Last Updated : 15 Jun, 2019 07:45 AM

 

Published : 15 Jun 2019 07:45 AM
Last Updated : 15 Jun 2019 07:45 AM

ரூட் 2-வது சதத்தால் வெற்றி: 40 ஆண்டுகால வரலாற்றை தக்கவைத்தது இங்கிலாந்து.: மே.இ.தீவுகளின் பவர் பேட்டிங், எகிறும் பந்துவீச்சு பலிக்கவில்லை

ஜோ ரூட்டின் அபார சதம், ஆர்ச்சர், மார்்க் வூட்டின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றால், சவுத்தாம்டனில் நேற்று நடந்த உலகக் கோப்பையின் 19-வது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

மேற்கிந்தியத்தீவுகள் வீரர்களின் வழக்கமான எகிறும் பவுன்ஸர் பந்துவீ்ச்சு, ஆக்ரோஷமான பவர் ஹிட்டிங் பேட்டிங் நேற்று இங்கிலாந்திடம் பலிக்கவில்லை, இவை இரண்டும் எங்கே சென்றது எனவும் தெரியவில்லை. களத்தில் ஆக்ரோஷம் மட்டும் இருந்தால் போதாது, ஸ்மார்ட் கிரிக்கெட்டும் தேவை என்பதை இங்கிலாந்து உணர்த்தியது.

முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 44.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 101 பந்துகள் மீதம் இருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் 3 வெற்றி ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது. மேற்கிந்தியத்தீவுகள் 4 போட்டிகளில் ஒருவெற்றி, 2 தோல்விகள், ஒருபோட்டி ரத்து என 3 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளனர்.

40 ஆண்டுகள் சாதனை

2011-ம்ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கு பின் இரு அணிகளும் உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதவில்லை. 8 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இரு அணிகளும் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதுதவிர கடந்த சில நாட்களாக மழையால் அடுத்தடுத்து 2 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால், இந்த போட்டிக்கு எதிர்ப்பார்ப்பு கூடியது.

கடந்த 1979-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குப்பின் இங்கிலாந்து அணியை மேற்கிந்தியத்தீவுகள் அணி வென்றதில்லை. அதாவது 40 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியை உலகக்கோப்பைப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகளால் வீழ்த்த முடியவில்லை

1987-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டித்தொடரில் இருஆட்டங்கள், 1992-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஒரு ஆட்டம், 2007-ம்ஆண்டு, 2011-ம்ஆண்டு உலகக்கோப்பை என அனைத்திலும் இங்கிலாந்து அணியிடம் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோல்வி அடைந்தது.

இப்போது இங்கிலாந்து மீண்டும் வெற்றி பெற்றதன் மூலம், உலகக்கோப்பையில் 40 ஆண்டுகளாக மேற்கிந்தியத்தீவுகளால் வெல்ல முடியாத அணி எனும் பெருமையை இங்கிலாந்து தக்கவைத்துக் கொண்டது.

சவுத்தாம்டன் ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதம், காற்றில் நிலவிய ஈரப்பதம் ஆகியவற்றை டாஸ்வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பயன்படுத்திக்கொண்டு பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதை சரியாகப் பயன்படுத்தி பிளங்கெட், வூட், வோக்ஸ் டார்ஆர்டர் பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்கள். அதன்பின் வெயில் அதிகரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஆடுகளம் மாறினாலும், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோரின் தாக்குதல் பந்தவீச்சு, ரூட்டின் புத்திசாலித்தனமான சுழற்பந்துவீச்சு ஆகியவற்றால் ேமற்கிந்தியத்தீவுகள் அணி 212 ரன்களில் சுருண்டது.

ஆனால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் உதிரிகள் செல்வதை இன்னும் குறைக்க முடியாம் சிரமப்படுகிறார்கள். இந்த ஆட்டத்தில் கூட 12 வைடு பந்துகளை வீசியுள்ளார்கள். இந்த 12 ரன்களையும் குறைத்திருந்தால், மேற்கிந்தியத்தீவுகள் 200 ரன்களில் சுருண்டிருக்கும்.

ஜேஸன் ராய், மோர்கன் காயத்தால் பாதியிலேயே வெளியேறியதால், தொடக்க ஆட்டக்காரராக ஜோ ரூட், பேர்ஸ்டோவுடன் களமிறங்கினார். புதிய பொறுப்பை கச்சிதமாக செய்த ரூட் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக தொடங்கி, பின்னர் அதிரடிக்கு மாறினார். தனது ஒருநாள் அரங்கில் 16-வது சதத்தையும், உலகக்கோப்பைப் போட்டியில் 2-வது சதத்தையும் பதிவு செய்தார். 94 பந்துகளில் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ரூட் ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

அதேபோல பேர்ஸ்டோவும் தொடக்க வீரராக பொறுப்புடன் செயல்பட்டு நல்ல அடித்தளத்தை அமைத்தார். வழக்கமாக கடைசிவரிசையில் களமிறங்கும் வோக்ஸ் 3-வது வீரராக களமிறங்கி தனது ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தியது, இங்கிலாந்தில் எந்த நிலையிலும் விளையாடும் வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த தொடரில் அனைத்து அணிகளுக்கும் உணர்த்தியது. நிச்சயமாக இந்த தொடரில் இங்கிலாந்து அனைத்து அணிகளுக்கும் வரும் போட்டிகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.

இது ஸ்மார்ட் கிரிக்கெட் இல்லை

மேற்கிந்தியத்தீவுகள் அணியைப் பொருத்தவரை முரட்டுத்தனமான ஆக்ரோஷம், ஆவேசம் மட்டுமே களத்தில் இருக்கிறதே தவிர ஸ்மார்ட் கிரிக்கெட் இல்லை.

