Published : 13 Jun 2019 07:14 AM
Last Updated : 13 Jun 2019 07:14 AM

வார்னர், பிஞ்ச், கமின்ஸ் அபாரம்; ஆஸி.க்கு கிலி காட்டிய ஹசன் அலி, வஹாப் ரியாஸ் : த்ரில் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

டாண்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலகக்கோப்பை 2019-ம் 17வது போட்டி கடைசி வரை பரபரப்பாக அமைந்தது, இதில் ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

 

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா வார்னர் (107), பிஞ்ச் (82) ஆகியோரது அபார அடித்தளத்துக்குப் பிறகு 223/2 என்ற நிலையிலிருந்து 84 ரன்களுக்கு அடுத்த 8 விக்கெட்டுகளை இழந்து 49 ஓவர்களிலேயே 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் மிகப்பிரமாதமாக வீசிய மொகமது ஆமிர் 10-2-30-5 என்று அசத்தினார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 30 ஓவர்களில் 160/6 என்று தட்டுத்தடுமாறியது ஆனால் ஹசன் அலி (32 ரன்கள் 15 பந்து 3 நான்குகள் 3 ஆறுகள்), வஹாப் ரியாஸ் (45 ரன், 39 பந்து 2 நான்கு 3 ஆறு), சர்பராஸ் அகமட் (40) ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு கிலி ஏற்படுத்தினாலும் மிட்செல் ஸ்டார்க், கமின்ஸ் பந்துவீச்சில் பாகிஸ்தானை 266 ரன்களுக்குச் சுருட்டியது. ஆனால் இன்னும் 26 பந்துகள் மீதமிருந்தது.

 

உண்மையில் ஆஸ்திரேலியா 350 ரன்கள் சென்றிருக்க வேண்டும், ஆனால் மொகமது ஆமிர் முழுவதுமே சிறப்பாக வீச ஷாஹின் ஆப்ரிடி, ஹசன் அலி, வஹாப் ரியாஸ் இறுதி ஓவர்களில் டைட் செய்ய ஆஸ்திரேலியா 307 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

 

பாகிஸ்தான் அணித்தேர்வில் கடும் தவறு செய்தது, ஆஸ்திரேலியா முழுதும்  வேகப்பந்து வீச்சை வைத்திருந்ததால் தாங்களும் ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்கினர். ஷதாப் கான் தவிர்க்கப்பட்டார், மிக மோசமான முடிவு, இமாத் வாசிம் இருந்திருக்கலாம்.

 

பாக். பந்து வீச்சு மோசம்... பீல்டிங் போதாது, கேட்ச்கள் ட்ராப்

 

தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்து பாகிஸ்தான் படுமோசமாக பந்து வீசியது, ஆமிர் ஒரு முனையில் ஏரோன் பிஞ்ச்சையும் வார்னரையும் ஆட்டு ஆட்டு என்று ஆட்ட ஷாஹின் அப்ரீடி ரன்களை வாரி வழங்கினார், ஒரே ஷார்ட் பிட்ச், ஃபுல் லெந்த் பந்துகள், ஓவர் த்ரோ, மிஸ்பீல்ட்கள் என்று வழக்கமான ஒரு மட்டமான பீல்டிங் அணியாக பாகிஸ்தான் திகழ்ந்தது, இதில் ஏரோன் பிஞ்சுக்கு வஹாப் ரியாஸ் பந்தில் ஆரம்பத்திலேயே ஸ்லிப்பில் ஆசிப் அலி கையில் வந்த கேட்சை விட, பிறகு ஹபீஸ் பந்தில் ஒரு கூர்மையான கேட்சை கேப்டன் சர்பராஸ் விக்கெட் கீப்பிங்கில் விட்டார். வார்னருக்கு தேர்ட்மேனில் சுலப வாய்ப்பு விடப்பட்டது.

பாகிஸ்தான் பீல்டிங் கேவலம். ஹசன் அலியின் பவுலிங் முதல் ஸ்பெல் சுத்த மோசம், வலது இடது பேட்டிங்குக்குச் சரியாக தகவமைக்க முடியாமல் மாறி மாறி லெக் திசையில் வீசி வாங்கிக் கட்டிக் கொண்டார், மொத்தம் 60 பந்துகளில் 28 டாட் பால்கள் வீசியும் 67 ரன்கள் கொடுத்தார் என்றால் எவ்வளவு பவுண்டரி பந்துகள் என்று குறித்துக் கொள்ளலாம். 9 பவுண்டரிகளை அவர் விட்டுக் கொடுத்தார்.  ஸ்பின் போட ஆளில்லாததால் பார்ட் டைம் ஸ்பின்னர்களான ஹபீஸ், ஷோயப் மாலிக் வீச நேரிட்டது, ஆனால் பிஞ்ச், மேக்ஸ்வெல் இவர்களை வெளுத்துக் கட்டினர். இருவரும் 11 ஓவர்களில் 86 ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

வார்னர், பிஞ்ச் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 146 ரன்களைச் சேர்த்தனர். பிஞ்ச் 84 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசி ஆமிர் பந்தில் வெளியேறினார்.

