கீப்பருக்கு பின்னால் தேர்ட்மேனில் பவுண்டரி அடித்தார்.

43வது ஓவரை கிறிஸ் மோரிஸ் மிகப்பிரமாதமாக வீசி 3 ரன்களையே கொடுக்க 6 ஓவர் 43 ரன்கள் என்று சமன்பாடு மாறியது. மீண்டும் கொலின் டி கிராண்ட் ஹோம் அந்த தேர்ட்மேன் காலியிடத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக பெலுக்வயோ ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார், நிலைமை கொஞ்சம் தளர்ந்தது. இதே ஓவரில்தான் பெலுக்வயோ வில்லியம்சனுக்கு இடுப்புக்கு மேல் புல்டாஸ் வீச வில்லியம்சன் அடிக்க அதனை டீப்பில் இங்கிடி கேட்சை கோட்டை விட்டார் ஆனால் இது இடுப்புக்கு மேல் சென்ற நோ-பால் ஆனது. 30 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் கிறிஸ் மோரிஸ் மிகப்பிரமாதமாக 45வது ஓவரில் 5 பந்துகள் வரை 1 ரன்னையே கொடுத்து டென்ஷனை அதிகரித்தார். ஆனால் கடைசி பந்தை கொலின் டி கிராண்ட் ஹோம் லாங் ஆனில் ஒரு சுழற்றி சுழற்றி பவுண்டரிக்கு அனுப்பி 39 பந்துகளில் அரைசதம் கண்டார். கடும் நெருக்கடியில் அபாரமான அரைசதம், மேட்ச் வின்னிங் அரைசதமாகும் இது. 46வது ஓவரில் மீண்டும் கொலின் டி கிராண்ட் ஹோம், இங்கிடி பந்தை டீப் மிட்விக்கெட்டில் தூக்கி அடிக்க மில்லர் பந்தை கேட்ச் பிடிக்கும் முன் தரை தட்டியது, இதனை தடுத்தாவது இருக்கலாம் ரபாடா ஆனால் அவரும் கோட்டை விட பவுண்டரிக்குச் சென்றது. 18 பந்துகள் 17 ரன்கள் என்று சமன்பாடு மாறியது. 47வது ஓவரில் ரபாடா 3 ரன்களை மட்டும் கொடுக்க 12 பந்துகளில் 14 ரன்கள் தேவை என்று கொஞ்சம் பரபரப்பானது, தென் ஆப்பிரிக்காவுக்கும் வாய்ப்பிருந்தது.

 

ஏனெனில் 48வது ஓவரின் முதல் பந்தில் 47 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த கொலின் டி கிராண்ட் ஹோம், இங்கிடியின் ஸ்லோயர் பந்தை நேராக லாங் ஆஃபில் அடிக்க அங்கு டுபிளெசிஸ் கேட்சை ஒருவழியாகப் பிடிக்க ஆட்டத்தில் இன்னொரு திருப்பு முனை. அந்த ஓவரை இங்கிடி ஸ்லோயர் ஒன்களாக வீச பவுண்டரி வரவில்லை. 2 ரன்கள்தான் வந்தது, ஆனால் அங்குதான் கேன் வில்லியம்சன் என்ற கலைஞன் எழுச்சி பெற்றான். 48வது ஒவர் கடைசி பந்து களவியூகம் ஆஃப் திசையில் அருகில் இறுக்கம், லெக் திசையில் அடிப்பது ரிஸ்க் ஏனெனில் கடைசி பந்து மிக அருமையான ஸ்லோயர் ஒன், ஆனால் வில்லியம்சன் என்ன செய்தார் தெரியுமா, தேர்ட்மேன் தான் இல்லையே.. பந்தை நன்றாக வரவிட்டு காத்திருந்து தேர்ட் மேனில் ஸ்டியர் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார். மிக முக்கியமான பவுண்டரி, ஏனெனில் எதிர்முனையில் ஸாண்ட்னர். 136 பந்துகளில் 96 ரன்களுக்கு வந்தார் வில்லியம்சன். கடைசி ஒவரில் 8 ரன்கள் தேவை. பெலுக்வயோதான் வீச வேண்டும். நீண்ட விவாதங்கல், களவியூகங்கள். தேர்ட் மேன் இல்லை. லெக், ஆஃப் திசைகளில் டீப்பில் பீல்டர்கள். சாண்ட்னர் சிங்கிள் எடுத்து வில்லியம்சன் கையில் ஸ்ட்ரைக்கை கொடுக்க வர்ணனையாளர்கள் இந்தப் பந்து ஸ்லோயர் ஒன் தான் என்று கூற ஏற்கெனவே கணித்திருந்த கேன் வில்லியம்சன் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே ஃபுல் லெந்தில் பிட்ச் ஆகி வாகாக வந்த பந்தை மிட்விக்கெட் மேல் ஒரே தூக்காகத் தூக்கினார் அதுதான் சிக்சர், அதுதான் சதம். 137 பந்துகளில் 102. வெற்றியைப் பறித்தார், அடுத்த பந்து மீண்டும் தேர்ட்மேனில் பவுண்டரி. வெற்றி ஷாட். வில்லியம்சன் 106 நாட் அவுட், நியூஸிலாந்து வெற்றி. 12வது ஒருநாள் சதம்.

