

இந்தியா, தென் ஆப்பிரிக்காவுடன் உலகக்கோப்பை போட்டியில் இன்று ஆடி வருகிறது, தென் ஆப்பிரிக்க அணி இந்தியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 41 ஓவர்களில் 164/7 என்று தடுமாறி வருகிறது.
டேல் ஸ்டெய்ன் ஐபிஎல் 2019-ல் ஆர்சிபி அணிக்காக ஆடும்போது மீண்ட காயத்திற்கே மீண்டும் திரும்ப நேரிட்டது. இதனையடுத்து உலகக்கோப்பையில் அவர் ஆடுவது சந்தேகமாக இருந்த நிலையில் அவர் தற்போது விலகவும் நேரிட்டுள்ளது.
இந்தப் போட்டியில் மட்டுமல்லாது உலகக்கோப்பை தொடரிலிருந்துமே டேல் ஸ்டெய்ன் காயம் காரணமாக விலகியுள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குறியான நிலையில் இந்தப் போட்டிக்கு முன்பாக டுப்ளெசிஸ் கூறியதாவது:
துரதிர்ஷ்டவசமாக அவரது காயம் ஐபிஎல் போட்டித் தொடரில் அவர் விளையாடிய அந்த 2 போட்டிகளினால் ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் அவரைத் தேர்வு செய்யாமலிருந்து அவர் அங்கு போகாமல் இருந்திருந்தால் இப்போது டேல் ஸ்டெய்ன் எங்கு இருந்திருப்பார் என்பது யாருக்குத் தெரியும்.
அணி நிர்வாகம் அவரை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு அவருக்குத் தேவை அன்பு மட்டுமே. இந்த உலகக்கோப்பையில் ஆட உடற்தகுதி பெற அவர் படாதபாடு பட்டார். தொடருக்கு முன்பாக நம்ப முடியாத அளவுக்கு நன்றாக வீசினார் ஸ்டெய்ன்.
இந்த உலகக்கோப்பையில் ஒரு தாக்கத்தை ஏற்பத்த வேண்டும் என்று அவர் முனைப்புடன் இருந்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்படி ஆகிவிட்டது.
இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்.