Published : 01 Jun 2019 09:01 PM
Last Updated : 01 Jun 2019 09:01 PM

நேற்று பாகிஸ்தான் இன்று இலங்கை: மொத்தம் 45 ஒவர்களே நீடித்த போட்டியில் நியூஸிலாந்து அபார வெற்றி

கார்டிஃபில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை 3வது போட்டியில் இலங்கை அணியை கிரீன் டாப் பிட்சில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து பெரிய வெற்றியைப் பெற்றது.

 

நேற்று பாகிஸ்தான் - மே.இ.தீவுகள் போட்டி 40 ஓவர்கள் கூட நீடிக்காத நிலையில் இன்று மொத்தப் போட்டியுமே 45.3 ஒவர்கள்தான் நீடித்தது.

 

கிரீன் டாப் பிட்சில் பந்துகள் குறைந்தது முதல் ஒரு மணிநேரமாவது வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்ற நிலவரத்தை அறிந்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் இலங்கை அணியை பேட் செய்ய அழைத்தார். மேட் ஹென்றி (3/29), லாக்கி பெர்கூசன் (3/22) ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இலங்கை அணி 29.2 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி 16.1 ஓவர்களில் 137/0 என்று 10 விக்கெட்டுகளில் அபார வெற்றி பெற்றது. மார்டின் கப்தில் 51 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்தும் கொலின் மன்ரோ 47 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாக வெற்றி நாயகர்களாக திரும்பினர்.

 

ஆட்ட நாயகனாக மேட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டார். இலங்கை அணியில் கேப்டன் கருண ரத்னே 84 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து தொடக்கத்தில் இறங்கி இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி வரை நின்ற 12வது வீரராகவும் இலங்கையின் 2வது வீரராகவும் திகழ்ந்தார். உலகக்கோப்பையில் ரிட்லி ஜேகப்ஸ் என்ற வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் 1999 உலகக்கோப்பையில் தொடக்கத்தில் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்ததையடுத்து இப்போது கருணரத்னே இதே சாதனையைப் புரிந்துள்ளார்.

 

10 டாப் அணிகள் மோதினால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் முந்தைய கோப்பைகளில் மீன்குஞ்சு அணிகள் இடம்பெற்று ஆட்டத்தின் சுவாரஸ்யத்தைக் குறைத்து விடுவதாக எல்லோரும் குற்றம்சாட்டி அணிகளைக் குறைத்தனர், ஆனால் இந்த 3 ஆட்டங்களும் எந்த ஒரு சுவையுமின்றி சுவாரஸ்யமும் இன்றி சொதப்பலாக முடிவடைந்துள்ளது ஐசிசியின் ஆசைகளை நிராசையாக்கி விடும் போல் தெரிகிறது.

 

ஆட்டத்தின் 2வது பந்திலேயே மேட் ஹென்றி ஒரு பந்தை வேகமாக உள்ளே செலுத்த தவறான ஷாட்டில் திரிமானி எல்.பி.ஆகி 4 ரன்களில் வெளியேறினார். ஸ்விங் நிலைமைகளில் குசல் பெரேரா, சனத் ஜெயசூரியா பாணியில் 4 பவுண்டரிகளை விளாசி 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த போது ஹென்றி பந்தை விளாச நினைத்து கொடியேற்ற கொலின் டி கிராண்ட் ஹோம் மிட் ஆனில் கேட்ச் எடுத்தார். இதற்கு அடுத்த பந்தே குசல் மெண்டிஸ் அருமையான ஒரு பந்துக்கு எட்ஜ் ஆகி மார்டின் கப்தில் கேட்சுக்கு டக் அவுட் ஆனார்.

பிறகு இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்கூசனையும் வில்லியம்சன் அறிமுகம் செய்ய அவர் வந்தவுடனேயே தாக்கம் செலுத்தி தனஞ்செய டிசில்வாவை 4 ரன்களுக்கு எல்.பி.யில் வீழ்த்தினார். ஜீவன் மெண்டிஸ் விக்கெட்டையும் 1 ரன்னில் வீழ்த்தினார். திசர பெரேரா (27), கருண ரத்னே இணைந்து 7வது விக்கெட்டுக்காக போராடி 52 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் திசர பெரேரா சாண்ட்னர் பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இலங்கை தன் கடைசி 4 விக்கெட்டுகளை 24 ரன்களுக்கு இழந்தது. லாக்கி பெர்கூசன் மலிங்காவை பவுல்டு செய்து இலங்கை இன்னிங்ஸை முடித்து வைத்தார்.

 

நியூஸிலாந்து இன்னிங்சில் இரண்டு எட்ஜ் எடுத்தது அவ்வளவுதான், அதன்பிறகு ஒன்றுமில்லை. மார்டின் கப்தில் மிகப்பெரிய சிக்சர் மூலம் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அரைசதம் எடுத்தார். கொலின் மன்ரோ 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார்.

 

பெரிதும் எதிர்பார்த்த மலிங்கா பந்துகளை மன்ரோ, கப்தில் வெளுத்துக் கட்டினார்கள், புல், ட்ரைவ் என்று ஆட மலிங்கா 5 ஒவர்களில் 46 ரன்கள் கொடுத்தார். லக்மல் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்தார். இலங்கை பந்து வீச்சையும் குறைகூறிப் பயனில்லை, 136 ரன்களை வைத்துக் கொண்டு என்ன செய்து விட முடியும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x