

கடந்த 16-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டம் ஓல்டுடிரா போர்டு மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்களில் இந்திய அணி வென்று தொடர்ந்து 7-வது முறையாக உலகக்கோப்பையில் வென்ற அணி என்ற பெருமையை தக்கவைத்தது.
இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது, அந்நாட்டு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் வரவழைத்தது. இதனால், சமூக ஊடகங்களில் தங்கள் நாட்டு வீரர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர். சிலர் எல்லை மீறி தனிப்பட்ட முறையில் காட்டமாக வார்த்தைகளைப் பதிவு செய்தனர்.
இந்த போட்டி முடிந்து சில நாட்களுக்குப்பின் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தனது குழந்தையுடன் லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்றார். அப்போது ஒரு பாகிஸ்தானிய ரசிகர், சர்பிராஸ் அகமது செல்லும்போது, அவர் அருகே கேமிராவை வைத்துக்கொண்டு அவரை நிறுத்தி, "ஏன் கொழுத்த பன்றி" போன்று இருக்கிறார் என்று வரம்பு மீறி கேள்வி கேட்டு அந்த வீடியோவை பதிவிட்டார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பிய சர்பராஸ் தன் மனைவி கதறி அழுதக் காட்சியைக் கண்டு பதைபதைத்தார். காரணம் ‘பன்றி போல் கொழுத்திருக்கிறார்’ என்ற வீடியோவை சர்பராஸ் மனைவி பார்த்து விட்டு மனம் பொறுக்க முடியாமல் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து சர்பராஸ் அகமெட் அவரைத் தேற்றி ரசிகர்கள் கிரிக்கெட் மீது எவ்வளவு மோகமாக இருக்கிறார்கள் என்று விளக்கி சில வேளைகளில் கொஞ்சம் ஓவராகப் போய் விடுகின்றனர் என்று கூறிஉள்ளார்.
இது குறித்து சர்பராஸ் கூறும்போது, “நான் ஹோட்டலுக்குத் திரும்பிய போது என் மனைவி வீடியோவைப் பார்த்து கதறி அழுது கொண்டிருந்தாள். நான் அவரிடம் இது ஒரு வீடியோதான் இன்னும் சிலர் நம்மிடம் வந்து பல கருத்துக்களை கூறுவார்கள். இது சீரியஸானது அல்ல நாம் மனப்பலம் இழக்கக் கூடாது, வாழ்க்கையின் ஓர் அங்கம் நாம் ஒழுங்காக ஆடாத போது இவற்றையெல்லாம் அனுபவிக்க வேண்டும்” என்று கூறித் தேற்றினேன்.
இந்த வீடியோ தொடர்பாக எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றிக் கூறி கொள்கிறேன். ரசிகர்கள் ஆதரவு இருந்தால் வெற்றி பெற்று கொண்டேயிருக்கலாம், ரசிகர்கள் ஆதரவு இப்போதும் உள்ளது, அவர்கள் எங்களிடம் சிறந்தவற்றை பங்களியுங்கள் மற்றவற்றை கடவுளிடம் விட்டு விடுங்கள் என்று அறிவுரை கூறுகின்றனர், இது தெம்பாக உள்ளது” என்றார்.