நான் உடல்தகுதியுடன் தான் இருக்கிறேன்... எனக்கு எதிராக சதி: ஆப்கான் வீரர் மொகமது ஷசாத் பரபரப்புக் குற்றச்சாட்டு

நான் உடல்தகுதியுடன் தான் இருக்கிறேன்... எனக்கு எதிராக சதி: ஆப்கான் வீரர் மொகமது ஷசாத் பரபரப்புக் குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர்/தொடக்க வீரரும் தோனி போலவே ஆடுபவருமான மொகமது ஷசாத் உலகக்கோப்பையிலிருந்து காயம் காரணமாக விலகினார் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் அது உண்மையில்லை தனக்கு எதிராக ஆப்கன் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சதி செய்கின்றனர் என்ற பரபரப்புக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் ஷசாத்.

பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முழங்கால் பிரச்சினை இவருக்கு ஏற்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிராக ஆடினார். ஆனால் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக ஷசாத் காயம் காரணமாக உலகக்கோப்பையிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மொகமது ஷஸாத் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்:

நான் விளையாடத் தகுதியான உடல்நிலையில் இருக்கும் போது நான் அன் ஃபிட் என்று எப்படி தகுதியிழப்புச் செய்யப்பட்டேன் என்று தெரியவில்லை. வாரியத்தில் உள்ள சிலர் எனக்கு எதிராக சதிவேலையில் ஈடுபட்டுள்ளனர். மேனேஜர், டாக்டர், கேப்டன் ஆகியோருக்கு மட்டுமே எனக்கு பதில் வேறு ஒருவர் அறிவிக்கப்படுகிறார் என்பது தெரியும், பயிற்சியாளர் பில் சிம்மன்ஸுக்குக் கூட பிற்பாடுதான் தெரியும். என் இதயம் சுக்குநூறாகி விட்டது.

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பயிற்சியை முடித்து விட்டு செல்போனைப் பார்க்கிறேன் நான் உலகக்கோப்பையிலிருந்து விலகி விட்டேனாம்.  அணி வீரர்களுக்கும் இது தெரியவில்லை. அவர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். என்று பரபரப்பு புகார் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஆப்கான் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயலாளர் அசாதுல்லா கானிடம் பிடிஐ செய்தி நிறுவனம் கேட்ட போது, “ஷஸாத் கூறுவது முற்றிலும் தவறு. முறையான மருத்துவ அறிக்கை ஐசிசியிடம் அளிக்கப்பட்டுள்ளது. உடற்தகுதி இல்லாத ஒரு வீரரை அணியில் எப்படி தொடர அனுமதிக்க முடியும்? உலகக்கோப்பையில் இனி ஆட முடியவில்லையே என்ற ஆதங்கமும் ஏமாற்றமும் அவருக்கு உள்ளதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் உடற்தகுதி விவகாரத்தில் சமரசம் இல்லை” என்றார்.

மீண்டும் ஷஸாத்தை கேட்ட போது, “முழங்கால் பிரச்சினை இருந்தது, ஆனால் ஐஸ் வைத்து ஒருமாதிரி சரியாகிவிட்டது, நியூஸிலாந்து போட்டிக்குத் தயாராகவே இருந்தேன். ஆனால் திடீரென நான் இல்லை என்ற அதிர்ச்சி அறிவிப்பு வருகிறது.  ஒரு மூத்த வீரரை இப்படியா நடத்துவது? என்னை உடைத்து நொறுக்கிவிட்டார்கள். இதேதான் மற்ற மூத்த வீரர்களுக்கும் நடக்கும்” என்றார் ஷசாத்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in