

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய ரசிகர்களின் ஒருபகுதியினர் அநாகரீகமாக முன்னாள் ஆஸி.கேப்டன் ஸ்மித்தை கேலி செய்தனர். இது ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து உலகக்கோப்பையிலும் தொடர்ந்தது.
இந்நிலையில் நேற்று ஆட்டத்தின் போது ரசிகர்களின் இந்தப் போக்கு விராட் கோலியை கடும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. ரசிகர்களை நோக்கி அவர் செய்கை செய்து நிறுத்துங்கள், கேலி வேண்டாம், ஸ்மித்துக்கு உற்சாகமளியுங்கள் என்ற விதத்தில் செய்கை செய்து தன் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தினார் விராட் கோலி.
இது ஆஸ்திரேலிய வீரர்களிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய ஊடகங்களும் விராட் கோலிக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் விராட் கோலியே இது பற்றி கூறும்போது, “நான் ஸ்மித்துக்காக வருந்துகிறேன். எங்களுக்கிடையே நிறைய நடந்துள்ளது, வாதங்கள், மோதல்கள் இருந்துள்ளன, ஆனால் இப்போது அவர் மீண்டு வந்துள்ளார். மீண்டும் வந்துள்ளார்.
ஐபில் கிரிக்கெட்டில் கூட பார்த்தேன், அவர் விளையாடுவதில் கவனம் செலுத்தினார், ஆனால் சில சம்பவங்கள் நடந்தன. ஓவலில் இந்தப் போட்டியிலும் இது தொடர்ந்தது. நான் அவருக்காக உண்மையில் வருந்துகிறேன்.
ரசிகர்களின் நடத்தைக்காக நான் அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டேன்” என்றார் விராட் கோலி.