Published : 26 Jun 2019 05:30 PM
Last Updated : 26 Jun 2019 05:30 PM

ஷாஹின் அப்ரீடி பந்து வீச்சு எழுச்சி; வில்லியம்சன் நிற்க 4 விக்கெட்டுகளை இழந்து நியூஸி. அவதி

பர்மிங்ஹாமில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 33வது ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்து பாகிஸ்தான் பந்து வீச்சில் கடுமையாகத் திணறி வருகிறது.

 

அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 24 ரன்களுடன் மேலும் ஒரு போருக்குத் தயாராக, நியூஸிலாந்து 4 விக்கெட்டுகளை சரசரவென இழந்து 13 ஓவர்கள் முடிவில் 46 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

 

முதல் ஓவரை முகமது ஹபீஸ் வீச, 2வது ஓவரில் முகமது ஆமீர் தன் முதல் பந்திலேயே கப்திலை (5) பவுல்டு செய்தார். நல்ல பந்துதான் என்றாலும் தவறு கப்தில் பக்கமே. ஆஃப் ஸ்டம்புக்குக் குறுக்காக ஒரு பந்தை ஆமீர் எடுக்க உடலுக்கும் பந்துக்கும் இடைவெளி கொஞ்சம் கூடுதலான நிலையில் ஆட முயன்ற போது மட்டையில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது. ஐயத்திற்கிடமான முறையில் கால் நகர்த்தலால் பிளேய்ட் ஆன் ஆனார்.

 

கொலின் மன்ரோ 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்து ஷாஹின் அப்ரீடி வீசிய பந்தை ஸ்லிப்பில் எட்ஜ் செய்து வெளியேறினார். கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் பந்தாகும் இது.

 

அடுத்ததாக அபாய வீரர் ராஸ் டெய்லர் 3 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமெடின் அற்புத கேட்சுக்கு ஷாஹின் அப்ரீடியிடம் வெளியேறினார். சரியாக ஆஃப் ஸ்டம்ப் அதற்கு சற்று வெளியே என்ற லைனில் வீசி சற்றே கூடுதலாக எழுப்ப ராஸ் டெய்லர் எட்ஜ் செய்ய வலது புறம் எழும்பி ஒரு கையில் சர்பராஸ் கேட்ச் எடுத்தார், மிக முக்கிய கூட்டணியை உடைத்தார் ஷாஹின் அப்ரீடி.

 

டாம் லேதம் அடுத்ததாக ஷாஹின் அப்ரீடியின் துல்லியமான ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்தை தடுத்தாட முயன்று எட்ஜ் செய்ய சர்பராஸ் மீண்டும் கேட்ச் எடுத்தார்.

 

கேன் வில்லியம்சன் மிக அருமையாக மொகமது ஆமீரை ஒரு ராஜ கவர் ட்ரைவ் மற்றும் ஒரு அற்புத கட் ஷாட்டை ஒரே ஓவரில் ஆடி தைரியம் காட்டினார். ஆனால் மற்ற வீரர்கள் ஷாஹின் அப்ரீடியின் எழுச்சிக்கு வீழ்ந்தனர். நியூஸிலாந்து தற்போது 16 ஓவர்களில் 52/4 என்று உள்ளது, நீஷம், வில்லியம்சன் ஆடி வருகின்றனர்.

 

ஷாஹின் அப்ரிடி 6 ஓவர்கள் 3 மெய்டன் 9 ரன்கள் 3 விக்கெட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x