Published : 06 Jun 2019 12:01 AM
Last Updated : 06 Jun 2019 12:01 AM

ரோஹித் சர்மாவின் 23வது ஒருநாள் சதம்; நேர்த்தியான பந்து வீச்சில் சாஹல், பும்ரா அபாரம்: தெ.ஆ.வை வீழ்த்தி உ.கோப்பை முதல் வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா

சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற உலகக்கோப்பை 2019-ன் தங்களது முதல் போட்டியிலேயே தென் ஆப்பிரிக்காவை ஒட்டுமொத்தமாக வீழ்த்திய இந்திய அணி தொழில்நேர்த்தியான பவுலிங், பேட்டிங், பீல்டிங்கில் அசத்தி வெற்றி பெற்றுள்ளது.

 

தென் ஆப்பிரிக்கா 2 தோல்விகளில் சரணடைந்த பிறகு எப்படியும் வீறு கொண்டு எழுவார்கள் என்று பார்த்தால் பேட்டிங்கில் சுத்தமாக இல்லை, பவுலிங்கில் இன்று கிறிஸ் மோரிஸ், ரபாடா இந்திய பேட்ஸ்மென்களை தங்கள் எகிறு மற்றும் லைன் லெந்த் பந்துகள் என்று கடும் அவதிக்குள்ளாக்கினர்.

 

டேல் ஸ்டெய்ன், லுங்கி இங்கிடி இருந்திருந்தால் ஒருவேளை இந்திய அணி இன்னும் கூட கொஞ்சம் சிரமப்பட்டிருக்கும், ஒருவேளை தென் ஆப்பிரிக்க அணி வெற்றியைக் கூட பெற்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆனால் பலவீனமான அணி போராடித் தோல்வி தழுவியது என்றே கூற வேண்டும்.  பிட்ச் புதிய பந்தில் நல்ல உதவி புரிந்தது, ஓவர் ஆக ஆக பேட்டிங் சுலபமானது, இது இரு அணிகளுக்கும் பொருந்தும்.

 

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த தென் ஆப்பிரிக்கா பும்ராவின் தொடக்க உஷ்ணம் தாங்க முடியாமல் ஆம்லா, டி காக்கை இழக்க இடையில் சாஹல் அதியற்புதமாக வீசி தென் ஆப்பிரிக்காவின் நடுவரிசை முதுகெலும்பை உடைக்க அந்த அணி கடைசி வரிசை பேட்ஸ்மென்கள் மூலம் 89/5 என்ற நிலையிலிருந்து 227 ரன்கள் வரை வந்தது.  யாரும் அரைசதம் அடிக்கவில்லை, கிறிஸ் மோரிஸ் மட்டும் அதிகபட்சமாக 34 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 42 ரன்கள் விளாசினார்.

 

தொடர்ந்து ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் சிலபல அதிர்ஷ்டங்களைக் கடந்து வந்த நிலையில் அவர் 144 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 122 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ 47.4 ஓவர்களில் 230/4 என்று அபார வெற்றி பெற்றது.  48வது ஓவரின் 3வது பந்தை பெலுக்வயோ வீச பாண்டியா பாயிண்ட் திசையில் பவுண்டரியுடன் வெற்றி ரன்களை எடுத்தார்.

 

எடுத்த எடுப்பில் கேட்சை விட்ட டுபிளெசிஸ்; வேதனையில் அலறிய ரபாடா; தவண் ஏமாற்றம்

 

எடுத்த எடுப்பிலேயே ஷிகர் தவணின் எட்ஜைப் பிடித்தார் ரபாடா, இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள்.தென் ஆப்பிரிக்க அணியின் கிறிஸ் மோரிஸ், ரபாடா நெருப்பு பொறிபறக்க வீசினர்.

