

நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மனன் வோரா சதமடித்தால் அவருக்கு எனது பேட்டை பரிசளிக்க வேண்டும் என விரும்பினேன் என்று பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் 120 ரன்கள் வித்தியாசத்தில் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் சேவாக் 52 (37 பந்துகள்), மனன் வோரா 65 (32), டேவிட் மில்லர் 40 ரன்கள் (18 பந்துகள்) சேர்க்க, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த நார்தர்ன் அணி 15.2 ஓவர்களில் 95 ரன்களுக்கு சுருண்டது.
வெற்றிக்கு பிறகு பேசிய சேவாக், “இந்தப் போட்டியில் சதமடித்தால் எனது பேட்டை உங்களுக்கு பரிசளிக்கிறேன் என மனன் வோராவிடம் கூறியிருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரால் சதமடிக்க முடியாமல் போய்விட்டது. மொஹாலி ஆடுகளம் டி20 போட்டிக்கு ஏற்றதல்ல. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. பேட்ஸ் மேன்கள் பந்தை அடிக்கலாமா என சிந்திப்பதற்குள் பந்து சுழன்று எங்கேயோ போய்விடுகிறது. பாராட்டுகள் அனைத்தும் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களுக்கே சேரும்” என்றார்.
மனன் வோரா பேசுகையில், “இன்று எனக்கு மிக நல்ல நாள். நான் தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாகக் கையாண்டேன். அதனால் மிகப்பெரிய ஸ்கோரைக் குவிக்கலாம் என நினைத்தேன்” என்றார். சேவாக் தனது பேட்டை பரிசளிப்பதாகக் கூறியபோது உங்களின் மனநிலை எப்படியிருந்தது என்று மனன் வோராவிடம் கேட்டபோது, “நான் அதற்காகக் காத்திருக்கிறேன் என்று கூறினேன். ஒரு ஷார்ட் பந்தை தவறாகக் கணித்து ஆடியதால் சதம் நழுவியது” என்றார்.