உலகக்கோப்பையில் ஷாகிப் அல் ஹசன் செய்த புதிய சாதனை: வங்கதேசம் 7 விக். இழப்புக்கு 262 ரன்கள்

உலகக்கோப்பையில் ஷாகிப் அல் ஹசன் செய்த புதிய சாதனை: வங்கதேசம் 7 விக். இழப்புக்கு 262 ரன்கள்
Updated on
1 min read

சவுத்தாம்ப்டனில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் 31வது ஆட்டத்தில் டாஸ் வென்று பீல்டிங்கை ஆப்கான் அணி தேர்வு செய்ய முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதில் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 69 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 51 ரன்கள் என்று இன்னொரு அரைசதம் கண்டு 2019 உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் 476 ரன்கள் என்று 95.20 சராசரியுடன் முதலிடம் வகிக்கிறார்.

இவருக்கு இன்னொரு மகுடம் இன்று கிடைத்தது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 1000 ரன்கள்  மைல்கல்லை எட்டிய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் ஷாகிப் அல் ஹசன்.

மொத்தமாக 1000 உலகக்கோப்பை ரன்களை எடுத்த 19வது வீரர் ஆனார் ஷாகிப்.  இன்று 35 ரன்கள் எடுத்திருந்த போது ஷாகிப் இந்த மைல்கல்லை எட்டினார்.

இங்கிலாந்துக்கு எதிராக மிகப்பிரமாதமான 121 ரன்களையும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வெற்றியில் 124 ரன்களையும் எடுத்து பிரமாதமாக ஆடிவருகிறார் ஷாகிப் அல் ஹசன்.

முன்னதாக வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 16 ரன்களில் முஜீப் உர் ரஹ்மானிடம் வெளியேற, தமிம் இக்பால் 36 ரன்களில் மொகமது நபியின் முன்னால் வந்து ஆட வேண்டிய பந்துக்கு பின்னால் செல்ல பந்து சற்றே வேகமாக சறுக்கிக் கொண்டு வர பவுல்டு ஆனார். 82/2 என்ற நிலையில் சேர்ந்த முஷ்பிகுர் ரஹிம் (83), ஷாகிப் அல் ஹசனுடன் சேர்ந்து 61 ரன்களைச் சேர்த்த போது ஷாகிப் அல் ஹசன், முஜீப் உர் ரஹ்மான் பந்தில் எல்.பி.ஆனார். சவுமியா சர்க்காரையும் முஜீப் 3 ரன்களில் எல்.பி.செய்ய 32 ஓவர்களில் 151/4 என்று ஆனது வங்கதேசம்.

கடைசியில் முஷ்பிகுர் ரஹிம் 87 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 83 ரன்கள் எடுத்து தவ்லத் சத்ரான் பந்தை ஒதுங்கிக் கொண்டு கவருக்கு மேல் தூக்கும் முயற்சியில் நபியிடம் கேட்ச் ஆகி 6வது விக்கெட்டாக வெளியேறினார். ஆனால் முன்பாக மஹமுதுல்லா (27) உடன் சேர்ந்து 5வது விக்கெட்டுக்காக 56 ரன்களைச் சேர்த்தார் முஷ்பிகுர். பிறகு மொசாடெக் ஹுசைனுடன் (35) சேர்ந்து மேலும் 44 ரன்கள் கூட்டணி அமைத்தார் முஷ்பிகுர். இதனையடுத்து ஸ்கோர் 262 ரன்கள் வந்தது.

ஆப்கான் அணியில் லெக் ஸ்பின்னர் முஜீபுர் ரஹ்மான் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் குல்பதீன் நயீப் 2 விக்கெட்டுகளையும் சத்ரான், நபி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்த ரஷீத் கான் 10 ஓவர் 52 ரன்கள் என்று விக்கெட் கைப்பற்ற முடியாமல் போனார்.

வங்கதேச அணி இலக்கை விரட்டக் களமிறங்கி ரஹ்மத் ஷா, குல்பதின் நயிப் ஆகியோருடன் ஆடிவருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in