

நாட்டிங்காமில் நேற்று நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பையின் 26வது ஆட்டத்தில் வார்னரின் அதிரடி 166 ரன்களுடன் 381 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா ஆனால் இலக்கை விரட்டிய வங்கதேசம் விடாப்பிடியாக ஆடி முஷ்பிகுர் ரஹீமின் எதிர்ச்சதத்துடன் போராடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 333 ரன்கள் வரை எதிர்த்து நின்று 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
வங்கவங்கதேசம் தங்களது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரை எடுத்தது.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. வங்கதேசம் 5 புள்ளிகளுடனும் நிகர ரன் விகிதம் மைனஸ் 0.407 என்று 5ம் இடத்தில் உள்ளது. மொத்தம் 714 ரன்கள் குவிக்கப்பட்டு 13 விக்கெட்டுகள்தான் விழுந்தன. இப்படி ஒரு உலகக்கோப்பை பிட்ச்!!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு நிலைப்பெற்று விட்ட அணிகளாகத் தெரிகின்றன. ஆனால் வெளியிலிருந்து இதில் ஏதாவது குளறுபடி செய்யும் என்றால் அது வங்கதேச அணியாகவே இருக்கும், இந்த வங்கதேசம்தான் இனி புதிய பாகிஸ்தான் அணியாகும். அந்தப் போராட்டக் குணம். ஆனால் பாகிஸ்தானிடம் இல்லாத சமயோசிதம் இங்கு உள்ளது, 382 ரன்களை விரட்ட முடியாது என்று தெரியும், அதனால் ரன் விகிதத்தை நல்ல முறையில் வைத்திருக்க ஆடியது. இலக்கை விரட்டுகிறேன் பேர்வழி என்று 200 ரன்களுக்குச் சுருண்டால் 181 ரன்கள் தோல்வி அதன் ரன் விகிதத்தை அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்று விடும், இது தெரிந்துதான் சமயோசிதமாக ஆடியது வங்கதேசம்.
சபீர் ரஹ்மான், பேக்வர்ட் பாயிண்டில் வார்னருக்கு விட்ட கேட்ச் ஆஸ்திரேலியாவின் எழுச்சிக்குக் காரணமானது, வார்னருக்குக் கேட்சை விட்டால் என்ன ஆகும் என்பதை நேற்று வங்கதேச அணியினர் உணர்ந்திருப்பார்கள்.
முதலில் தனது வழக்கமான சரள ஆட்டத்திற்காக கொஞ்சம் தடுமாறிய வார்னர் 110 பந்துகளில் சதம் அடித்த பிறகு இந்த உலகக்கோப்பையின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான 166 ரன்களை எட்டினார். வங்கதேசத்தின் பவுலிங் பலவீனத்தை சரியாக தொடக்கத்தில் வார்னர், பிஞ்ச் பயன்படுத்தவில்லை. ஆனால் அடித்தளம் அமைக்கும் நோக்குடன் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக 121 ரன்களைச் சேர்த்தனர், ஏரோன் பிஞ்ச் 53 ரன்களில் சவுமியா சர்க்காரிடம் ஷார்ட் தேர்ட் மேனில் கேட்ச் ஆனார்.
கவாஜா இறங்கிய பிறகு கொஞ்சம் சூடுபிடிக்க வார்னரும் கவாஜாவும் இணைந்து சுமார் 23 ஒவர்களில் 192 ரன்களைச் சேர்த்தனர். அதுவும் வார்னர் சிக்சர்களை அடிக்கத் தொடங்க 31-40 ஓவர்களில் சுமார் 82 ரன்கள் விளாசப்பட்டது. 121/1லிருந்து ஸ்கோர் 313 ரன்களுக்கு உயர்ந்தது. வார்னர் 35வது ஓவரில் சதமெடுத்த பிறகு அதிரடி ஆட்டம் இன்னும் சூடு பிடித்தது. சதம் அடித்த பிறகு வார்னர் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசித்தள்ளினார். ஆனால் 166 ரன்களில் சவுமியா சர்க்காரிடம் ஷார்ட் தேர்ட்மேனில் கேட்ச் ஆனார்.
