

நாட்டிங்ஹாமில் நடந்து வரும் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் ஃபீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.
இங்கிலாந்தில் 12-வது உலகக்கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. நாட்டிங்ஹாமில் இன்று நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி. இரு அணிகளும் தலா ஒருபோட்டியில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் தோல்வியும், இங்கிலாந்து வெற்றியும் பெற்றுள்ளது.
ஆதலால், அடுத்தகட்ட நகர்த்தலுக்குத் தங்களை தயார்படுத்திக்கொள்ள இந்தப் போட்டியில் வெற்றி இரு அணிகளுக்கும் முக்கியம்.
இந்த ஆட்டம் உலக சாதனை நிகழ்த்தப்பட்ட பிட்ச்சில் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 481 ரன்கள் குவித்தது இந்த ஆடுகளத்தில்தான். அந்த போட்டியில் ஹேல்ஸ், பேர்ஸ்டோ சதம் அடித்தார்கள். 2016-ம் ஆண்டில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் இதே பிட்ச்தான் பயன்படுத்தப்பட்டது. இதே பிட்ச்சில்தான் 2016-ல் இங்கிலாந்து 444/3 விளாசியது நினைவிருக்கலாம்.
அன்று பாகிஸ்தானை மே.இ.தீவுகள் பவுன்ஸ் அவுட் செய்து 105 ரன்களுக்குச் சுருட்டிய பிட்ச்சிற்கு 2 பிட்ச்கள் தள்ளியிருக்கும் பிட்ச்சை இங்கிலாந்து, பாகிஸ்தான் போட்டிக்குப் பயன் படுத்தி ரசிகர்களைக் குஷிப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் ஃபீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளங்கட்டுக்கு பதிலாக, மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம், ஹாரிஸ் சோஹைல் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சோயிப் மாலிக், ஆஷிப் அலி இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமானது என்பதால், இரு கூடுதல் பேட்ஸ்மேன்களான சோயிப் மாலிக், ஆஷிப் அலி சேர்க்கப்பட்டுள்ளார்கள். இருவருமே நடுவரிசையில் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர்கள்.
ஆடுகளம் எப்படி?
ஆடுகளம் நன்றாக காய்ந்தும், தட்டையாகவும், புற்கள் இல்லாமல் உள்ளது. முதல் ஷெஸன் வரை பந்துவீச்சுக்கு ஓரளவுக்குச் சாதகமாகவும் அதன்பின், பந்துகள் பேட்ஸ்மேனை நோக்கி தாராளமாக எழும்பி வரும். பேட்ஸ்மேன்கள் நன்கு அடித்து ஆடுவதற்கு வசதியாக இருக்கும். தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்துவிடாமல் பேட் செய்தால், அதன்பின் ரன் சேர்ப்பது எளிதாகும். எந்த அளவு ஸ்கோர் செய்தாலும், சேஸிங் செய்யும் அணி அதை எளிதாக அடையும் வகையில் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும்.