 

கவாஜாவுக்கு இழைக்கப்படும் துரோகம்

 

ஆஸ்திரேலியா உடனேயே கவாஜாவை இறக்கியிருக்க வேண்டும், ஆனால் ஸ்மித்தை இறக்கினர். கவாஜா 2019ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர்களில் முதலிடம் வகிக்கிறார், கோலியை விடவும் அதிகமாக எடுத்து முதலிடத்தில் உள்ளார் கவாஜா.ஆனால் அவரை இறக்காமல் ஸ்மித், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல் என்று அனைவரையும் இறக்கிய பிறகு கவாஜா இறக்கப்பட்டார்.

 ஸ்மித் 10 ரன்களில் ஹபீஸிடம் வெளியேறினார். மேக்ஸ்வெல் 10 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து 3வது விக்கெட்டாக ஆட்டமிழந்து சரிவைத் தொடங்கி வைத்தார், ஷாஹின் ஷா அப்ரீடி பொதுவாக இவர் இந்தப் போட்டியை மறக்க வேண்டும், ஆனால் மேக்ஸ்வெலை பவுல்டு செய்து சரிவைத் தொடங்க டேவிட் வார்னர் மிகப்பிரமாதமாக ஆடி 111 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்து அடுத்ததாக டீப் பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கவாஜா (18), ஷான் மார்ஷ் (23) ஆகியோர் 5 ஓவர்களில் 35 ரன்களைச் சேர்த்தனர். விக்கெட் கீப்பர் கேரி 20 ரன்களை எடுத்து கொஞ்சம் வலு சேர்த்தார், ஆனால் இவர்கள் மூவரையும் மொகமது ஆமிர் காலி செய்தார். கடைசி 4 விக்கெட்டுகள் 8 ரன்களில் விழ ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 307 ஆல் அவுட்.

 

பாகிஸ்தான் இருள் மேகத்தில் சிறு மின்னல் பாபர் ஆஸம்:

பாகிஸ்தான் இலக்கை விரட்ட களமிறங்கிய போது ஃபகார் ஜமான், கமின்ஸ் பந்தை கட் செய்கிறேன் என்று தேர்ட் மேனில் கேட்ச் ஆகி 2 ரன்களில் வெளியேறினார்.

பாபர் ஆஸம் களமிறங்கி சூழ்நிலைக்கு எதிராக சிலபல பிரமாதமான கவர் ட்ரைவ்களை ஆடினார், என் உலகம் தனி, என் வழி தனி வழி என்பது போல் பாபர் ஆஸம் ஆடினார், உண்மையில் இவர் இந்த அணி வரிசையில் இடம்பெற வேண்டியவர் அல்ல, 28 பந்துகள் இவர் ஆடினார், கண்களில் ஒத்திக் கொள்ளும் ஷாட்கள், மொத்தம் 7 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார், பிரமாதமான ட்ரைவ்கள் கண்களுக்கு விருந்து.

ஆனால் பாகிஸ்தானுக்கேயுரிய விதி அங்குதான் விளையாடியது. ஆனால் இளம் ரத்தம் அல்லவா ஏற்கெனவே சூடாகியதால் பவுன்சர் போட்டவுடன் புல் ஷாட் ஆடி ரிச்சர்ட்சனிடம் கேட்ச் கொடுத்தார். கூல்ட்டர் நைலின் 50வது ஒரு நாள் விக்கெட்டாகும் இது.

