Published : 07 Jun 2019 04:46 PM
Last Updated : 07 Jun 2019 04:46 PM

மே.இ.தீவுகளின் சரமாரி பவுன்சர்களுக்கு எதிராக பேட் செய்வது ‘விளையாட்டல்ல’ - ஸ்டார்க் எச்சரிக்கை

மே.இ.தீவுகள் இந்த உலகக்கோப்பையில் எதிரணியினரின் மூக்கிற்கும், புருவத்திற்கும் குறிவைக்கும் சரமாரி பவுன்சர்களை வீசி அச்சுறுத்தி வருகின்றனர், அன்று பாகிஸ்தான் கொதிமணலில் வெறுங்கால் போல் ஆட நேற்று ஆஸ்திரேலியாவிடமும் சரமாரி பவுன்சர்களுகு விடையில்லை.

 

டேவிட் வார்னர், கவாஜா, கிளென் மேக்ஸ்வெல், ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் பவுன்சர் சராமாரி வீச்சுக்கு இரையாகினர். குறிப்பாக கவாஜாவை ஆட்டிப்படைத்தனர், ஒரு பந்து ஹெல்மெட் முன்பக்க கம்பியைத் தாக்கி அவரிடம் ‘என்ன சவுக்கியமா?’ என்று கேட்டு விட்டுச் சென்றது, நிச்சயம் இந்திய பவுலர்கள் ஷமி, பும்ரா கவாஜாவை ஷார்ட் பிட்சில் அச்சுறுத்துவார்கள், ஆகவே கவாஜா மீது ஆஸி நிர்வாகத்தின் கவனம் விழுந்துள்ளது.

 

ஆஸி. பேட்ஸ்மென்களை பொறி வைத்துப் பிடிப்பதும் ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங்கின் கவலையை அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க் கூறியிருப்பதாவது:

 

ஆம், சரமாரி பவுன்சர் வீச்சிலிருந்து கொஞ்சம் கற்றுக்கொள்ள இருக்கிறது. வேகமான ஆக்ரோஷமான பந்து வீச்சு குறித்து கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

 

ஆம், ஆஸ்திரேலிய வீரர்கள் தாங்கள் விரும்பியபடிக்கு ஆட முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் முடிவு பிரமாதம். மே.இ.தீவுகள் அணிக்கு உரிய பெருமையை அளிப்பதுதான் தகும் அவர்களின் பவுலர்கள் வேகமும் ஆக்ரோஷமும் மிகுந்தவர்களாக உள்ளனர்.

 

இது சிலவேளைகளில் விளையாடுவதற்குக் கடினமானது. அவர்களுக்கு எதிராக ஆடுவது விளையாட்டானதல்ல. குறிப்பாக எனக்கு பிடிக்காது, சரமாரி பவுன்சரை எதிர்கொள்ள விரும்பாதவன் நான்.

 

பேட்ஸ்மென்களின் மூக்கிற்கு வீசுவதுதான் பழைய மே.இ.தீவுகள் பவுலிங், இவர்களும் அந்தப் பழைய பாதைக்குத் திரும்பியுள்ளனர். இந்த உலகக்கோப்பையில் அந்த அணியின் பெரிய ஆயுதம் பவுன்சர் வீச்சுதான்.

 

இவ்வாறு கூறினார் மிட்செல் ஸ்டார்க்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x