Last Updated : 15 Jun, 2019 10:21 AM

 

Published : 15 Jun 2019 10:21 AM
Last Updated : 15 Jun 2019 10:21 AM

பொறுப்புணர்வுடன் பேட் செய்யுங்கள்: மே.இ.தீவுகள் வீரர்களை கடிந்துகொண்ட கேப்டன் ஹோல்டர்

பொறுப்புணர்வுடன் பேட் செய்யுங்கள், போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்மானத்துடன் செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும் என்று மேற்கிந்தியத்தீவுகள் வீரர்களே கேப்டன் ஹோல்டர் கடிந்து கொண்டார்.

சவுத்தாம்டன் நகரில் நேற்று உலககக் கோப்பை லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை எதிர்த்து மோதியது இங்கிலாந்து அணி. இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 213 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 101 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அபாரமாக ஆடி உலகக் கோப்பைப் போட்டியில் 2-வது சதத்தை அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை தனது ஆவேசமான பந்துவீ்ச்சால் எளிதாக வீழ்த்திய நிலையில், அடுத்த போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்றது. 3-வது போட்டி தென் ஆப்பிரிக்காவுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையால் ரத்தானது.

இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் ஹோல்டர் நிருபர்களிடம் கூறுகையில், " நாங்கள் அதிகமாக ரன்கள் சேர்க்காதது தோல்விக்கு ஒரு காரணம். சீரான இடைவெளியில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.

 அதுமட்டுமல்லாமல் பேட்ஸ்மேன்களும் சிறிது பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்மானத்தோடு விளையாட வேண்டும். பொறுப்புணர்வு இல்லாமல், தேவையற்ற ஷாட்களை ஆடி ஆட்டமிழந்துவிடக்கூடாது.

இந்த ஆட்டத்தில் நல்ல பாட்னர்ஷிப் எதுவுமே இல்லை. ஒருவேளை நல்ல பாட்னர்ஷிப் அமைத்திருந்தால், இன்னும் கூடுதலாக ரன்களை சேர்த்திருக்க முடியும்.

அதிலும் குறிப்பாக 25 ஓவர்களுக்கு மேல் போட்டி எங்கள் கைகளைவிட்டுச் சென்றுவிட்டது. அதிகமான அக்கறையுடன் எங்கள் பேட்ஸ்மேன்கள் பேட்செய்து, பாட்னர்ஷிப்பை அமைத்திருந்தால், இதுபோன்ற தோல்வி ஏற்பட்டிருக்காது. எங்களின் தவறுகளை சரிசெய்ய வேண்டியது அவசியமாகும். தவறுகள் குறித்து தீவிரமாக ஆலோசிப்போம்.

பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் அனைத்து துறைகளிலும் நாங்கள் முன்னேற்றம் காணவேண்டியது அவசியமாகிறது. கடந்துவிட்ட போட்டியையும், எதிர்வரும் போட்டிகளையும் எங்கள் கைகளில் இல்லை. ஆனால், களத்தில் இறங்கிவிட்டால் எங்கள் கட்டுப்பாட்டில்தான் அனைத்தையும் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு ஹோல்டர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x