Published : 06 Jun 2019 04:07 PM
Last Updated : 06 Jun 2019 04:07 PM

மே.இ.தீவுகளின் பவுன்சர்களுக்கு ஆஸி.யிடமும் பதில் இல்லை: 38 ரன்களுக்கு 4 விக். இழந்து திணறல்

நாட்டிங்காமில் பாகிஸ்தான், இங்கிலாந்து போட்டி நடந்த அதேபிட்சில்தான் ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் உலகக்கோப்பைப் போட்டி நடைபெற்று வருகிறது. மே.இ.தீவுகளின் பவுன்சர்கள் உத்திக்கு ஆஸி பேட்ஸ்மென்களிடமும் பதில் இல்லை. 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா கடுமையாகத் திணறி வருகிறது.

 

டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் ஓவரை ஒஷேன் தாமஸ் தொடங்கிய போது 5 வைடுகளுடன் தொடங்கி 8 பந்துகளை முதல் ஒவரில் வீசினார். 10 ரன்கள் வந்தது. மோசமான தொடக்கம் என்று நினைத்த வேளையில் அடுத்த ஓவரில் ஒஷேன் தாமஸ் ஒரு பந்தை பிஞ்ச்சுக்கு உள்ளே கொண்டு வந்து வெளியே இழுக்க எட்ஜ் ஆகி ஷேய் ஹோப்பிடம் கேட்ச் ஆனது. பிஞ்ச் 6 ரன்களில் அவுட்.

 

கவாஜா வந்தவுடன் பவுண்டரி அடித்தார். ஆனால் அடுத்த பந்து கொடூரமான பவுன்சர் எம்பிக்குதித்தார் கவாஜா ஆனால் பந்து ஹெல்மெட்டைத் தாக்கியது.  டேவிட் வார்னர்தான் இந்த பவுன்சருக்கு பதிலடி கொடுப்பார் என்று பார்த்தால் அவருக்கு இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் காட்ரெல் ஒரு பவுன்சரை வீச அது வைடானது. ஆனால் அடுத்த பந்தை லெந்த்தில் கொஞ்சம் தள்ளி ஆஃப் திசையில் வீச பவுன்சரால் பின்னால் தள்ளப்பட்ட வார்னர் இதை ஸ்கொயர் ட்ரைவ் ஆட நினைத்தார். ஆனால் பவுன்ஸ் கூடுதலாக இருந்ததால் பேக்வர்ட் பாயிண்டில் ஹெட்மையரிடம் கேட்ச் ஆனது, வார்னர் 3 ரன்களில் வெளியேறினார்.

 

இன்னொரு முனையில் ஒஷேன் தாமஸ் தன் பவுன்சர் உத்தியை ஓய்வு ஒழிச்சலில்லாமல் தொடர கவாஜாவுக்கு சிரமம்தான் ஆனாலும் ஒரு பவுண்டரி விளாசினார்.

 

7வது ஓவர் ஆந்த்ரே ரஸல் வர அவர் 3 பந்தை புல் லெந்தில் வீசி அடுத்த 2 பந்தை பவுன்சராக வீசினார். இதில் சற்றே நிலைகுலைந்த கவாஜா, ரஸல் வீசிய அடுத்த பந்தை சற்றே ஒதுங்கிக் கொண்டு ட்ரைவ் ஆட நினைத்தார். எட்ஜ் ஆகி ஷேய் ஹோப் தன் இடது புறம் முழு டைவ் அடித்து அற்புதமான கேட்சை எடுக்க கவாஜா 13 ரன்களில் நடையைக் கட்டினார்.

 

அடுத்த ஓவரில் காட்ரெல் மிக அற்புதமான பவுன்சரில் கிளென் மேக்ஸ்வெலை டக் அவுட் ஆக்கினார். அதே ஷார்ட் பிட்ச் பவுன்சர், மேக்ஸ்வெல் புல் ஆடினார் ஆனால் கொடிதான் ஏற்ற முடிந்தது. காற்றில் எழும்ப ஷேய் ஹோப் எளிதான கேட்சை எடுத்தார். காட்ரெல் 4 ஓவர் 11 ரன் 2 விக்கெட், தாமஸ், ரஸல் தலா 1 விக்கெட். தற்போது ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்களுடனும் ஸ்டாய்னிச் 8 ரன்களுடனும் ஆடி வர மே.இ.தீவுகள் 11 ஒவர்கள் முடிவில் 54/4 என்று திணறி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x