

நேற்றைய ஆஸ்திரேலியா -மே.இ.தீவுகள் ஆட்டம் இந்த உலகக்கோப்பையின் மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டம் என்றால் மிகையாகாது, ஆனால் நடுவர் தீர்ப்புகள் என்ற ஒன்று ஒரு அணிக்கு எதிராகத் திரும்ப மே.இ.தீவுகளின் போராட்டம் வீணாக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் மே.இ.தீவுகள் வீரர் கார்லோஸ் பிராத்வெய்ட் தன் மன ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து விட்டார்:
நாங்கள் எங்கள் ரிவியூக்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டியதாகிறது. ஏனெனில் ஒவ்வொரு முறை எங்கள் கால்காப்பில் படும்போதெல்லாம் நடுவர் கைய உயர்த்தி அவுட் என்கிறார். ஆனால் அவர்கள் கால்காப்பில் பட்டால் கையைத் தொங்கப்போட்டு விடுகிறார்.
ஆகவே நாங்கள் ரிவியூக்களை பயன்படுத்தினால் அனைத்தும் ஸ்டம்புகளை மிஸ் செய்து விடுகிறது, நாங்கள் பேட்டிங் செய்யும் போது ரிவியூ செய்தால் அனைத்தும் ஸ்டம்புகளில் அடிக்கிறது... இது எப்படி? நான் தொழில்நுட்பம் அறிந்தவனல்ல. ஆனால் ஏன் இப்படி நடக்கிறது?
ஆனால் இந்தப் போட்டியில் மட்டுமல்ல சில ஆண்டுகளாகவே இத்தகைய கோளாறுகளைப் பார்த்து வருகிறேன்.
கெய்ல் அவுட் தீர்ப்பு கஷ்டம்தான், ஆனால் அதனால் தோற்றோம் என்று கூற முடியாது, ஏனெனில் அவர் ஆட்டமிழந்த பிறகு நாங்கள் 8 பேர் இருந்தோமே. கெய்ல் தீர்ப்பு தொடக்கத்தை கெடுத்தது, ஆனால் ஆட்டமே அதனால்தான் போனது என்று கூற முடியாது.
ஓய்வறையில் தீர்ப்புகள் வெறுப்பைக் கிளப்பின, ஆனால் வெறுப்பை உடனடியாகக் களைந்து அடுத்தப் பந்துக்கு தயாராகு என்பதுதான் மெசேஜ். நாங்கள் இதைத்தான் செய்தோம், ஆஸ்திரேலியா டாப்பாக முடிந்தது.
இவ்வாறு கூறினார் பிராத்வெய்ட்.