Last Updated : 15 Jun, 2019 06:29 PM

 

Published : 15 Jun 2019 06:29 PM
Last Updated : 15 Jun 2019 06:29 PM

நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற மிதமிஞ்சிய நம்பிக்கை வேண்டாம்: இந்திய அணிக்கு கங்குலி, சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கு எதிராக ஞாயிறன்று நடைபெறும் உலகக்கோப்பையின் மிகப்பெரிய போட்டி என்று வர்ணிக்கப்படும் போட்டியில் இந்திய அணி தங்களுக்குத்தான் வெற்றி வாய்ப்ப்பு என்ற மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருக்க வேண்டாம் என்று ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

 

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாகிஸ்தானை சாதாரணமாக எடைபோட்டுத்தான் மண்ணைக் கவ்வ நேரிட்டது என்று கங்குலி எச்சரித்தார்.

 

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கங்குலி கூறியதாவது:

 

இந்திய அணி மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஆட்டத்துக்குள் நுழையும் போதே நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற மிதமிஞ்சிய நம்பிக்கையில் நுழைய வேண்டாம்.  2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி இறுதிப் போட்டியில் இந்த மனநிலையில் இறங்கித்தான் தோற்க நேரிட்டது என்று நான் கருதுகிறேன். இது நிச்சயம் மிகப்பிரமாதமான கிரிக்கெட் ஆட்டமாக இருக்கும்” என்றார் கங்குலி

 

சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “பாகிஸ்தான் எப்பொதுமே எதிர்பார்க்க முடியாத, கணிக்க முடியாத அணி, அபாயகரமான அணி. எனவே இந்திய அணி அவர்களை எளிதாக எடைபோட வாய்ப்பேயில்லை. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நாம் என்ன செய்கிறோம் என்பதில் 100% உறுதியாக இந்திய அணி இருக்க வேண்டும். நிச்சயம் நன்கு யோசித்து நன்கு திட்டமிட்ட முடிவாக இருப்பது அவசியம்” என்றார்.

 

கங்குலி இந்தியா-பாகிஸ்தான் போட்டி மீதான எதிர்பார்ப்பு பற்றி கூறும்போது, “மக்கள் கொஞ்சம் அதிக உற்சாகமாகத்தான் இருப்பார்கள். எனக்கு கேப்டனாக பாகிஸ்தானுக்கு எதிராக முதல் அனுபவம் 2003ம் ஆண்டில் அங்கு நாம் வென்றதேயில்லை, ஆனால் ஒருநாள் டெஸ்ட் இரண்டிலும் வென்றோம், என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானுடன் ஆடிய நினைவு இந்திய அணிக்கான மகிழ்ச்சியான தருணங்களே” என்றார்.

 

டெண்டுல்கர் கூறும்போது, “2003ற்கு முன்பே மக்கள் பேசத்தொடங்கி விட்டனர். ரசிகர்கள் தரப்பிலிருந்து என்ன ஆனாலும் சரி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்பதாகவே இருந்தது. பாகிஸ்தானை வென்ற பிறகு என்ன நடந்தாலும் எங்களுக்கு அக்கறையில்லை என்பதாகவே மக்கள் மனநிலை இருந்தது. ஆனால் நான் சொன்னேன் இப்படியெல்லாம் யோசிக்காதீர்கள் என்று.. வீரர்கள் வேறுமாதிரிதான் யோசிப்பார்கள் என்றேன்.” என்றார் சச்சின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x