 

 

ரோஹித் சர்மாவும் வெளியேறியிருப்பார், ஆனால் டுப்ளெசிஸ் ரபாடா பந்தில் கேட்சை விட்டார். 2வது ஓவரின் 4வது பந்து ஷார்ட் பிட்ச் எகிறு பந்தாக ரோஹித் சர்மா அதனை புல் ஆடினாரா அல்லது என்ன ஆடினார் என்று தெரியவில்லை பந்து கிளவ்வில் பட்டு இரண்டாவது ஸ்லிப்புக்கு முன்னால் காற்றில் உயரே எழும்ப  டுப்ளெசிஸ் 2வது ஸ்லிப்பில் தாமதமாக முயன்றார், கடைசியில் முன்னால் டைவ் அடித்து கேட்சை விட்டார். நல்ல வாய்ப்பு பறிபோன ரபாடா வாய்விட்டு கத்தியே விட்டார்.

 

அதன்பிறகு மோரிஸ் ஒரு பந்தை கொஞ்சம் எழுப்ப ரோஹித் சர்மா தடுத்தாடியது விளிம்பில் பட்டு பாயிண்டில் டுமினி தலைக்கு மேல் சென்று சற்றே பின்னால் விழுந்தது. ரோஹித் அந்த சமயத்தில் செம தடவல் தடவிக்கொண்டிருந்தார்.

 

இந்நிலையில் ரபாடாவின் ஒரு 150 கிமீ வேக யார்க்கர் ஷிகர் தவண் மட்டையின் கீழ்பக்கவாட்டுப் பகுதியை உடைத்தது, மட்டையின் சிதறல் மைதானத்தில் தெறித்தது. வேறு மட்டைதான் வேண்டியிருந்தது.

 

ஆனால் வேறு மட்டைக்கு வேலையே இல்லை ரபாடா ஒரு பந்தை தவணுக்குக் குறுக்காக கடினமான ஆங்கிளில் குத்தி வெளியே எடுக்க கொஞ்சம் உயரமாக வந்து மட்டையின் விளிம்பில் லேசாகப் பட்டு டிகாக்கிடம் கேட்ச் ஆனது, ரபாடாவுக்கு இந்த விக்கெட் தகுதியானதே.

 

விராட் கோலி இறங்கியவுடன் 146 கிமீ வேக பவுன்சரில் வரவேற்றார் ரபாடா. ரோஹித் சர்மாவுக்கு அதிர்ஷ்டம் கேட்ச் ரூபத்தில் வந்தது என்றால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் எல்.பி.டபிள்யூ ரிவியூதான். பெலுக்வயோ பந்தில் எல்.பி.ஆனார். நடுவர் நாட் அவுட் என்றார். தென் ஆப்பிரிக்கா ரிவியூ செய்தது. லெக் ஸ்டம்பை பந்து பெயர்க்கும் என்று ரீப்ளேயில் காட்டியது, ஆனால் நடுவர் தீர்ப்பு நாட் அவுட் என்பதால் ‘அம்பயர் கால்’ ஆனது. அம்பயர் கால் மீது ஐயம் இருப்பதனால்தானே 3வது நடுவருக்கு செல்கிறது. அங்கேயும் அம்பயர்ஸ் கால் என்றால் என்ன சொல்வது டி.ஆர்.எஸ். அபத்தத்தை. 2015 உலகக்கோப்பை காலிறுதியில் வங்கதேசத்துக்கு எதிராக ரோஹித் சர்மாவுக்கு கேட்ச் எடுத்த பந்து நோ-பால் கொடுக்கப்படாமல் போய் சர்ச்சையாக இந்த எல்.பி.யும் உண்மையில் சர்ச்சைதான். ஆனால் ரோஹித் பிழைத்தார். அப்போது ரோஹித்தின் ஸ்கோர் 22 ரன்கள்.

 

ரபாடா உச்சத்தில் இருக்கும் போதே விளாசிய ரோஹித், கோலி ஏமாற்றம்:

 

7 ஓவர்கள்ல் 14/1 என்று ரோஹித், கோலி கொஞ்சம் அதிகமாகத் தடவிக்கொண்டிருக்க ரபாடாவின் ஒரு ஓவர் ரோஹித்தை தட்டி எழுப்பியது. அதில்  ரபாடாவை 8வது ஓவரில் அடித்த ஹூக் ஷாட் சிக்ஸ் அற்புதம் அடுத்த பந்து எட்ஜ் 4 ரன்கள். கடைசி பந்தை இரண்டு கால்களையும் தூக்கிய படி அடித்த அரக்க கட்ஷாட் பவுண்டரி ஆனது அந்த ஓவரில் 15 ரன்கள்.

