

உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோற்றவுடன் எனக்கு இருந்த மன அழுத்தத்திற்கு தற்கொலை செய்து கொள்ளலாம் எனத் தோன்றியதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் கடந்த 16-ம் தேதி ஓல்ட்டிரா போர்டு மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து 7-வது முறையாக பாகிஸ்தானை வென்று இந்திய அணி பெருமையை தக்கவைத்துக் கொண்டது.
இந்தத் தோல்விக்குப் பின் பாகிஸ்தான் வீரர்களை சமூக வலைதளங்களில் அந்நாட்டு ரசிகர்கள் கடுமையாகச் சாடினர். விமர்சித்தனர். சிலர் தரம் தாழ்ந்து பேசினார்கள். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் மனவேதனை அடைந்தனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய பின் பாகிஸ்தான் அணி ஓரளவுக்கு தன்னம்பிக்கை பெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. அடுத்துவரும் 3 போட்டிகளிலும் அந்த அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.
இந்த சூழலில் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றபோது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு அந்த அளவுக்கு அழுத்தங்கள் வந்தன.
இந்த அழுத்தங்களைச் சமாளிக்க முடியாமல், கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட எனக்குத் தோன்றியது. ஆனால், இது ஒருபோட்டிதானே இன்னும் அதிகமான போட்டிகள் இருக்கின்றதே என்று தோன்றியது.
ஒரு போட்டியில் நீங்கள் தோல்வி அடையலாம். ஆனால், அடுத்த போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றுவிடமுடியும். இது உலகக்கோப்பை என்று மனதுக்குள் தேற்றிக்கொண்டேன்.
அதுமட்டுமல்லாமல் ஊடகத்தினரின் பேச்சுகள், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால், வேறு வழியின்றி நாங்கள் வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலைக்குச் சென்று, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினோம்.
அடுத்து எங்களுக்கு இருக்கும் 3 ஆட்டங்களும் மிக முக்கியமானது. குறிப்பாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் மிகவும் சவாலானது. அந்தப் போட்டியில் நாங்கள் எங்களின் முழுத் திறமையையும், சிறந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்தினால்தான் வெல்ல முடியும். நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் எங்களால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எங்களால் எந்த அணியையும் வெல்ல முடியும் எனும் நம்பிக்கை இருக்கிறது. நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என அனைத்து அணிகளையும் வீழ்த்துவோம். இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்ததைப் போல் வெல்வோம். பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் மூன்று துறைகளிலும் எங்களின் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவோம்''.
இவ்வாறு மிக்கி ஆர்த்தர் தெரிவித்தார்.