Last Updated : 15 Jun, 2019 11:10 AM

 

Published : 15 Jun 2019 11:10 AM
Last Updated : 15 Jun 2019 11:10 AM

விராட் கோலி வீடியோவைப் பார்த்து பேட்டிங் பயிற்சி எடுக்கும் பாபர் ஆசம்: சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை மறக்கமாட்டோம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட் செய்யும் வீடியோ காட்சிகளைப் பார்த்து, அதேபோன்று, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்  பாபர் ஆசமும் பயிற்சி எடுத்து வருகிறார்

உலக கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நாளை ஓல்ட் டிராபோர்ட்  மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இரு நாடுகளைச் சேர்ந்த அணி வீரர்களும் தீவிரமாகத் தயாராகி வருகிறார்கள்.

ஆசியக்கோப்பை போட்டிக்குப் பின் இப்போது மீண்டும் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதுவரை உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது இல்லை என்ற வரலாறு தக்கவைக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கிடையே பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் வீடியோக்களை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பார்த்து வருகிறார். கோலி எவ்வாறு பேட் செய்கிறார், ஷாட்களை எவ்வாறு அடிக்கிறார், பந்தை எப்படிக் கையாள்கிறார் என்று கவனித்து அதேபோலவே பாபர் ஆசம்  பயிற்சி எடுத்து வருகிறார்.

24 வயதான  பாபர் ஆசம் இதுவரை 67 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 9 சதங்கள், 13 அரை சதங்கள் என மொத்தம் 2,854 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாபர் ஆசம் நிருபர்களிடம் கூறுகையில், " விராட் கோலியின் பேட்டிங்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீடியோவில் பார்த்தேன். பல்வேறு சூழல்களில் எவ்வாறு பேட் செய்கிறார் என்பதைக் கூர்ந்து கவனித்து அதைப் போலவே நானும் பயிற்சி எடுத்து வருகிறேன்.

இந்திய அணியின் கேப்டன் கோலியின் வெற்றி சதவீதம் அதாவது, களத்தில் நின்று அணியை வெற்றி பெறவைத்த கோலியின் வெற்றி சதவீதம் மலைப்பாக இருக்கிறது. அதைப் போலவை நானும் பேட் செய்து பின்பற்ற நினைக்கிறேன்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் நாங்கள் பெற்ற வெற்றியை ஊக்கமாக எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியை எதிர்கொள்வோம். ஏனென்றால், சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இடம் பெற்றிருந்த அணியில் ஏறக்குறைய அதே வீரர்கள்தான் இப்போதும் இருக்கிறார்கள். ஆதலால், அந்த உற்சாகத்துடன் நாங்கள் போட்டியில் விளையாடுவோம்.

எங்களுடைய வெற்றியின் நினைவுகளுடன் நாங்கள் போட்டியில் பங்கேற்பதுதான் மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். இந்தப் போட்டிக்காக நாங்கள் தீவிரமாகத் தயாராகி வருகிறோம். ஏனென்றால், இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டியைக் காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

எங்கள் அணி சாதகமான மனநிலையோடு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நான் மட்டும் அல்ல, அனைத்து வீரர்களும் உயர்ந்த நம்பிக்கையுடன் போட்டியை எதிர்கொண்டு வெற்றி பெற முயல்கிறோம்.

இந்திய அணியிடம் சிறந்த பந்துவீச்சு இருக்கிறது. பும்ராவின் பந்துவீச்சைப் பற்றி எனக்கு பயமில்லை. இங்கிலாந்து அணியின்  பந்துவீச்சையே நாங்கள் எதிர்கொண்டுவிட்டோம். எங்களிடமும் நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்''.

இவ்வாறு பாபர் ஆசம் தெரிவித்தார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, ஓவல் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் முகமது அமீரின் பந்துவீச்சில் நிலைகுலைந்து 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x