 

கோலிக்கு அவ்வப்போது இன்சைடு எட்ஜ் எடுத்துக் கொண்டிருந்தது.  விராட் கோலி 1 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து மெல்ல டச்சிற்கு வந்த போது, பெலுக்வயோ வீசிய அவுட் ஸ்விங்கர் கொஞ்சம் கூடுதலாக எழும்ப கோலி மட்டையை நீட்டி அடிக்க முயன்றார் எட்ஜ் ஆகி உயரே சென்ற பந்தை டி காக் மிக அருமையாகப் பிடித்தார், இதுவரை இந்த உலகக்கோப்பையின் 2வது சிறந்த கேட்ச் ஆகும் இது, முதல் கேட்ச் பென் ஸ்டோக்ஸுடையது.  கோலி வெளியேறினார். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்த பிறகு ரோஹித் சர்மா 70 பந்துகளில் அரைசதம் கண்டார். இதில் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும்.  ஷம்சியை ஒரு சிக்ஸர் அடித்தார் ரோஹித்.

 

 

இம்ரான் தாஹிர், ரபாடா, மோரிஸ் பந்து வீச்சை டைட்டாக வைத்திருந்ததால் இந்திய அணிக்கு ரன்கள் விரைவில் வரவில்லை.  ரோஹித் சர்மா நிறைய மிஸ்ஹிட்களை செய்தார் 4ம் நிலையில் ராகுல் திணறாமல் ஆடினார். 2 பவுண்டரிகளுடன் 42 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ரோஹித்துடன் 85 ரன்கள் 3வது விக்கெட் கூட்டணி அமைத்தார்.  அப்போது ரபாடா பந்து ஒன்றை மிட் ஆஃபில் நேராக கையில் கொடுத்து வெளியேறினார், அது என்ன ஷாட் என்று தெரியவில்லை.

 

தோனி, ரோஹித் சர்மா கூட்டணி அமைக்க தோனி மிக அருமையாக இடைவெளிகளில் பந்தைத் தட்டி விட்டு ரன் சக்கரத்தை உருட்டினார், ரோஹித் சர்மா128 பந்துகளில் 23வது சதம் கண்டார்.  தோனி தன் வழக்கமான நிதான ஆட்டத்தில் 46 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்திய பிறகு கிறிஸ் மோரிஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

கடைசி 10 ஓவர்களில் 57 ரன்கள் தேவை என்று இருந்த போது ரபாடா பந்தில் ரோஹித் சர்மா கொடுத்த மிக எளிதான கேட்சை டேவிட் மில்லர் கோட்டை விட்டார், ரோஹித் சர்மா அப்போது 107 ரன்களில் இருந்தார்.  அடுத்த பந்தே வெந்த் புண்ணில் வேலைப்பாய்ச்சுமாறு டிகாக்கிற்கு மேல் ஒரு பவுண்டரியை அடித்தார் ரோஹித், தோனியும் இவரும் சேர்ந்து 74 ரன்களைச் சேர்த்தனர். தோனி புல் ஆடுகிறேன் பேர்வழி என்று பெரிய கொடியாக ஏற்ற பந்தைப் பிடிக்கும் முயற்சியில் மோரிஸ் ரன்னர் முனை ஸ்டம்பை மிதித்தார். இந்த ஒரு தருணம் தென் ஆப்பிரிக்கா வீரர்களிடையே புன்னகைகளைத் தோற்றுவித்தது. ஆனால் இந்த உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் முகம் வெறுமையாகியுள்ளது.

 

தென் ஆப்பிரிக்கா வெளியேறிவிட்டது என்று அதற்குள் கூற முடியாவிட்டாலும் அடுத்த 6 ஆட்டங்களில் குறைந்தது 5-ஐ வென்றாக வேண்டும். அதுவும் நல்ல ரன்ரேட்டில் ஜெயிக்க வேண்டும், நடக்குமா?

 

ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x