Last Updated : 13 Jun, 2019 12:00 AM

 

Published : 13 Jun 2019 12:00 AM
Last Updated : 13 Jun 2019 12:00 AM

ஷிகர் தவண் காயத்தால் ரிஷப் பந்த்துக்கு அழைப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவண் காயம் அடைந்துள்ளதால் உலகக் கோப்பை தொடரில் அவரது இடத்தை நிரப்பும் விதமாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்ற போது இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவணுக்கு இடது கட்டை விரல் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இந்திய அணி பங்கேற்கும் அடுத்த 3 ஆட்டங்களிலும் ஷிகர் தவண் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஷிகர் தவண் இடத்தை நிரப்பும் விதமாக ரிஷப் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வரும் 16-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தின் போது ரிஷப் பந்த், மான்செஸ்டர் நகரில் இருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்தில் உள்ள பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி ரிஷப் பந்த் இங்கிலாந்து புறப்பட்டு வருகிறார். மான்செஸ்டர் நகரில் வரும் 16-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஆட்டத்துக்கு முன்னதாக ரிஷப் பந்த், இங்கிலாந்து வந்து சேர்ந்துவிடுவார்.

ஷிகர் தவண் தொடரில் இருந்து முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாதால் ரிஷப் பந்த், இந்திய அணியுடன் பயணிக்க முடியாது. மான்செஸ்டர் நகரில் ரிஷப் பந்த் தங்கியிருந்தாலும் இந்திய அணியின் ஒரு அங்கமாக கருதப்படமாட்டார். இதனால் அவர், வலைப் பயிற்சி பந்து வீச்சாளர்களான கலீல் அகமது உள்ளிட்டவர்களுடனே பயணிப்பார்.

போட்டியின் நாளன்று வீரர்கள் அறைக்கு செல்லவும் ரிஷப் பந்த்துக்கு அனுமதி கிடையாது. ஐசிசி ஊழல் தடுப்பு விதிகளின்படி பிரதானமாக தேர்வு செய்யப்படும் வீரர்கள் மட்டுமே அணியின் பேருந்திலும், ஓய்வறையிலும் தங்க முடியும்” என்றார்.

இந்திய அணி நிர்வாகம் ஷிகர் தவண், தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் விளையாட முடியுமா என்ற விஷயத்தில் இறுதி முடிவு எடுத்த பிறகே ரிஷப் பந்த் முறைப்படி மாற்று வீரராக அணிக்குள் நுழைய முடியும். 21 வயதான ரிஷப் பந்த் கடந்த ஒரு வருட காலமாக இந்திய கிரிக்கெட்டில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அதிரடியாக விளையாடி சதம் விளாசிய அவர், கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே ரிஷப் பந்த் சேர்க்கப்படாதது முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரது மத்தியில் கடும் விவாதப் பொருளாக மாறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x