களத்துக்கு வரும் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்கத்தான் ஆசைப்படுகிறார்களேத் தவிர ஸ்ட்ரைக்கை மாற்றி, பாட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும், ஒரு ரன், 2 ரன்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பேட் செய்கிறார்கள். இதனால்தான் எந்த விக்கெட்டும் நிலைக்க முடியாமல் இருக்கிறது.

குறிப்பாக கெயில், ரஸல், ஹோப் ஆகியோர் ஒருரன், 2 ரன் எடுப்பதற்கு அதிகமான சோம்பேறித்தனம் செய்கிறார்கள். மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரி, சிக்ஸருக்கு அடித்துவிட்டு, மற்ற பந்துகளை சிங்கில் ரன்களாக மாற்றினாலே ரன்களும் சேரும்,களத்திலும் நிற்க முடியும். இந்த நுணுக்கம் இல்லாதவரை திறமை இருந்தும், பவர் ஹிட்டர்ஸ் இருந்தும் பயனில்லை.

ஒழுக்கமில்லாத பந்துவீச்சு

ரஸல், ஹோல்டர், கெயில்,லூயிஸ், பிராத்வெய்ட் போன்ற பேட்ஸ்மேன்கள் தங்களுடன் விளையாடும் வீரர்களுடன் பாட்னர்ஷிப்பை வரும் போட்டிகளில் உருவாக்கினால்தான் மீள முடியும். இல்லாவிட்டால் , மேற்கிந்தியத்தீவுகள் அணி சராசரி அணியாகவே கருதப்படும்.

பந்துவீச்சிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கடந்த போட்டியின் ஆவேசம் காணப்படவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக காட்ரெல், ரஸல், தாமஸ், கேப்ரியல் ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் பந்துகள் எகிறின. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் இவர்களின் துல்லியத்தன்மை, பவுன்ஸர் எங்கே சென்றது எனத் தெரியவில்லை. 7பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் அனைவரும் சராசரியாக 7 ரன்களை வாரிக்கொடுத்துள்ளார்கள்.

இங்கிலாந்து அணி இப்போது இருக்கும் சூப்பர் ஃபார்மில், இதுபோன்ற குறைந்த ஸ்கோரை அடித்துவிட்டு, பந்துவீச்சில் கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பது அறிவீனம். இங்கிலாந்து அணிக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போல் நேற்று மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சாளர்கள் 15 வைடுகளை வீசியுள்ளார்கள். இன்னும் பந்துவீச்சில் ஒழுக்கமின்மை, கட்டுக்கோப்பு இ்ல்லாமை ஆகிய தொடர்வதால், தோல்வியும் தொடர்கிறது.

நல்ல தொடக்கம்

213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. பேர்ஸ்டோ, ரூட் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய இருவரும் பின்னர் சீராக ரன்களைச் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார்கள். பவர்ப்ளேயில் 62 ரன்களைச் சேர்த்தனர்.

நிதானமாக ஆடிய பேரஸ்டோ 45 ரன்கள் சேர்த்த நிலையில் ேகப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 95 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். அடுத்து வந்த வோக்ஸ், ரூட்டுடன் இணைந்தார். வழக்கமாக கடைசிவரிசையில் களமிறங்கும் வோக்ஸ், 3-வது வீரராக வந்து அருமையான பேட்டிங்க வெளிப்படுத்தினார்.

வோக்ஸ் அருமை

மோசமான பந்துகளை மட்டும் தேர்வு செய்து பவுண்டரிகள், அடித்து, ஒரு ரன், 2 ரன்கள் என மெதுவாக ரன்களைச் சேர்த்தார். ரூட் 50 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் நிதானமான ஆட்டத்தால் ஸ்கோர் உயர்ந்தது. இருவரையும் பிரிக்க மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் ஹோல்டர் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும்  நங்கூரம் போட்டதுபோல் பேட் செய்தார்கள்.

வோக்ஸ் 40 ரன்கள் சேர்த்த நிலையில், கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 104ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த ஸ்டோக்ஸ், ரூட்டுடன் சேர்ந்தார். சதத்தை நோக்கி முன்னேறிய ரூட் 93 பந்துகளில் வெற்றிகரமாக இந்த தொடரில்2-வது சதத்தை பதிவு செய்தார்.

ரூட் 11 பவுண்டரிகள் உள்பட 100 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 10 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 33.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.

மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் கேப்ரியல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவசரம் தேவையில்லை

முன்னதாக, மேற்கிந்தியத்தீவுகள் முதலில் பேட் செய்தது. ஆடுகளத்தின் ஈரப்பதம், காற்றில் நிலவிய ஈரப்பதம் ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பிளங்கெட், வோக்ஸ், வூட் ஆகியோர் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்களை வெளியேற்றினர். கெயில் 36, லூயிஸ் 2, ஹோப் 11 ரன்கள் என ஆட்டமிழக்க 55ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துதடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு ஹெட்மயர், பூரன் ஓரளவு நிதானமாக பேட் செய்தனர். ஹெட்மயர் 39 ரன்னில் ரூட் சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். அடுத்துவந்த கேப்டன் ஹோல்டர் 9 ரன்னில் ரூட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த ரஸல்(21), பிராத்வெய்ட்(14), காட்ெரல், ேகப்ரியல் டக்அவுட் என ஆட்டமிழக்க 44.4 ஓவர்களில் 212 ரன்களில் சுருண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி. 202 ரன்கள் வரை 6 விக்கெட்டுகளை இழந்திருந்த மேற்கிந்தியத்தீவுகள் அணி கடைசி 10 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பொறுப்பின்றி இழந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், வூட் தலா 3 விக்கெட்டுகளையும், ரூட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x