 

 

முன்னதாக கிறிஸ் மோரிஸின் அபார ஸ்பெல்: கப்தில் ஹிட்விக்கெட்

 

இலக்கை விரட்டும் போது கொலின் மன்ரோ 9 ரன்களில் ரபாடா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற. வில்லியம்சன், கப்தில் (35) இணைந்து ஸ்கோரை 15வது ஓவர் முடிவில் 72 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், அப்போது பெலுக்வயோ பந்தை ஹூக் ஷாட் ஆட முயன்று ஸ்டம்பின் மேல் விழுந்தார். ஹிட் விக்கெட் அவுட்.

 

அதன் பிறகு கிறிஸ் மோரிஸ் மிக அருமையான ஒரு ஸ்பெல்லில் ராஸ் டெய்லர் (1), டாம் லேதம் (1), ஜேம்ஸ் நீஷம் (23) ஆகியோரை வெளியேற்ற நியூஸிலாந்து அணி 137/5 என்று 33வது ஓவரில் தடுமாறியது, ஆனால் அப்போதுதான் கொலின் டி கிராண்ட் ஹோம் இறங்கி சில பல தர்ம அடிகளை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார் முதலில் கிறிஸ் மோரிசை ஒரு ஹைபிளிக் பவுண்டரி பிறகு ஒரு அரக்க சிக்ஸ், பிறகு ரபாடாவை ஒரு சிக்ஸ் என்று வெளுத்துக் கட்டினார். இவரும் வில்லியம்சனும் 91 ரன்களைச் சேர்க்க ஆட்டம் நியூஸிலாந்து பக்கம் மாறியது, 38வது ஓவரிலிருந்து தென் ஆப்பிரிக்கா மேலே வர்ணைத்த படி செம சொதப்பு சொதப்ப வெற்றியைப் பறிகொடுத்தது.

 

தென் ஆப்பிரிக்காவை 241 ரன்களுக்கு மட்டுப்படுத்திய நியூஸிலாந்து:

 

டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் ஒரு மாதிரியான ‘ஸ்பாஞ்ச்’ மாதிரியான டென்னிஸ் பந்து பிட்சில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார். ட்ரெண்ட் போல்ட் மிக அருமையாக டி காக்கின் கால் நகராத தன்மையை யூகித்து தொடர்ந்த இன்ஸ்விங்கரில் ஆன் ட்ரைவ் ஆசையைத் தூண்டி பவுல்டு செய்தார், ஸ்டம்ப் நடந்து சென்றது.

 

ஹஷிம் ஆம்லா மீண்டும் தன் சரளத்தைத் தொலைத்து விட்டு ஆடினார், ஆனால் மிக பயனுள்ள ஒரு 55 ரன்களை 83 பந்துகளில் எடுத்தார். இதன் மூலம் 8000 ரன்களை விரைவில் கடந்த 2வது வீரர் ஆனார், இதுதான் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆறுதல்.

 

ஆம்லா ஒரு அரைசதக் கூட்டணியை தன் கேப்டன் டுப்ளெசிஸுடன் (23) பகிர்ந்து கொண்டார். பிறகு அய்டன் மார்க்ரம் (38) உடன் இன்னொரு அரைசதக் கூட்டணியைப் பகிர்ந்து கொண்டார் ஆம்லா. இவையெல்லாம் இன்னும் எழும்பி சதக்கூட்டணியாக மாறியிருக்க வேண்டும். ஆனால் ஆம்லாவை சாண்டர் வீட்டுக்கு அனுப்ப டுபிளெசிஸை 148 கிமீ வேக யார்க்கரில் பெர்கூசன் காலி செய்ய மார்க்ரம் டீப் கவரில் கேட்ச் ஆகி கொலின் டி கிராண்ட் ஹோமிடம் வெளியேற 136/4 என்று ஆனது.

 

வான் டெர் டியூசன் மற்றும் டேவிட் மில்லர் இணைந்து 72 ரன்களை 5வது விக்கெட்டுக்குச் சேர்த்தனர். டியூசன் 12 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவுக்காக 6வது அரைசதம் கண்டார். பெர்கூசன் வீசிய 49வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் டியூசன் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து 15 ரன்களைச் சேர்க்க ஸ்கோர் 241/6 என்று முடிந்தது. பெர்கூசன் 3 விக்கெட்டுகளையும் போல்ட், கிராண்ட் ஹோம், சாண்ட்னர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.


கேன் வில்லியம்சன் அபார சதம்தென் ஆப்பிரிக்கா தோல்வி உ.கோப்பை கனவு முறிந்ததுதென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து உலகக்கோப்பை 2019ஹஷிம் ஆம்லாகொலின் டி கிராண்ட் ஹோம்டேவிட் மில்லர்இம்ரான் தாஹிர்கிரிக்கெட்ICC World cup 2019: Kane Williamson and spilled chances ends South Africa's world cup hopesCricketMan of the match Kane Williamson

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author