Last Updated : 16 Jun, 2019 01:33 PM

 

Published : 16 Jun 2019 01:33 PM
Last Updated : 16 Jun 2019 01:33 PM

தினேஷ் கார்த்திக்கா அல்லது விஜய் சங்கரா யாருக்கு வாய்ப்பு: இரு தகவல்களால் குழப்பம்

மான்செஸ்டர் நகரில் இன்னும் சில மணிநேரத்தில் தொடங்க இருக்கும் உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்படுவாரா என்ற குழப்பம் நீடிக்கிறது.

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க இருக்கிறது. ஓல்டுடிராபோர்டு ஆடுகளம் மெதுவான, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானஆடுகளமாகும். மேலும், அங்கு தட்பவெட்ப நிலையிலும் குளிர்ச்சியாக இருப்பதால் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும்.

இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் இந்திய அணியில் கூடுதலாக ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்படுவாரா அல்லது கூடுதல் பந்துவீச்சாளர் வேண்டும் என்ற அடிப்படையில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமாஎன்று  கேள்வி எழுந்தது.

இதுகுறித்து அணி வட்டராங்கள் கூறுகையில், " இந்திய அணியின் கேப்டன் கோலி எந்தவிதமான மாற்றம் குறித்தும் இன்னும் பேசவில்லை. ஆனால், நாளை மழையால் போட்டி 35 ஓவர்களுக்கும் கீழாக குறைக்கப்பட்டால், அணிக்கு தினேஷ் கார்த்திக் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஒருவேளை மழையால் பாதிக்கப்படாமல் 50 ஓவர்களாக நடத்தப்படும் என்றால், விஜய் சங்கருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும்

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானின் முக்கிய பேட்ஸ்மேன்களான பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், ஹரிஸ் சோஹைல், ஆஷிப் அலி ஆகியோர் சுழற்பந்துவீச்சை எளிதாக கையாண்டு விளையாடக் கூடியவர்கள். ஆதலால், குல்தீப், சாஹல் இருவரும் அணியில் இருக்க மாட்டார்கள். இதில் குல்தீப்புக்கு பதிலாக முகமது ஷமி அணியில் வர வாய்ப்பு உள்ளது. அதேபோல சாஹலுக்கு துணையாக இருக்கும் வகையில் ரவிந்திர ஜடேஜாவுக்கும் வாய்ப்பு இருக்கும்" எனத் தெரிவித்தனர்.

அதேபோல பாகிஸ்தான் அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடிக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் சதாப் கான் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

ஏனென்றால், வானிலை மட்டுமே குளிர்ச்சியாக இருக்கிறது, ஆனால், ஆடுகளத்தில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இரு அணிகளும் முக்கியத்துவம் அளிக்கலாம். அதாவது 3 வேகப்பந்துவீச்சாளர்கள் 2 சுழற்பந்துவீ்ச்சாளர்கள் என்ற ரீதியில் களமிறங்கலாம் எனத் தெரிகிறது.

இது தவிர்த்து, இணையதளம் ஒன்றின் நிருபர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் " எங்களுக்கு கிடைத்தவரை இந்திய அணியில் விஜய் சங்கர் அணிக்குள் வருவதற்கே அதிகமான வாய்ப்பு இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். இருவேறு தகவல்களால் விஜய் சங்கர், தினேஷ் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது புதிராக இருக்கிறது

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x