

இந்தியாவின் மிகச்சிறந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட் மிடில் ஆர்டர் இடது கை வீரர், மேட்ச் வின்னர், என்று பலவிதங்களிலும் பாராட்டப்பட்ட ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங் பற்றி அவருடன் சமகாலத்தில் விளையாடிய ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் குறிப்பாக முதன் முதலில் யுவராஜ் சிங்கைப் பார்த்தது பற்றி அவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் எழுதிய பத்தியில் குறிப்பிட்ட ருசிகரத் தகவல் இதோ:
யுவி எனக்கு 20 ஆண்டுகளாக நண்பன். நான் எப்போதுமே அவரது நலம் விரும்பி, இந்திய அணியில் அவரது கிரிக்கெட் கரியர் மிகப்பெரியது. எனக்கும் யுவிக்கும் பழக்கம் நீண்டகால தொடர்புடையது.
நான் முதன் முதலில் அவரைப் பார்த்தது சண்டிகாரில் ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா அகாடெமியில்தான். எனக்கு வயது 14. நான் அவரை முதன் முதலில் பார்த்த போது என்னை ஈர்க்கவில்லை. யுவி நீலக்கலர் மாருதி 800-ல் வந்து இறங்கினார், லைசென்ஸ் கிடையாது ஒன்றும் கிடையாது. இவர்தான் யோக்ராஜ் சிங்கின் மகன் என்று எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
ஒரு டீன் ஏஜர் அப்போது தன் சொந்தக் காரில் வந்து மைதானத்தில் இறங்குவது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாதது. பிறகு பயிற்சியில் என் அளவு வேகம் வீசும் ஒரு இன்ஸ்விங்கர் பவுலரிடம் பவுல்டு ஆனார். நான் ஜலந்தரைச் சேந்தவன், நான் அப்போது யுவியைப் பற்றி நினைத்தேன், “கடவுளே, இந்தப் பையன் வீணாய்ப்போன ஒரு பணக்கார வீட்டுப்பையன், இவர்களுக்கு கடினமாக உழைக்க வராது என்றே நினைத்தேன்.
பிறகு அண்டர் -16 பஞ்சாப் அணிக்காக சிறிது காலம் கழித்து இருவரும் சேர்ந்து ஆடினோம். அதிலிருந்து இருவரும் நண்பர்களானோம், விஜய் மெர்சண்ட் டிராபியில் யுவராஜ் ஆடியதைப் பார்த்தேன். ரன்களை மலைபோல் குவித்தார் யுவராஜ். நட்பு என்ற வந்த பிறகு சண்டிகாரில் அடிக்கடி யுவராஜ் வீட்டுக்குப் போய் விடுவேன். நான் அடிக்கடி தூங்கி விடுவேன், அப்போதெல்லாம் யுவி தந்தை யோக்ராஜ் சிங் யுவிக்கு ஆஸ்ட்ரோ டர்ஃபில் இரவு விளக்கில் தன் வீட்டிலேயே பிளாஸ்டிக் பந்தில் பந்து வீசி ட்ரெய்னிங் கொடுப்பார், இல்லையெனில் ஈரத்தில் நனைத்த டென்னிஸ் பந்து.
இத்தகைய பயிற்சியினால்தான் எந்த ஒரு வேகப்பந்தும் யுவராஜை பயமுறுத்த முடியாது. நான் பார்த்த ஒரு ஆண்டில், அதாவது இவன் தேற மாட்டான் என்று நினைத்ததிலிருந்து அப்படியே மாறிபோன என் எண்ணத்தில் யுவராஜ் ஒரு கற்பனை செய்ய முடியாத அசாத்திய ப்ளேயர் ஆனார். இறங்குவார் பவுண்டரி, சிக்சர்கள்தான் சும்மா மட்டைப் போடுவது அவருக்குப் பிடிக்காது. யு-16 போட்டி ஒன்றில் இவர் அடித்த ஷாட்டில் கையை வைத்த பீல்டரின் மணிக்கட்டு உடைந்தது. அவ்வளவு பவர் இவரது ஷாட்களில் அப்போதிலிருந்தே இருக்கும்.