Last Updated : 20 Jun, 2019 10:50 AM

 

Published : 20 Jun 2019 10:50 AM
Last Updated : 20 Jun 2019 10:50 AM

எல்லாம் கை நழுவியது; எனக்கு 5 வயது கூடுதலாகிவிட்டது போல் உணர்வு: தோல்விக்குப் பின் டூப்பிளசிஸ் வேதனை

எங்கள் கையை நழுவி அனைத்தும் சென்றுவிட்டது. நியூஸிலாந்துடனான தோல்விக்குப் பின் எனக்கு 5 வயது கூடுதலாகிவிட்டபோதுபோல் உணர்கிறேன் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

பிர்மிங்ஹாமில் உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து நியூஸிலாந்து அணி மோதியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் 138 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார். இவருக்கு உறுதுணையாக கொலின் டி கிராண்ட்ஹோம் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும் மோசமான பீல்டிங், கேட்சுகளை கோட்டை விட்டது, பேட்டிங்கில் மந்தமாகச் செயல்பட்டு கூடுதலாக 30 ரன்களைச் சேர்க்காதது ஆகியவை தோல்விக்குக் காரணமாக அமைந்தன.

குறிப்பாக, இமரான் தாஹிர் வீசிய 38-வது ஓவரில் வில்லியம்ஸன் பேட்டில் பந்துபட்டு சென்ற சத்தம் நன்றாக காதில் கேட்ட பின்பும், ஏன் விக்கெட் கீப்பர் டீகாக் நடுவரிடம் முறையிடவில்லை என்பது தெரியவில்லை. தோல்வியை விரும்பி ஏற்றுக்கொண்டார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இத்தோல்வி மூலம் தென் ஆப்பிரிக்க அணி 6 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து, 4 போட்டிகளில் தோல்வி என 3 புள்ளிகளுடன் உள்ளது. இனிவரும் 3 போட்டிகளில் வென்றால்கூட தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் தோல்விக்குப் பின் ஊடகங்களிடம் பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

''இது மிகவும் கடினமான போட்டியாக இருந்தது உங்களுக்குத் தெரியும். இந்தத் தோல்வியின் வேதனையை நாங்கள் மிகக் கடுமையாக உணர்கிறோம்.

எங்கள் வீரர்கள் மிகவும் வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்தத் தொடர் தோல்விகளால் எனக்கு 5 வயது கூடுதலாகிவிட்டதுபோல் இருக்கிறது. என் உடல் புண்ணாகிவிட்டதைப் போல் உணர்கிறேன். நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டுச் செல்கிறோம். ஒரு கேப்டனாக என்னால் அணி வீரர்களிடம் குறிப்பிட்ட அளவுதான் கேட்க முடியும். அவர்களும முடிந்தவரை போராட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் வில்லியம்ஸன் அடித்த ஷாட் பேட்டில் பந்து சென்றதா என்பதை நாங்கள் கவனிக்கவில்லை. அதை விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக் பக்கத்தில் இருந்தும் கவனிக்கவில்லை. இதை தவறவிட்டுவிட்டோம் என நினைக்கிறோம்.

நான் போட்டி முடிந்தபின்புதான் பேட்டில் பந்து பட்டதாக அறிந்தேன். வில்லியம்ஸன் கூட தன்னுடைய பேட்டில் பந்து பட்டதை என்னால் உணரமுடியவில்லை என்று தெரிவித்துவிட்டார்.

எங்களுடைய பேட்ஸ்மேன்கள் இன்னும் கூடுதலாக ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும். எதிரணியைப் பார்த்தால், மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்ததைப் பார்க்க முடியும். இளம் வீரர்களான வான் டர் டூசென், மார்க்ரம் ஆகியோர் இருந்தும், ஸ்கோர் செய்ய முடியவில்லை''.

இவ்வாறு டூப்பிளசிஸ் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x