கிளென் மேக்ஸ்வெல் 10 பந்துகளில் 32 ரன்களை விளாச ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 40 பந்துகளில் 100 ரன்களுக்கும் மேல் குவித்தது. கடைசி 15 ஓவர்களில் 173 ரன்கள் குவிக்கப்பட்டது, இந்தத் தொடரில் 2வது அதிகபட்ச கடைசி 15 ஓவர் ஸ்கோராகும் இது. முதலிடத்தில் இங்கிலாந்து ஆப்கானுக்கு எதிராக விளாசிய 198 ரன்கள் உள்ளது. முஸ்தபிசுர் ரஹ்மான், ஸ்டீவ் ஸ்மித்தை 1 ரன்னில் வீழ்த்தினார். மேக்ஸ்வெல் ரன் அவுட் 400 வாய்ப்பை குறைத்தது. ஆனாலும் 381/5 என்று வலுவான ஸ்கோரை எட்டச் செய்ய ஸ்டாய்னிஸ் (17), கேரி (11) உதவினர்.
விரட்டலில் வங்கதேசத்தின் தொடக்கம் சரியாக அமையவில்லை. தமிம்-சர்க்காரிடையே புரிதலின்மையால் சவுமியா சர்க்கார் 10 ரன்களில் பிஞ்சிடம் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு வாழ்நாள் ஃபார்மில் இருக்கும் ஷாகிப் அல் ஹசன் (41), தமிம் இக்பால் இன்னிங்ஸை கட்டமைத்தனர். இருவரும் ரன் விகிதத்தை பெரிய அளவில் உயர்த்த முடியாவிட்டாலும் 6க்கும் சற்று குறைவாக கொண்டு சென்றனர். 15 ஓவர்களில் இருவரும் 79 ரன்களைச் சேர்த்தனர். ஸ்டாய்னிஸ் பந்துகளை அடித்து ஆடிய வங்கதேசம் அவரது பிரமாதமான ஸ்லோயர் ஒன் பந்துக்கு ஷாகிப் அல் ஹசனை 41 ரன்களில் இழந்தது. தமிம் இக்பால் 62 ரன்களுக்கு நன்றாக ஆடினார், ஆனால் மிட்செல் ஸ்டார்க் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். அன்றைய போட்டியின் கதாநாயகன் லிட்டன் தாஸ் இம்முறை வந்தவுடனேயே ‘வாங்க வாங்க’ என்றவாறான ஸ்டார்க் பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கி நிலைகுலைந்தார். அதன் பிறகு சிறு அதிரடி 20 ரன்களை அவர் எடுத்து ஆடம் ஸாம்பாவிடம் எல்.பி.ஆனார்.
முஷ்பிகுர் ஒரு முனையில் பிரமாதமான ரிவர்ஸ் ஷாட், ஸ்கூப், ட்ரைவ்கள், கட்கள், புல்ஷாட்கள் என்று 54 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.
மஹமுதுல்லாவும் இவரும் இணைந்து 127 ரன்களைச் சேர்த்தனர். மஹமுதுல்லா 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அரைசதம் எடுத்தார். இருவரும் சேர்ந்து வங்கதேச ஸ்கோரை 300 ரன்களைக் கடக்கச் செய்தனர், ஆனால் ஓவர்கள் 45.3 முடிந்து விட்டது, ஆகவே வெற்றி பெறுவது முடியாத காரியம், ரன்விகிதத்தை உயர்த்திக் கொள்வது முடிந்த காரியம். மஹமுதுல்லா 50 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 69 ரன்கள் எடுத்து கூல்டர் நைலிடம் வெளியேறினார். சபீர் ரஹ்மன், மெஹதி ஹசன், மோர்டசா ஒன்றும் சோபிக்க முடியாமல் போக, முஷ்பிகுர் ரஹிம் 97 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் மிகப்பிரமாதமான எதிர்ச்சதத்தை சாதித்தார். இவரை வீழ்த்த முடியவில்லை. வங்கதேசம் 50 ஓவர்களில் 333/8. ஆட்ட நாயகன் டேவிட் வார்னர். சரணடையாமல் எதிர்த்து நின்று வங்கதேசம் ஆடிய ஆட்டத்தை உண்மையில் பாராட்ட வேண்டும். அடுத்த 3 போட்டிகளையும் வங்கதேசம் வென்றால் அரையிறுதிக்கு வாய்ப்பு கிடைக்கும்.