Published : 22 Jun 2019 05:45 PM
Last Updated : 22 Jun 2019 05:45 PM

தோனி, ஜாதவ்வை முடக்கிய ஆப்கான் பந்து வீச்சு : 64 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை

ஆப்கானுக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் இன்று இந்திய அணி 37 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் என்று மிகவும் அதிருப்தி தரும் நிலையில் ஆடி வருகிறது.

 

தோனி 26 பந்துகளில் 8 ரன்களுடனும், கேதார் ஜாதவ் 29 பந்துகளில் 16 ரன்களுடனும் 37வது ஓவர் முடிவில் ஆடி வருகின்றனர்.

 

முன்னதாக ரோஹித் சர்மா, வழக்கமாக லெக் ஸ்பின்னரிடம் ஆட்டமிழந்து 10 பந்துகளில் 1 ரன் என்று வெளியேறினார். இவருக்கு அடுத்ததாக கே.எல்.ராகுல் 53 பந்துகளில் 30 ரன்கள் என்று ஒரு மந்தமான இன்னிங்சை ஆடி மொகமது நபி பந்தை கோபாவேசமாக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்போய் ஆட்டமிழந்தார்.

 

விராட் கோலி மிக அனாயாசமாக, இவர் மட்டுமே வேறு ஒரு பவுலிங்கை ஆடுவது போல் ஆடி 63 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து அற்புதமாக ஆடி வந்த நிலையில் மொகமது நபி வீசிய பந்தை கட் ஆட முயன்று மேல் முனையில் பட்டு சர்க்கிளுக்குள் ஆஃப் சைடில் நின்றிருந்த பீல்டர் ரஹ்மத் ஷா கைக்குச் சென்றது. தொடர்ச்சியாக 3 அரைசதங்களை அடித்தார் விராட் கோலி.

 

ஆனால் அதன் பிறகு ஆட்டம் படு மந்த நிலையில் ஆடப்பட்டு வருகிறது. கடைசியாக 26வது ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி, ரஷீத் கானை ஃபைன் லெக் திசையில் பவுண்டரி அடித்ததோடு சரி.

 

அதன் பிறகு தோனி, கேதார் ஜாதவ்வை ஆப்கான் பவுலர்கள் முடக்கிவிட்டனர். சுமார் 64 பந்துகளுக்கு பவுண்டரி வரவில்லை, அதாவது 26வது ஓவரின் கடைசிப் பந்துக்குப் பிறகு 27வது ஓவரில் கோலி ஆட்டமிழந்தார். அப்போது வறண்ட பவுண்டரி 36.5 வது ஓவரில்தான் வந்தது, அதுவும் கேதார் ஜாதவ் அடித்த முதல் பவுண்டரி.

 

தோனி அதன் பிறகுதான் தன் முதல் பவுண்டரியை அடித்தார். விராட் கோலி ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 30.3 ஓவர்களில் 135/3 என்று இருந்தது, தற்போது 39 ஒவர்கள் முடிவில் 166/4 என்று உள்ளது.

 

இது பேட்டிங் பிட்ச் என்று கோலி கூறித்தான் முதலில் பேட்டிங் எடுத்தார். ஆனால் பேட்டிங் பிட்சில் பேட்டிங் பவர் ஹவுஸ், சூப்பர்ஸ்டார் அணி 64 பந்துகளில் பவுண்டரி அடிக்க முடியாமல் திணறுகிறது என்றால் அது ஆப்கான் பந்து வீச்சினால் மட்டுமல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x