 

இமாம் உல் ஹக், ஹபீஸ் சேர்ந்து 80 ரன்களைச் சேர்த்து பாகிஸ்தானுக்கு நம்பிக்கை அளித்தனர். 75 பந்துகளை ஆடிய இமாம் உல் ஹக் 7 பவுண்டரிகளுடன் 53 என்று தன் 6வது ஒருநாள் அரைசதம் எடுத்து  லெக் திசையில் கமின்ஸின் வைடு பந்தை ஆடி கேட்ச் ஆனார். விட்டிருந்தால் இது வைடு. ஹபீஸ் மிகப்பிரமாதமாக 3 பவுண்டரி  1 சிக்சருடன் 49 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தவர் ஏரோன் பிஞ்ச் வீசிய எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்க வேண்டிய புல்டாசை நேராக குறிபார்த்து ஸ்டார்க் கையில் அடித்தார், படு மட்டமான பந்துக்கு அதைவிட மட்டமான ஷாட்.  பிஞ்சுக்கு யாராவது விக்கெட் கொடுக்க முடியுமா? அதான் பாகிஸ்தான்! ஷோயப் மாலிக் வாழ்நாளில் என்றுமே ஆடச் சாத்தியமில்லாத பந்தை கமின்ஸ் வீசினார், லெந்தில் பிட்ச் ஆகி உள்ளே ஆஃப் கட்டராக மாலிக்கை இருபாதியாக்கிய பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு கேரியின் அபார கேட்ச் ஆனது.  பிஞ்சுக்கு கேட்சை விட்ட ஆசிப் அலி இறங்க ரிச்சர்ட்சனின் ஆக்ரோஷ எகிறு பந்துக்கு 5 ரன்களில் வெளியேற 160/6 என்று பாகிஸ்தான் தோல்வியின் விளிம்பில் இருந்தது.

 

ஆஸ்திரேலியாவுக்கு கிலி ஏற்படுத்திய ஹசன் அலி, வஹாப் ரியாஸ் இன்னிங்ஸ்:

 

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமடுக்கு ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவ விட்டு வாழ்வு கொடுத்தார் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி.  அப்போதுதான்  ஹசன் அலி ஒரு சிறு அதிர்ச்சி அதிரடியை வழங்கினார்.

 

ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட்ஸன் புல்டாஸ்களாக வீசினார், ஆனாலும் அவர் வீசிய நல்ல பந்துகளை அடுத்தடுத்து சிக்சர்கள் விளாசினார் ஹசன் அலி.  மேக்ஸ்வெல், கூல்டர் நைல், ரிச்சர்ட்சன் என்று இவரிடம் அனைவரும் அடி வாங்கினர், மொத்தம் 15 பந்துகளே நின்ற இவர் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 32 ரன்கள் சேர்க்க ஸ்கோர் 3 ஓவர்களில் 160/6லிருந்து 200 ரன்களானது, அப்போது ரிச்சர்ட்ஸன் ஒரு பவுன்சரை வீச அது எட்ஜ் ஆக ஃபைன் லெக்கில் கேட்ச் ஆனது.

அடுத்து இறங்கினார் வஹாப் ரியாஸ், இவர் காட்டடி தர்பார் நடத்தினார்.  மேக்ஸ்வெலை வெளுத்துக் கட்டினார், கமின்ஸ் ஓவர்கள் முடிவடைய, யார் வீசப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியானது, ஸ்டார்க் மட்டுமே ஒரு பவுலருக்கு ஓவர்கள் உள்ளன, ரிச்சர்ட்சன் புல்டாஸ்களை வீசிக் கொண்டிருந்தார், வஹாப் காட்டடியில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 32 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க சர்பராசுடன் கூட்டணி 64 ரன்களாக ஸ்கோர் 44.1 ஒவர்களில் 264/7 என்று பாகிஸ்தானுக்கு ஒரு அரிய வெற்றியைக் கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.  அப்துல் ரஸாக் போன்றவர்கள் இருந்தால் ஆஸ்திரேலியாவுக்குத் தோல்விதான்.

 

ஆனால் பாகிஸ்தானுக்கு எங்கு வெற்றி பெற்று விடுவோமோ என்ற பயம் வந்து விட்டது போலும், ஸ்டார்க் வர வஹாபின் மட்டை பின் வாங்கத் தொடங்கியது  ஒரு பந்து மெலிதான எட்ஜ் எடுக்க கேரி பிடித்து முறையீடு செய்தார், நாட் அவுட், ஆனால் டைம் காலியாகிக் கொண்டிருக்க கடைசி விநாடியில் ரிவியூ கேட்டார் ஏரோன் பிஞ்ச். ரிவியூவில் அவுட். அந்த நடுவர் பல்லியாகுருகேவுக்கு கண்ணும் தெரியவில்லை, காதும் கேட்கவில்லை. வஹாப் வெளியேற ஸ்டார்க் முடித்து வைக்க 266 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல்வுட், அனாமத்தாக இன்னமும் 26 பந்துகள் மீதம்.  ஆஸ்திரேலியா தரப்பில் கமிஸ் 33 ரன்களுக்கு 3 விக்கெட், ஸ்டார்க், ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்.  ஆட்ட நாயகன் டேவிட் வார்னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x