Published : 04 Jun 2019 04:44 PM
Last Updated : 04 Jun 2019 04:44 PM

தோற்கிறோம் என்றால் அது இப்போதாகவே இருக்கட்டும்... ஜூலை முதல் வாரத்திலிருந்து வேண்டாம்: தெ.ஆ. பயிற்சியாளர் கிப்சன்

இங்கிலாந்து, வங்கதேச அணிகளுடன் தோல்வி கண்ட தென் ஆப்பிரிக்கா நாளை (வியாழன்) சவுதாம்ப்டனில் வலுவான இந்திய அணியை எதிர்கொள்கிறது, பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்தாலும் அடுத்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வென்று தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய அணியை வென்ற ஒரு மனநிலையில் இந்திய அணி களமிறங்குகிறது.

 

முதல் 2 போட்டிகளிலுமே டாஸ் வென்ற டுப்ளெசிஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்யாமல் எதிரணியை முதலில் களமிறக்கினார். இந்த முடிவும் ஒருவேளை அணியின் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கலாம், ஆனால் பவுலிங், பீல்டிங், கேட்சிங் எப்போது ஆடினாலும் அடிப்படையான விஷயம் இதில் தெ.ஆ. தரமாக இல்லை என்பதே கசப்பான உண்மை.

 

தென் ஆப்பிரிக்காவுக்கு என்னதான் ஆச்சு? இதோ அந்த அணியின் பயிற்சியாளர் ஒட்டைஸ் கிப்சன்:

 

அமைதியாக இருப்பதில் அர்த்தமில்லை. நாம் எழுந்து நின்று எங்கு தவறு நிகழ்கிறது என்பதை ஆராய வேண்டும்.  பந்து வீச்சில் இன்னும் சிறப்பானவற்றை செய்ய முடியும் பேட்டிங்கிலும் அனைவரும் சேர்ந்து சிறப்பாக ஆட வேண்டியதுள்ளது.

 

முதலில் ஒரு விஷயம், உடற்தகுதி உள்ள வீரர்களைக் கொண்டுதான் ஆட முடியும். டேல் ஸ்டெய்ன் ஒவ்வொரு நாளும் ஆடும் நிலைக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறார், அவர் 85% ஃபிட், பவுலிங் செய்கிறார், ஆனால் 85% உடற்தகுதி உடைய ஒருவரை அணியில் சேர்ப்பது, அதுவும் இந்தியாவுக்கு எதிராகச் சேர்ப்பது சரியாக இருக்குமா என்பது தெரியவில்லை.

 

ஒருநாள் கிரிக்கெட்டில் டேல் ஸ்டெய்னின் சாதனை இன்னமும் நன்றாகவே உள்ளன, உடற்தகுதி முழுமை பெற்ற டேல் ஸ்டெய்னை எந்த அணியும் இழக்க விரும்பாது, ஏனெனில் உடற்தகுதியுடன் கூடிய டேல் ஸ்டெய்ன் எதிரணியினரை கடும் சேதங்களுக்குள்ளாக்குவார்.

 

எனக்கு கோபம் ஒன்றுமில்லை. நாம் விளையாடுவது கிரிக்கெட், இதில் உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று கூறப்படுவதற்காகவே நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று அர்த்தமல்ல.

 

தொடரின் ஆரம்பத்தில் தோற்பது நல்லது. ஏனெனில் முன்னேற்றத்துக்கு வாய்ப்புள்ளது, ஆனால் தொடரின் கடைசி வாரங்களில் தோல்வியடைந்தால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.  இப்போது 2 போட்டிகளில் தோல்வி காயமேற்படுத்துவதாக உள்ளது. ஆனால் நன்றாக ஆட இன்னும் வாய்ப்பு உள்ளது.

 

ஆகவே தோற்பது என்றால் இப்போதே தோல்வியடைவது நல்லது ஜூலை முதல் வாரத்தில் தோல்வியடைவதுதான் அணியை வீட்டுக்கு அனுப்பி விடும்.

 

இவ்வாறு கூறினார் கிப்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x