Published : 21 Jun 2019 10:15 AM
Last Updated : 21 Jun 2019 10:15 AM

கோப்பா அமெரிக்கா: விருந்தாளி அணி ஜப்பானுடன் ட்ரா செய்ய உருகுவேவுக்கு நடுவர் தீர்ப்புகள் உதவியா?

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான பிரசித்தி பெற்ற மிகவும் சவால்கள் நிறைந்த கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்றைய ஆட்டத்தில் விருந்தாளியாக அழைக்கப்பட்ட ஜப்பான் அணிக்கு எதிராக தோற்றிருக்க வேண்டிய உருகுவே அணி 2-2 என்று சமன் செய்ய சர்ச்சைக்குரிய வகையில் நடுவர் தீர்ப்பு உதவியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இந்தத் தொடரில் கத்தார் மற்றும் ஜப்பான் அணிகள் விருந்தாளியாக பங்கேற்க அழைக்கப்பட்டன. இதற்கு முன்பு சிலி அணிக்கு எதிராக ஜப்பான் 4-0  என்ற கோல் கணக்கில் தோற்றிருந்தது, உருகுவே அணி ஈக்வடார் அணியை 4-0 என்று வெற்றி பெற்றிருந்தது.

 

இந்நிலையில் ஜப்பானை எதிர்கொண்ட உருகுவே ஜப்பானின் அபார ஆட்டத்திற்கு முன் திக்கித் திணறியது. ஆட்டம் தொடக்கத்தில்  உருகுவே சில நெருக்கமான கோல் முயற்சிகளை மேற்கொண்டாலும் ஜப்பான் பிறகு தங்களது ஆட்டத்தை வேகப்படுத்தியது. 25வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கோஜி மியோஷி ஒரு எதிர்த்தாக்குதல் முயற்சி பலனளிக்க அதனை அபாரமாக கோலாக மாற்ற ஜப்பான் 1-0 என்று முன்னிலை வகித்தது.

 

7 நிமிடங்கள் சென்ற பிறகு உருகுவே வீரர் சுவாரேஸ் சமன் கோலை அடித்தார். ஆனால் இது பெனால்டி முறையில் அடிக்கப் பட்ட கோல், அதில்தான் முதல் சர்ச்சை எழுந்தது. விஏஆர் ரிவியூ செய்யப்பட்ட பிறகு நடுவர் கொடுத்த பெனால்டி கிக் முடிவுதான் சர்ச்சையைக் கிளப்பியது.

 

ஜப்பான் தடுப்பாட்ட வீரர் நவோமிச்சி யுயீடாவை உருகுவே வீரர் எடின்சன் கவானி உதைத்ததாக அப்பீல் செய்யப்பட்டது. அதாவது சண்டை எதுவும் இல்லை பந்தை தன் வசம் கொண்டு வரும் முயற்சியில் அவரை உதைத்ததாக அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் ஜப்பான் வீரர் நவோமிச்சிக்கு நடுவர் தண்டனை விதிக்க ஜப்பான் அணி அதிர்ச்சியடைந்தனர். உதைத்தது உருகுவே வீர்ராக இருக்கும் போது, ரிவியூவுக்குப் பிறகு உருகுவேவுக்கு பெனால்டி கிக் அளித்தது அது சமன் கோலாக மாறியதும் சர்ச்சையானது.

 

இது போதாதென்று இடைவேளைக்குப் பிறகு உருகுவே தடுப்பாட்ட வீரர் ஜோஸ் கிமினேஸ், ஜப்பான் வீரர் ஷோயா நகஜிமாவை ஃபவுல் செய்தார், இது நிச்சயம் ஜப்பானுக்கு பெனால்டி கிக் அளிக்கப்பட வேண்டியது, ஆனால் நடுவர் அளிக்கவில்லை. அடுத்தடுத்து பட்சபாத நடுவர் தீர்ப்புகளால் ஜப்பான் கடுப்பாகிப் போனது.

 

ஆனால் நடுவர் மீண்டும் ஒன்றும் செய்ய முடியாத ஒரு கோலை ஜப்பான் அடித்து 2-1 என்று முன்னிலை பெற்றது. இம்முறை உருகுவே கோல் கீப்பர் பெர்னாண்டோ முஸ்லெரா தன் இடத்திலிருந்து வெளியே வந்து  பந்தை தன் கையால் தட்டி விட அது நேராக ஜப்பான் வீரர் மியோஷிக்கு வாகாக வந்தது. கோல் வலையில் ஆளில்லாததைப் பயன்படுத்தி அவர் கோலுக்குள் திணிக்க ஜப்பான் 2-1 என்று முன்னிலை பெற்றது.

 

ஆனால் 7 நிமிடங்கள் கழித்து  15 முறை கோபா அமெரிக்கா சாம்பியன்களான உருகுவே 2வது கோலை அடித்து சமன் செய்தது. இம்முறை கிமினேஸ் கார்னர் ஷாட் ஒன்றை தன்னை தடுக்க நிறுத்தப்பட்டிருந்த வீரருக்குப் போக்குக் காட்டி அவரிடமிருந்து விடுபட்டு தலையால் முட்டி சமன் கோலை அடித்தார்.

 

இன்னொரு வெற்றி கோலை அடித்து காலிறுதிக்குத் தங்கள் இடத்தை உறுதி செய்ய உருகுவே கடும் முயற்சிகள் மேற்கொண்டன, ஆனால் சுவாரேஸ் ஷாட் ஒன்று கிராஸ்பாரில் பட்டு எகிறியது.

 

தற்போது பிரிவு சி-யில் உருகுவே 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. ஜப்பான் ஒரு புள்ளியுடன் 3-ம் இடத்தில் உள்ளது. 2ம் இடத்தில் உள்ள சிலி அணி வெள்ளியன்று ஈக்வடாருடன் மோதுகிறது. திங்களன்று சிலி-உருகுவே மோதும் போட்டி இந்தப் பிரிவை முடிவு செய்யும் ஆட்டமாக இருக்கும்.  ஆனால் இந்த ஆட்டம் முழுதும் இளம் ஜப்பான் வீரர்கள் காட்டிய வேகம் உருகுவேயைக் கொஞ்சம் ஆடிப்போகச் செய்து விட்டது, அந்த பெனால்டி கிக்கை உருகுவேவுகு மறுத்து ஜப்பானுக்கு இன்னொரு பெனால்டி கிக் வழங்கப்பட்டிருந்தால் ஜப்பான் வென்றிருக்கும். ஆனால் நடுவர் வேறொன்றை நினைத்து விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x